என்னையும் என் சாமியையும் விட்டுவிடுங்களேன்!: அமைச்சர்களும் அதிகாரிகளும் தேருக்கு வடம்பிடிப்பது சரியா?

By தங்க.ஜெயராமன்

திருவாரூர் தேரின் உருவத்துக்கு ஒத்தாற்போல் நான்கு பொம்மைக் குதிரைகள் பூட்டியிருந்தன. பிரம்மாதான் சாரதி. குதிரைகள் தேரை இழுக்காது. பிரம்மாவும் சாரத்தியம் செய்ய மாட்டார். இவற்றையும் சேர்த்து மக்கள்தான் இழுப்பார்கள். ஆனால், குதிரைகள் என்ற பாவனை இல்லையென்றால் திருவிழா ஏது? இப்படி பாவனைகள் தரும் அழகைக் கழித்து அகற்றிவிட்டால் மனித வாழ்வின் மாமூலான கேவலம் அம்பலமாகிவிடும்.

தெய்வங்கள் உருவம் எடுத்துக்கொள்ளாவிட்டால் திருவிழா சாத்தியமில்லை. அருவத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் சிவலிங்கத்தை வைத்து வீதி உலா நடத்த முடியாது. திருவிழாவுக்கு சிலைகள் வேண்டும். ஆனாலும், உலாவில் வரும் சிலைகளைப் படிமம், பிரதிமை, உருவம் என்று நான் சொல்ல மாட்டேன். படிமம் என்பது ஒன்றைப் போல் இருக்கும் மற்றொன்று. இந்திய மரபுக்கு இந்தப் படிமங்கள் தெய்வத்தைப் போல் இருக்கும் மற்றொன்று அல்ல. தெய்வங்களே இவைதான்.

ஆற்று வெள்ளம் விட்டுச்சென்ற மடுவின் நீர்போல மனித உலகில் தங்கிவிட்ட தெய்வங்கள் இவை என்பது வைணவக் கொள்கை. தேரில் சென்று நிலைக்கு வரும் திருவாரூர் தியாகேசரின் களைப்பு தீர விச்சு என்ற பயத்தம் பருப்புக் கஞ்சி படைப்பார்கள். மன்னார்குடி ராஜகோபாலனின் திருமேனிக்கு தேரில் சென்றுவந்த நோவு நீங்க வெந்நீர் அபிஷேகம் நடக்கும். இப்படி நம்பும் மரபுக்கு இவை வெறும் உருவங்கள்தானா?

மன்னனின் பவனி

மன்னார்குடி ராஜகோபாலனுக்குப் பதினெட்டு நாள் திருவிழா. காலையில் பெருமாள் பல்லக்கில் புறப்படுவார். ராஜவீதி நெடுகக் கோடைப்பந்தல். அங்கங்கே இருக்கும் குளம், குட்டை, கேணியிலிருந்து நீர் இறைத்து தெளித்துக்கொண்டே செல்வார்கள். டவண்டையைத் தட்டிக்கொண்டு ஒருவர் முன்னே விரைவார். ஆணும் பெண்ணுமாக இரண்டு பூதங்கள் போகும். எருதின் முதுகில் கட்டிய டமாரங்களை ஒருவர் அடித்துக்கொண்டு செல்வார். முகபடாம் சாத்திய யானை அசைந்து நடக்கும். வாசமாலை ஒன்று வீதியின் குறுக்கே இருவர் இழுத்துப் பிடித்தபடியே நகரும். சுருட்டிகளை ஏந்த இருவர். எக்காளம் முழங்கும். திருச்சின்னம் பிளிரும். தீவட்டியும் மரியாதைக்கு எரியும். உடல் வாத்தியத்தை ஒருவர் அதிர அதிரத் தட்டுவார். பேண்டு வாத்தியக் குழு ஒன்று கிளாரினெட்டில் கீர்த்தனைகளை இசைத்துக்கொண்டே நகரும். சந்தியிலும் சதுக்கத்திலும் ஜோடி நாயனங்கள் நின்று வாசிக்கும்.

உலாவின் கதியை நிதானித்தவர்கள்போல் பத்தி பத்தியாய் கைகோத்து தமிழ்ப் பாசுரங்களை பாடிக்கொண்டே பல்லக்குக்கு முன்னால் ஒரு குழு. வேதங்களை ஓதியபடியே பல்லக்குக்குப் பின்னால் ஒரு கோஷ்டி. தமிழ் மறையும் வட வேதமும் முத்தும் பவளமுமாக இருக்க நடுவில் சுவர்ண மணியாக பட்டுச் சப்பரத்தின் கீழ் பல்லக்கில் வருவார் பெருமாள். ரத்தினக் கிரீடம், வைர முடி, சுவர்ண கிரீடம் என்று மாறி மாறி தரித்து மன்னனாகவே பவனிவருவார்.

கருட சேவை, வெண்ணெய்த்தாழி, வெட்டுங்குதிரை போன்ற அமர்க்களமான விழாக்கள் உண்டு. ஆனாலும், கடைசி திருநாளான சப்தாவர்ணத்தில்தான் நாமும் பெருமாளுமாகவே ஒருவரை ஒருவர் நின்று பார்த்துக்கொள்வதுபோல் இருக்கும். நினைத்துக்கொண்டு புறப்பட்டவராக இரவில் பெருமாள் ஒரு படிச்சட்டத்தில் நின்றபடியே ரதவீதிகளில் வருவார். சில நொடிகள் வீதிகளின் மூலையில் நின்று மத்தளம் மட்டுமே கொட்டுவார்கள். ஓங்கி ஒலிக்க எதுவும் இருக்காது. ஒளிரும் விளக்கு இருக்காது. பெருமாளும் பூவால் தன்னைப் போர்த்திக்கொள்ளாமல் முழுமேனி காட்டி வருவார். தீவட்டி வெளிச்சத்தின் சிறு நொடிப்பில், கருமாணிக்கமான பெருமாள் தன் பொன் முகம் காட்டி முறுவலிப்பார். கருங்குவளைக் கண்களால் கோபியர்கள் அவரை அரிச்சிக்கிறார்கள் என்பது ஒரு கவியின் வரி.

காட்சியாகும் திருவிழா

இங்கே அரசாங்கத்தின், அறநிலையத் துறையின் பங்களிப்பு பற்றி நாம் கவலைப்பட வேண்டியவை இரண்டு: அரசாங்கம் ஆலய விழாக்களோடு ஒன்றிக் கிடப்பது ஒன்று. திருவிழாக்களை மும்முரமாக காட்சிப்படுத்துவது மற்றொன்று. அரசர்கள் திருவிழாக்களை ஏற்படுத்தினார்கள். அவர்களே முன் நின்றும் நடத்தினார்கள். உலா முடிந்து கோயிலுக்குத் திரும்பும் ராஜகோபாலன் அச்சுதப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர், செண்பக லட்சுமியின் சிலைகளுக்கு முன்பு நின்றுகொள்வார். திருவிழா நடத்தியதற்காக அவர்களுக்கு “அனைத்துலகம் ஆண்ட அச்சுதப்ப நாயக்கர்…” என்று துவங்கும் கட்டியம் கூறி, பரிவட்ட மரியாதைசெய்த பின்புதான் பெருமாள் இருப்பிடம் செல்வார்.

இன்றைய அரசியல் சிந்தனை அதுவல்ல. மடாதிபதிகள் தேருக்கு வடம்பிடிப்பது பொருத்தம். அமைச்சர்களும் அதிகாரிகளும் தேரோட்டத்தை வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தார்கள் என்பது எவ்வளவு பொருத்தம்? அதோடு நிற்காமல் யாகசாலையில் அமர்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கற்பம் செய்துகொள்வது பற்றி நான் என்ன சொல்வது? அவர்கள் பார்வையாளராக இருக்கலாம். பங்கேற்பது பொருந்தாது. அடையாளத்துக்காக மட்டுமே அரசாங்கம் திருவிழாவில் பங்கேற்றாலும் விழாவுக்கு ஒரு செல்வாக்கு வரும். திருவிழாக்களின் செல்வாக்குப் பெருக்கத்துக்கு சமூக விளைவு உண்டு. சில்லென்று வரும் காற்றை அதற்கு முன்பே இருந்த நான் அனுபவிக்கிறேன் என்று சொல்ல மொழி என்னைப் பழக்கியிருக்கிறது. உண்மையில் அந்தக் காற்றுத்தான் என் உடம்பை, என்னை, எனக்கே வரையறுத்துக் காட்டியது.

திருவிழாக்களும் இதேபோல சமுதாய உடம்பில் ஒரு சிலிர்ப்பாகி சமுதாயத்தை அதற்கே காட்டித்தருகின்றன. சமுதாயத்துக்கு ஒரு பொது அடையாளம் கொடுத்து தன்னை ஒற்றைப் பண்பாட்டுச் சமுதாயமாக உணரும் மாயையைச் செய்கின்றன. திருவிழாக்களுக்கும் பண்பாட்டு அடையாளம் உண்டு. ஒவ்வொரு திருவிழாவும் ஒரு பண்பாட்டைச் சர்ந்திருக்கும். ஒரு அடையாளம் மட்டும் சமுதாயத்தின் பொது அடையாளமாக மாறுவதில் அரசாங்கம் ஏன் முனைப்பு காட்ட வேண்டும்?

திருவிழாவை நடத்துவதும் அதைக் காட்சிப்படுத்துவதும் வெவ்வேறு. கோயில் விழாக்களுக்கான விளம்பரமே அவற்றைக் காட்சியாக்கும். மார்கழி திருவாதிரைக்கு விளம்பரம் வேண்டுமா? சுவாதியில் கொடியேறி ரோகிணியில் தேரோட்டம் என்பதற்கு ஏன் விளம்பரம்? நீங்கள் தேர்த் திருவிழா பார்க்கப்போனால் அதையல்ல, அப்படி ஒரு காட்சியைத்தான் பார்க்க முடியும்.

தேரும், சாமியும், தேரை இழுக்கும் பக்தர்களும், காணவரும் நீங்களும் நானும், கலந்துகொள்ளும் அதிகாரிகளும்கூட அந்தக் காட்சியில் பாத்திரங்களாகிவிடுவார்கள். “அசைந்துவரும் தேரின் அழகைப் பாருங்கள்” என்று ஒருவர் வர்ணிப்பார். அவர் கண்கள் வழியாகத்தான் நீங்கள் அதைக் காண முடியும். உங்கள் கண்களை இழுத்து இழுத்து ஆங்காங்கே பொருத்துவார். நம்மால் ஒருபோதும் திருவிழா பார்க்க முடியாது. “என்னையும் என் சாமியையும் விட்டுவிடுங்களேன்” என்று கத்த வேண்டும்போல் இருக்கிறது!

- தங்க.ஜெயராமன், பேராசிரியர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்