பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்ட மோடி, தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கியது ஹரியாணாவின் ரேவரியில்தான். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பிரம்மாண்டமான கூட்டம் அது. ஆனால், இந்த முறை ஹரியாணா சட்டமன்றத் தேர்தலுக்கான மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் பழைய உற்சாகம் இல்லை.
பிரச்சாரக் காலம் முடிவுறுவதற்கு 48 மணி நேரம் இருக்கும்போதே, தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மறுபுறம், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாகக் களமாடியிருக்கிறார்கள். எப்படி இருக்கிறது ஹரியாணா தேர்தல் களம்?
மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. 2014 சட்டமன்றத் தேர்தலில், மோடி அலையால் 47 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 2019இல் 40 இடங்களில் வென்ற பாஜக, துஷ்யந்த் செளதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த முறை பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு மிகக் குறைவு என்பதே கள நிலவரம்.
பரிதவிக்கும் பாஜக: முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கும் துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலாவுக்கும் இடையில் ஏற்கெனவே பல்வேறு விஷயங்களில் முரண்பாடு இருந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிணக்கு, கூட்டணிப் பிளவுக்கு வழிவகுத்தது. சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக தக்கவைத்துக்கொண்டாலும் முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியிழக்க நேர்ந்தது. கட்டாரின் உதவியாளராக இருந்த நயப் சிங் சைனி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்டார் கர்னால் தொகுதி எம்.பி-யாகி மத்திய அமைச்சராகிவிட்டார்.
இந்தத் தேர்தலில் நயப் சிங்கே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அனில் விஜ், ராவ் இந்திரஜித் சிங் போன்றோரும் தங்களை முன்னிறுத்திக்கொள்ள முயல்கின்றனர். பாஜகவில் இது புதிது என்றாலும், இவர்களின் ஆதரவாளர்கள் மூலமாவது தேர்தலில் ஏதேனும் அனுகூலம் கிடைக்கட்டுமே என கட்சித் தலைமை அமைதி காக்கிறது. அதிருப்தி அலை நிலவுவதால் பெரும்பாலான போஸ்டர்களில், பாஜக ஆட்சித் திட்டங்களின் பயனாளர்கள் எனச் சாமானியர்களின் படங்களே முதன்மையாக இடம்பெற்றிருக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் ஐந்தே இடங்களில் வென்றதால் துவண்டுபோன பாஜக, ஒரு லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பன உள்ளிட்ட நலத் திட்டங்களை அவசரஅவசரமாகக் கொண்டுவந்தது. இந்தத் தேர்தலில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, ஒவ்வொரு நகரத்திலும் 50,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை எனப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.
ராகுலின் சூறாவளிப் பிரச்சாரம்: 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஆட்சிக்கு எதிரான மனநிலையை (anti incumbency) எதிர்கொள்வது இயல்புதான் என்றாலும், பாஜகவின் பதற்றத்துக்கு இன்னொரு காரணியும் இருக்கிறது. அது ராகுல் காந்தியின் சூறாவளிப் பிரச்சாரம். 2014 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 10 இடங்கள்தான் கிடைத்தன. 2019இல் 31 இடங்கள் கைவசமாகின. 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் வென்றது. இந்த முறை ராகுலின் பிரச்சாரத்தால் ஆட்சியையே கைப்பற்றிவிடலாம் என்று காங்கிரஸ் பெரிதும் நம்புகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, அக்னிபத் திட்டம், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் தீவிரப் பிரச்சாரம் செய்தார். “மோடி அரசு மூலம் அம்பானி, அதானிக்குச் செல்லும் பணத்தை எடுத்து நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், தலித்துகளுக்குத் தருவேன்” எனச் சூளுரைத்திருக்கிறார்.
50க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், 60 இடங்களுக்கு மேல் வென்றால்தான் பாஜகவின் ‘பாசவலை’யிலிருந்து தமது எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க முடியும் என்பதையும் காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில், இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ராகுலுடன் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
சாதிக் கணக்குகள்: ஹரியாணா மக்கள்தொகையில் 20% தலித்துகள். வழக்கமாக, ஜாட் சமூகத்தினர், முஸ்லிம்கள் ஆகியோர்தான் காங்கிரஸின் முதன்மை வாக்கு வங்கிகள். இந்த முறை தலித் சமூகத்தினரின் வாக்குகளையும் திரட்டுவதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டுகிறது. காங்கிரஸின் தலித் முகமாக அறியப்படும் குமாரி செல்ஜாவுக்கும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த புபேந்திர சிங் ஹூடாவுக்கும் இடையில் எப்போதும் முரண்கள் உண்டு.
இந்த முறை வேட்பாளர் தேர்வில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், கட்சியைவிட்டு செல்ஜா வெளியேறுவார் என்று தகவல்கள் பரவின. சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கட்டார், பாஜகவுக்கு வருமாறு செல்ஜாவுக்கு அழைப்புவிடுத்தார்; ஆனால், அதை ஏற்க மறுத்த செல்ஜா, இறுதிவரை காங்கிரஸ்தான் என்று சொல்லிவிட்டார். இதில் பாஜகவுக்குக் கடும் ஏமாற்றம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
செல்ஜா விவகாரம் ஒரு பின்னடைவாகிவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்திய ராகுல் காந்தி, பிரச்சார மேடைகளில் செல்ஜாவுக்கும் ஹூடாவுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்தார். எனினும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெற்றதாக பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
மறுபுறம், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஜாட் சமூகத்தினர் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை கட்டார் அரசு எதிர்கொண்ட விதமும் பாஜகவுக்குக் கரும்புள்ளியாகி இருக்கிறது. ஹரியாணா அரசியல் களத்தில் கோலோச்சுபவர்கள் ஜாட் சமூகத்தினர் என்பதை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்!
ஹரியாணா விளையாட்டு வீரர்களுடன் உரையாடி ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் காணொளி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மோஹித் குரோவர், வர்த்தன் யாதவ் போன்ற இளம் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் காங்கிரஸ், ராஜ் பப்பர், முகேஷ் ரிஷி போன்ற சினிமா நட்சத்திரங்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க முயல்கிறது.
“அக்னிபத் திட்டத்தின் பெயரை ‘அதானி திட்டம்’ என்றே மாற்றிவிடலாம்; அந்த அளவுக்கு அக்னி வீரர்களுக்குப் பாதகத்தையும், அதானி குழுமத்துக்குப் பலன்களையும் தரும் திட்டம்” என்று ராகுல் முன்வைக்கும் கடும் விமர்சனங்களால் பாஜகவினர் பதற்றமடைந்திருக்கின்றனர். அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம், அரசுப் பணி வழங்கப்படும் என்று அமித் ஷா, ராஜ்நாத் சிங் தொடர்ந்து விளக்கமளித்துவருவது இதற்குச் சான்று.
காங்கிரஸைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளர் என யாரையும் முன்னிறுத்தவில்லை. எனினும், ஹூடாதான் முதல்வர் வேட்பாளர் என மல்லிகார்ஜுன கார்கே மேடையில் சூசகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
திருப்புமுனைகள்: கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்று ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாபா குர்மீத் ராம் ரஹீம் 20 நாள்கள் பரோலில் வெளிவந்திருப்பது இந்தத் தேர்தலில் புதிய பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு முன்பும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், ஹரியாணா உள்ளாட்சித் தேர்தல், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் போன்ற தருணங்களில் அவருக்குப் பரோல் வழங்கப்பட்டது சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் அவர் 50 நாள்கள் பரோலில் வெளியில் இருந்தார். இதன் பின்னணியில் பாஜக அரசு இருப்பதாகவே கருதப்படுகிறது. அவரது ‘டேரா’ அமைப்பின் அரசியல் பிரிவு பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் பணியில் மறைமுகமாக ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை இந்திய தேசிய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. ஜனநாயக் ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சியுடன் கைகோத்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகளில் சீட் வழங்கப்படாத அதிருப்தியில் சுயேச்சையாகப் பலர்
போட்டியிடுகின்றனர். உள்ளூர் செல்வாக்கு கொண்ட அவர்களின் வெற்றி - தோல்விகளும் இந்தத் தேர்தலில் மிகுந்த கவனத்துக்குரியவை. ஹரியாணா சிறிய மாநிலம் என்றாலும் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்தத் தேர்தலின் முடிவுகள் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
26 days ago