சென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.
அஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள்? அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது?
எந்த சென்னையின் தினம்?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடுகிறோம். சென்னைக்கு இப்போது வயது 375 என்று நம்புகிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு? 1639-ல் சந்திரகிரி, வந்தவாசி ஆகிய பகுதிகளை ஆண்ட தாமர்லா சென்னப்ப நாயகடு என்ற மன்னரிடமிருந்து கடற்கரையோர நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே வாங்கினார். சென்னை என்ற வார்த்தை அந்த விற்பனைக் கிரயப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு.
அதற்கு முன் இங்கே கடல் இல்லையா, கடற்கரை இல்லையா, ஊர் இல்லையா, மக்கள் இல்லையா? எல்லாம் இருந்தது, இருந்தார்கள். பிரான்ஸிஸ் டே இடம் வாங்கிய பகுதியே ஒரு கடலோடிகள் குப்பம்தான். அந்த வரலாறு இன்றைக்கு இருட்டு சூழ்ந்த வரலாறு.
இன்றைக்குக் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - 12-ம் நூற்றாண்டின் - ‘கலிங்கத்துப் பரணி’யிலேயே மயிலையைக் குறிப்பிடும்போது, ‘பண்டை மயிலை’ என்று குறிப்பிடப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளரும் கடலோடியு மான நரசய்யா. இதை உறுதிப்படுத்துகிறார் ஆய்வாளரான முத்தையா. “இதுவரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி இன்றைய சென்னையின் பழமையான கடற்கரையூர் என்று மயிலாப்பூரையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் முத்தையா. அத்தனை தொன்மையானது மயிலை எனும் மயிலாப்பூர்.
கபாலியும் கபாலீஸ்வரரும்
இன்றைய சென்னையின் தொன்மையான அடையாளங் களில் ஒன்று கபாலீஸ்வரர் திருக்கோயில். ஆனால், கபாலீஸ்வரரைக் காலங்காலமாகத் தங்கள் குலதெய்வமாகக் கும்பிட்ட கபாலிகள் சென்னைக்கு வேண்டாதவர்கள் ஆகிப் போனார்கள்.
“கபாலீஸ்வரர்னா கடவுள். ஆனா, கபாலின்னா திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன். ஒரு காலகட்டம் வரைக்கும் எல்லாப் பத்திரிகைகள்லேயும் தமாசுன்னு வந்தா குத்தவாளிக்குப் பேர் கபாலின்னுதான் இருக்கும். கடலோடிகளோட கடவுள் கபாலீஸ்வரர். அதனாலதான் அப்போ குப்பத்துல பத்து பேருக்காவது, கபாலிங்கிற பேர் இருக்கும். சென்னைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்பட்டார். கபாலிங்க தேவையில்லாதவங்களா ஆயிட்டாங்க.
நமக்கு நல்லாத் தெரிஞ்ச நவீன சென்னையோட வரலாற்று லேந்தே எடுத்துக்குவோம். போர்ச்சுகீசியர் காலத்துல கடலோடிங்க தொரத்தப்பட்டாங்க. பிரிட்டிஷ்காரங்க காலத்துல தொரத்தப்பட்டாங்க. சுதந்திர இந்தியாவுலேயும் தொரத்தப்பட்டாங்க, தொரத்தப்படறாங்க. எம்ஜிஆர் ஆட்சியில மெரினாவை அழகாக்குறோம்னு சொல்லி துப்பாக்கிச் சூடே நடந்துச்சு. உயிர்கள் போச்சு. ஒரு சமூகம் வளரும்போது எப்படித் தன்னோட பூர்வகுடிகளை ஒடுக்கி, மிதிச்சு, ஒதுக்கும்கிறதுக்கு உதாரணம் கபாலி” என்கிறார் கடலோடியும் எழுத்தாளருமான ஜோ டி குரூஸ்.
அடிமை வியாபாரம்
ஒருகாலத்தில், அடிமை வியாபாரச் சந்தையில் சென்னைக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. “பூம்புகார் காலியான பிற்பாடு பொயப்பு தேடி வந்தவங்களுக்கு எடம் கொடுத்த ஊரு இதுன்னு சொல்லுவாங்க. வெளியாள் ஆதிக்கத்துக்கு அப்புறம் பஞ்ச காலத்துல அடிமைங்க யாவாரம் இங்கே டாப்புல இருந்திருக்கு. 1646-ல ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சாம். சோறு இல்லாம சாவுறதைவிட, அடிமையா போயி பொயச்சுக்கலாம்னு எத்தினியோ பேரு போயிக்கிறாங்க. அப்போலாம் எவ்ளோ பேருக்கு ஒத்தாசை பண்ணிக்கிறாங்க இங்கக்குற கடக்கர ஜனங்கோ” என்கிறார் பெரியவர் வீரமுத்து.
