“உ
ணர்வுகளை வெளிப்படுத்துவதில் வசனங்களைவிட அதிக சக்திவாய்ந்தது இசை” என்று உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோன் ஒரு முறை குறிப்பிட்டார். ஹாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் வகைத் திரைப்படங்களில் பின்னணி இசையை, ஒரு முக்கியக் கதாபாத்திரமாக முன்னிறுத்திய மேதை அவர். ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு என்னியோ மோரிக்கோன் என்றால், நமக்கு இளையராஜா.காட்சியின் தன்மைக்கு மெருகேற்றும் விதத்திலான பின்னணி இசைக்கோவையை அசுர வேகத்தில் உருவாக்குவது அவரது தனிச் சிறப்பு. பேச வார்த்தைகளற்று கதாபாத்திரங்கள் மவுனித்திருக்கும் தருணங்களில் அவரது இசை எல்லாவற்றையும் பேசிவிடும்.. எல்லாவற்றையும்!
‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் சத்யராஜ் – ரேகா மீது உள்ளூர் இளைஞன் பழிசுமத்தும் காட்சி. ரேகாவைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ராஜா, சத்யராஜ் மீது தவறில்லை என்று புரிந்துகொள்வார். சத்யராஜின் கையை ராஜா ஆதரவாகப் பிடித்துக்கொள்ளும் கணத்தில், ஒரு பிரவாகமான வயலின் இசைக்கோவை ஒலிக்கும். அது சக மனிதன் மீதான நம்பிக்கையை உணர்த்தும் மனதின் பிரதி பலிப்பு. அந்த இசை இல்லாமலும் அந்தக் காட்சியைக் கடந்துவிடலாம். ஆனால், அந்த உணர்வு ரசிகனுக்குக் கிடைத்திருக்காது.
‘மூன்றாம் பிறை’யில், காணாமல்போன ஸ்ரீதேவியைத் தேடிக்கொண்டு கமல் தூறல் களுக்குக் கீழே அலைந்து திரியும்போது வயலின், செல்லோ வாத்தியக்காரர்களுடன் இளையராஜாவும் துணையாக வந்துகொண்டிருப்பார். மழையில் நனைந்த பூவிலிருந்து தொடங்கும் அந்தக் காட்சியும் இசையும் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அற்புதங்கள்.‘முள்ளும் மலரும்’ படத்தின் கிளைமாக்ஸில் ஒலிக்கும் தாள வாத்தியம், படத்தில் ரஜினி, அவரது தங்கை ஷோபாவின் இளம் வயது வாழ்க்கையின் முக்கியப் புள்ளி.
இறுதிக் காட்சியில் வயலின் கூட்டிசையைத் தவிர்த்துவிட்டு, தாளவாத்தியத்தைத் தேர்ந்தெடுத்தது அவரது நுட்பமான ரசனையின் வெளிப்பாடு. பின்னணி இசைக்காகவே புகழ்பெற்ற பல படங்களில், பாடல்களுக்குத் தொடர்பில்லாத, ஆனால், படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தும் பல பின்னணி இசைக்கோவைகளை அவர் உருவாக்கி யிருக்கிறார். அதேசமயம், பாடல்களை அடிப்படையாக வைத்து, காட்சியின் தன்மைக்கேற்ப அவர் உருவாக்கிய இசைக்கோவைகளும் மிகப் பிரபலமானவை. படத்தின் ஆன்மா ஒளிந்திருக்கும் இடத்தில் ஒலிக்கும் பாடலைத் தான் படத்தின் தீம் இசையாக உருவாக்கியிருப்பார். ஒரே மெட்டு, வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இசைக் கருவிகளின் வழியே ஒலிக்கும்போது அவரது மேதைமையை உணர முடியும். ‘நாயகன்’ மிகச் சிறந்த உதாரணம். ‘அறுவடை நாள்’ படத்தின் ‘தேவனின் கோவில்’ பாடலை, பின்னணி இசைக்கு அவர் பயன்படுத்தியிருக்கும் விதத்தைக் கேட்டுப்பாருங்கள்.
பின்னணி இசை சேர்க்கப்படுவதற்கு முன்னர், ‘ஃபர்ஸ்ட் காப்பி’ எனும் வடிவில் இருந்த பல படங்களைப் பார்த்த தயாரிப்பாளர்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள்–இளையராஜாவுக்காக. அவர் கைபட்டவுடன் ராமனின் பாதம்பட்ட அகலிகையாக, படங்களுக்கு உயிர் வந்துவிடும். “குறிப்பிட்ட ஒரு சிச்சுவேஷனுக்கு எந்த இசைக்கருவி பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப்பார்ப்பேன். பிறகு, அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, வேறொரு இசைக்கருவி யைப் பயன்படுத்துவேன்” என்று ஒரு முறை இளையராஜா குறிப்பிட்டார்.
அதுதான், இசையில் இதுவரை முயற்சிக்கப்படாத பரிசோதனை முயற்சிகளுக்கு அவரை உந்தித் தள்ளியது. திரைக்கு வெளியே பாடல்களின் மெட்டுக்களுக்கு இணையாக, பின்னணி இசைக்கோவைக்காகவே பேசப்படுகிறார் என்றால், அது வெறும் திறமையை மட்டும் சார்ந்ததல்ல. அதற்கு வேறொரு அம்சமும் தேவைப்பட்டிருக்கிறது – அது இயற்கையின் அளப்பரிய வரம்!
- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago