இமானுவேல் சேகரன்: சம உரிமைக்கான தனித்த ஆளுமை

By கோ.ரகுபதி

சுதந்​திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இமானுவேல் சம உரிமை​களுக்கான இயக்கத்தின் ஆளுமை​களில் தனித்து​வ​மானவர். சாதியக் கட்டமைப்பால் மறுக்​கப்பட்ட உரிமை​களைப் பெறுவதற்கான ஒடுக்​கப்​பட்​டோரின் இயக்கம், சென்னை மாகாணத்தில் வலுப்​பெற்ற சூழலில் பரமக்​குடி, செல்லூரில் காங்கிரஸ் செயல்​பாட்​டாளரான வாத்தியார் வேதநாயகம் - ஞானசெளந்தரி தம்பதி​யருக்கு மகனாக 1924 அக்டோபர் 9 அன்று இமானுவேல் பிறந்​தார்.

இவ்வுலகின் அரிச்​சுவடிகளை அவர் அறியத் தொடங்​கிய​போது, சமூகத்தில் கொந்தளிப்பு சூழ்ந்​திருந்தது. ராமநாத​புரம் மாவட்ட ஆதிக்கச் சாதியினர், இடுப்​புக்கு மேலும், முழங்​காலுக்குக் கீழும் உடுப்பும், செருப்பும் அணியக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது, குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது, மிராசிகளின் ஆடு, மாடுகளை மேய்க்க வேண்டும், கூலிகளாகப் பணியாற்ற வேண்டும் என்பது போன்ற சாதி ஆதிக்கக் கட்டளை​களைப் பின்பற்றக் கூறி ஒடுக்​கப்​பட்டோரை அழுத்​தினர்​.

இவற்றை மறுத்து, அம்மாவட்​டத்தின் ஆலபுரத்தில் 1904இலும், கல்லலில் 1919இலும் ஒடுக்​கப்​பட்டோர் நடத்திய போராட்​டத்தின் கொதிநிலை 1930களில் ஜான், பொன்னையா தலைமையில் உச்சநிலைக்குச் சென்றது. இதை நசுக்க, சுமார் 31 கிராமங்​களைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினர் 148 பேரின் தலைமையில் நடத்தப்பட்ட வன்முறையில் ஒடுக்​கப்​பட்​டோரின் வீடுகளும் பள்ளிக்​கூடங்​களும் கொளுத்​தப்​பட்டன, சொத்துக்கள் கொள்ளை​யடிக்​கப்​பட்டன, பாலியல் வன்கொடுமையும் கொலைகளும் அரங்கேற்றப்பட்டன.

இவ்வன்​ முறையை நிறுத்த முற்பட்ட காந்தி 1934இல் ஆதிக்கச் சாதியினர்​களிடம் நேரடியாக நெடுநேரம் பேசினார். பலன் இல்லை. இச்சா​தியச் சிக்கல்களை நன்கறிந்த அம்பேத்கர், சாதியைப் பற்றி விளக்கு​வதற்காக அவற்றைப் பற்றி எழுதினார். இச்சூழலில் பிறந்து வளர்ந்த இமானுவேல், ஆதிக்கச் சாதியினரின் வன்முறையையும் ஒடுக்​கப்​பட்​டோரின் போராட்​டத்​தை​யும்தானே முதலில் கற்றிருக்க முடியும்!

அம்பேத்​கருடன் உரையாடல்: தொடக்கக் கல்வியைப் பரமக்குடி லுத்திரன் திருச்​சபைப் பள்ளி​யிலும் ராமநாத​புரம் சுவார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி​யிலும் பயின்று, கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இமானுவேல், காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ‘வெள்​ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றுச் சிறைத் தண்டனையையும் அனுபவித்​தார். அவருக்கு நேதாஜியின் கொள்கையில் ஈடுபாடு இருந்​த​தாகவும் அவரது படையில் சேர விரும்​பிய​தாக​வும், அது நிறைவேறாததால் இந்திய ராணுவத்தில் 1943இல் சேர்ந்தார் என்றும் கூறப்​படு​கிறது.

தேசத்தின் விடுதலை​யானது சாதி ஆதிக்​கத்​திலிருந்தும் விடுவிக்​குமென அவர் நம்பி​யிருக்​கலாம். ஆனாலும் இக்காலத்தில் பூ வைசிய இந்திரகுல வேளாளர் சங்கத்தை நிறுவிய பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து, சமூக விடுதலைக்கான பணியிலும் ஈடுபட்​டார். அச்சங்கம் 1936இல் அம்பேத்கரை அழைத்தபோது அவரால் வர இயலவில்லை.

தேக்கம்​பட்டி பாலசுந்​தரராசு முன்னெடுத்த முயற்​சியால் 1946 டிசம்பர் 26 அன்று, மதுரை விக்டோரியா அரங்கில் அம்பேத்கர் உரையாற்றினார். இவ்வுரையை ராணுவ வீரரான மேலக்கால் வீரபத்​திரன் தமிழில் மொழிபெயர்த்துப் பேசினார். இந்நிகழ்வில் அம்பேத்​கரைச் சந்தித்த இமானுவேல், ஒடுக்​கப்​பட்டோர் மீது ஆதிக்கச் சாதியினர் ஏவுகின்ற தீண்டா​மை​யையும் வன்முறை​களையும் எடுத்​துரைத்​தார்.

இரட்டைக் குவளை முறை ஒழிப்பு: ஆதிக்கச் சாதியினர் 1952 தேர்தலின்போது வன்முறையை ஏவிய சூழலில், ஒடுக்​கப்​பட்​டோரிடம் சமத்து​வத்தை இவர் வலியுறுத்​தினார். ராணுவப் பணியில் இருந்தபோது ஒடுக்​கப்​பட்டோர் மீது ஆதிக்கச் சாதியினர் வன்முறையை ஏவுவதைக் குறித்து அவருக்குத் தந்தி​களும் கடிதங்​களும் அனுப்​பப்​பட்​ட​தால், 1952இன் இறுதியில் தேசத்தைப் பாதுகாக்கும் பணியைத் துறந்​து​விட்டு, சமூக சம உரிமைக்கான போராட்​டத்தைக் கைக்கொண்​டார்.

தேவேந்திர குலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பை ஏற்றுக்​கொண்ட இமானுவேல், கிராமம் கிராம​மாகச் சென்று சமத்துவ, தன்மான விழிப்பு​ணர்வை ஏற்படுத்​தினார். சுயசா​தியைக் கடந்து, 1953இல் ஒடுக்​கப்​பட்டோர் இயக்கத்தின் முதுகுளத்தூர் வட்டாரத் தலைவரானார். இவருடைய போராட்​டத்தால் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்​தோரின் அடாவடித்தனம் முடிவுக்கு வந்தது. இதனால், இமானுவேலை வணிகர்கள் ஆதரித்​தனர்.

இத்தகைய ஆதரவு​களால் 1953 ஏப்ரல் 14இல் ராமநாத​புரத்தில் ஒடுக்​கப்​பட்டோர் எழுச்சி மாநாட்டை நடத்தினார். பெருமாள் பீட்டருடன் இணைந்து கல்வி, வேலைவாய்ப்பு​களைப் பெற்றுத்​தரு​வதில் முனைப்புடன் செயல்​பட்​டார். சாதி ஒழிப்பு, விதவை மறுமணம் எனச் சமூகச் சீர்திருத்தப் பணிகளையும் முன்னெடுத்​தார். கிராமப்பு​றங்​களில் நிகழ்த்​தப்​படும் பொதுப் பண்பாட்டு விழாக்​களில் அனைத்துச் சாதியினரும் அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்​தினார்.

இதில் சமத்து​வத்தை அடையும்வரை தனித்தே அந்நிகழ்வு​களைக் கொண்டாட ஒடுக்​கப்​பட்​டோரிடம் அறிவுறுத்​தினார். அவர் முன்னெடுத்த முக்கியப் போராட்​டங்​களில் ஒன்று தீண்டாமை ஒழிப்பு. இதில் இமானுவேலுவின் ராணுவ முகமே வெளிப்​பட்டது. அவர் தீவிரமான போராட்ட வடிவங்​களைக் கைக்கொண்​டார்.

அருப்​புக்​கோட்​டையில் 1954 மே 26 அன்று இரட்டைக் குவளை எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். இரட்டைக் குவளை​களைப் பயன்படுத்திய தேநீர்க் கடைகளுக்குச் சென்று அக்கு​வளைகளை நொறுக்​கினார். இவருடைய காலத்தில் ஒடுக்​கப்​பட்​டோரின் உரிமை​களுக்​காகப் போராடிய பிற தலைவர்​களிட​மிருந்து இவரைத் தனித்துக் காட்டு​வதும் இப்போராட்ட வடிவமே.

வீர மரணம்: காங்கிரஸ் கட்சியில் இமானுவேலை இணைக்க கக்கன் எடுத்த முயற்​சி​யால், காமராஜர் முன்னிலையில் 1954இல் அக்கட்​சியில் சேர்ந்​தார். 1956 அக்டோபர் 2 அன்று தேவேந்​திரர்​களின் அரசியல் மாநாட்டை முதுகுளத்​தூரில் நடத்தி​யதுடன், டிசம்பர் 6 அன்று அம்பேத்​கருக்கு அஞ்சலி செலுத்தப் பெருங்​கூட்​டத்தை நடத்தினார்.

1957இன் பொதுத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டி​யிடச் செய்யும் நோக்கில் கக்கனின் ஆலோசனையால் இந்து மதத்தைத் தழுவிய அவர் ‘இமானுவேல் சேகரன்’ ஆனார். ஆனால், அத்தேர்​தலில் இமானுவேலுக்குப் போட்டி​யிடும் வாய்ப்பு கிடைக்க​வில்லை. இருப்​பினும், அத்தேர்தலில் அவர் ஆதரித்த வேட்பாளர்கள் இருவரே வெற்றி​பெற்​றனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் 1957இல் நடைபெற்ற இடைத்​தேர்​தலின் பின்னணி​யில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தோர் வன்முறையைக் கட்டவிழ்த்து​விட்​டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு இமானுவேல் தந்தி அனுப்​பினார். ராமநாத​புரம் மாவட்ட ஆட்சியர் சி.வி.ஆர்.பணிக்கர் முயற்​சியில் 1957 செப்டம்பர் 10 அன்று சமாதானப் பேச்சு​வார்த்தை நடைபெற்றது.

சாதி சங்கத் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்​கப்பட்ட இக்கூட்​டத்தில் இமானுவேலும் பங்கேற்​றார். பிற அரசியல் கட்சித் தலைவர்​களுக்கு அனுமதி மறுக்​கப்​பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்​பாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்​டத்​தில், முதலில் மூன்று சாதிகளையும் சேர்ந்த தலைவர்​களிடம் தனித்​தனி​யாக​வும், பின்னர் கூட்டாகவும் பேச்சு​வார்த்தை நடத்தப்​பட்டது.

ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த நான்கு பிரதி​நி​திகள் கையொப்ப​மிட்டுத் தனித்​தனி​யாகத் துண்டறிக்கைகளை வெளியிடு​வதென்றும் இதில் சமரசமாக இருக்க வேண்டு​மென்று வேண்டுகோள் விடுக்​கவும் முடிவெடுக்​கப்​பட்டது. ஆனால், அவை வெளியிடப்​படு​வதற்குள் செப்டம்பர் 11 அன்று இரவு 9 மணிக்கு பரமக்​குடியில் உள்ள தன்னுடைய வீட்டில் உண்டு​விட்டு, வீட்டரு​கிலுள்ள சாலையில் நின்றபோது சிலரால் இமானுவேல் கொல்லப்​பட்​டார்.

ஒடுக்​கப்​பட்டோர் தங்களுக்குச் சமமாகச் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து இடுவதைக்கூட ஆதிக்கச் சாதித் தலைவர்​களால் ஏற்க இயலவில்லை என்றும் அவர்கள் இமானுவேலைச் சாதியைக் கூறி இழிவாகத் திட்டினர் என்றும் மத்திய, மாநில அமைச்​சர்​களுடன் கலவரப் பகுதி​களைப் பார்வை​யிட்ட மருதையா தன் அறிக்கையில் கூறியிருந்​தார். ஒடுக்​கப்​பட்டோர் மீது ஆதிக்கச் சாதியினர் அரங்கேற்றிய வன்முறையை ஆதிக்கச் சாதித் தலைவர்கள் தடுக்கத் தவறியதாக சாமி சகஜானந்தர் 1957 அக்டோபர் 30 அன்று சட்டமன்​றத்தில் பேசினார்.

இமானுவேல் படுகொலையைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் ஏராளமான கதைகள் இருக்​கின்றன. எது எவ்வாறு இருப்​பினும், இமானுவேல் பிறந்தபோது நிலவிய அதே சூழ்நிலை அவர் இறப்பின்​போதும் பெரிதாகப் பேசப்​பட்டது. நாகரிகமான உடை உடுத்​துதல், கல்வி, பொருளா​தா​ரத்தில் முன்னேறுதல் போன்ற சமத்து​வத்தை ஒடுக்​கப்​பட்டோர் அடைவதை ஏற்க இயலாத ஆதிக்கச் சாதி மனநிலையே இமானுவேல் படுகொலைக்கு அடிப்​படைக் காரணம்.

அவர் பிறந்தபோது சமத்துவ உரிமை​களுக்​காகப் போராடிய ஒடுக்​கப்பட்ட ஆளுமை​களின் தலைகளுக்கு ஆதிக்கச் சாதித் தலைவர்கள் விலை நிர்ண​யித்த கதைகள் உண்டு. அதை ஆதிக்கச் சாதியினர் இமானுவேல் கொலையில் அரங்கேற்றி​யுள்​ளனர். கால்பந்​தாட்​டத்​திலும் ராணுவத்​திலும் வீரரான இமானுவேல் சேகரன் ஒடுக்​கப்​பட்​டோரின் சமத்து​வத்​துக்கான போராட்​டத்​திலும் வீரியமான வடிவங்​களையே கைக்கொண்​ட​தால், தனது 32ஆவது வயதில் வீர மரணம் அடைந்​தார்​.

- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்