தன்னுடைய ‘மதராசபட்டினம்’ நூலில் ஓர் இடத்தில் இதுகுறித்துப் பதிவுசெய்திருக்கிறார் நரசய்யா. சென்னை அடிமைகளின் சந்தையாக இருந்ததுடன், கொஞ்சம் பிற்காலத்தில், இங்கிருந்து வெளியே கொண்டுசெல்ல வசதியான இடமாகவும் இருந்திருக்கிறது. அடிமைகளுக்கான சுங்க வரி ஏனைய துறைமுகங்களைவிட இங்கு குறைவான தாக இருந்திருக்கிறது. 1711-ல் ஒரு அடிமையைப் பதிவதற்கு 6 ஷில்லிங், 9 பென்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியெல்லாம் வந்தவர்களுக்கு உதவியவர்கள் இன்றைக்கு நகரின் விளிம்பில் தொங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.
புறக்கணிப்பின் அரசியல்
ஒரு சமூகம் புறக்கணிக்கப்படும்போது, அதன் சகல கட்டுமானங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. “மீனுங்க பெருக்கத்துக்கு அலையாத்திக் காடு, நல்ல ஆத்து தண்ணீலாம் அவசியம். காட்ட அயிச்சாச்சு. கயிவெ வேற கடல்ல கொண்டாந்து வுட்டா இன்னாவும்? போதாத்துக்கு வர்சையா ஆலைங்க, அன மின் நிலையம், அணு மின் நிலையம்... கடலையே உறிஞ்சிக்குறா மாரி தண்ணீயை எடுக்குறதுல சின்ன மீனுங்க, மீனு முட்டைங்க எல்லாம் பூட்து. பதிலுக்குக் கொதிக்க கொதிக்க தண்ணிய வெளியே வுட்றாங்க. வெளியேருக்குற மீனுங்களும் செத்து ஒழியுது. கரக்கடலுல தொயிலே கெடயாது. பூட்ச்சு. எல்லாம் பூட்ச்சு. ஆனா, நம்ம கொரலு எடுபடல.”
சென்னையின் இரு துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் துறைமுகம் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தின் உருவாக்கத்தில், கடலோடிகள் சமூகத்தின் வாழிடங்களின் பாதுகாப்புக்குக் கவனம் அளிக்கப்படவில்லை. கடலில் ஓரிடத்தில் வண்டி வண்டியாய்க் கற்களையும் மண்ணையும் கொட்டி நீரோட்டத்தின் மீது கை வைத்ததன் விளைவு, வேறோர் இடத்தில் கடல் அரிப்பு பூர்வக்குடிகளைத் துரத்தி அடிக்கிறது.
தமிழகத்தின் மாபெரும் சந்தையான சென்னையின் மக்கள் திரளுக்குக் கடல் உணவு தேவைப்படுகிறது. ஆனால், கடலோடிகளுக்கான தொழில் மையமோ திண்டாடுகிறது. சென்னையின் மற்றொரு துறைமுகமான காசிமேடு துறைமுகம் இட நெருக்கடியால் திணறுகிறது. “சென்னையில அங்கியும் இங்கியும் நூறுக்கும் மேல மீனு விக்கிற எடம் வந்துட்சு. ஆனா, காசிமேடு மட்டும் அப்டியேதாங்கீது. ஐந்நூறு படகு நிறுத்துற எட்துல ஆயிரத்து நாநூறு நிக்கிது. இன்னா செய்ய?”
நெரிசல் மிக்க ஜன சந்தடியில் உடன் பேசிக்கொண்டே வருகிறார்கள். சென்னையின் கதை சென்னையின் கதையாக மட்டும் இல்லை. வளர்ச்சியின் பெயரால் நகரமாக உருப்பெறும் ஒவ்வொரு கடற்கரையூரின் தொடர்கதையுமாக நீள்கிறது!
(அலைகள் தழுவும்…)
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago