சமூகத்தில் உயர்ந்த நிலையிலோ அதிகாரத்திலோ இருப்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டை ஒரு பெண் சுமத்தினால், குற்றம் சுமத்திய பெண்ணின் பின்னணியை வைத்தும் அவர் சார்ந்திருக்கும் துறையை வைத்தும் அந்தக் குற்றம் அணுகப்படுவது அநீதியானது.
சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் அந்த நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ‘திட்டமிட்டு’ சுமத்தப்படுவதாகச் சிலர் வாதாடுவதும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசி, பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்துவதும் நம் சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.
முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாகத் தங்களை வெளிக்காட்டிக்கொள்பவர்களில் பலர், நபரைப் பொறுத்து ‘மீ டூ’ (MeToo) குற்றச்சாட்டுகளை அணுகும் விதம் முறையான ஒன்றாக இல்லை. பொதுவாகப் பெண்ணியத்தையும் பெண்ணின் உரிமைகளையும் வலியுறுத்தும் பலரும்கூடத் தங்கள் தரப்பு ஆண்களுக்கு எதிராக ‘மீ டூ’ குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், அது திட்டமிட்ட சதி என்று முத்திரை குத்துவது அவர்கள் முன்வைக்கும் பெண்ணியப் பார்வைக்கே எதிரானது.
இரண்டும் ஒன்றல்ல... தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து ஒரு பெண்ணால் எளிதாக வெளியே சொல்லிவிட முடியாத சமூகச் சூழலில், தங்கள் கண்ணியத்தைப் பணயமாக வைத்துத்தான் பெண்கள் இவற்றை வெளியே சொல்கிறார்கள். அப்படி வெளிவரும் ஒன்றிரண்டு குரல்களையும் நசுக்கும் முயற்சியே மேற்கண்டதைப் போன்ற எதிர்வினைகள். தமிழ்நாட்டில் இந்தத் தன்மை பரவலாக இருக்கிறது.
» டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை
» தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சி: திருமாவளவன் உறுதி @ விசிக மாநாடு
ஆணின் பிரபலமும் பெண்ணின் கண்ணியமும் ஒரே தராசில் வைத்து அணுகக்கூடியவையல்ல. பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த மானநஷ்ட வழக்கில், ‘ஓர் ஆணின் புகழை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு பெண்ணின் வாழ்வுரிமையையும் கண்ணியத்தையும் விலையாகக் கொடுக்க முடியாது’ என மும்பை மாவட்ட நீதிமன்றம் 2021இல் தெரிவித்த கருத்தும் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது.
பணியிடங்களில் தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும் துணிவை மிகச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள் பெற்றனர். சமூக ஊடகங்கள் அதற்குப் பெரும் துணையாக அமைந்தன. தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட துயர அனுபவங்களை உலகம் முழுவதும் #MeToo என்கிற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் எழுதினர். திரைத் துறையினர், கல்வியாளர்கள், ஊடகத் துறையினர், அரசியல்வாதிகள், விளையாட்டுத் துறையினர், மருத்துவத் துறையினர் எனப் பிரபலமான பலரும் இதில் அம்பலப்படுத்தப்பட்டனர்.
ஆசுவாசம் அளித்த தீர்ப்பு: இந்தியாவிலும் 2017இல் ‘மீ டூ’ இயக்கம் வலுப்பெற்றது. பத்திரிகையாளர் பிரியா ரமணி, 1993இல் நேர்முகத் தேர்வு ஒன்றுக்குச் சென்றபோது, தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து 2017இல் ‘வோக்’ (Vogue) இதழில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடாமல் எழுதினார். பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் எம்.ஜே.அக்பர் என்று ஓராண்டு கழித்து பிரியா ரமணி தனது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதினார். அவரைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பெண்கள் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய அக்பர், அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என விடுவித்த நீதிமன்றம், தீர்ப்பின்போது தெரிவித்த கருத்துகள் மிக முக்கியமானவை. 1993இல் நடைபெற்ற சம்பவம் குறித்து 24 ஆண்டுகள் கழித்து பிரியா ரமணி ஏன் எழுத வேண்டும் எனப் பலரும் அப்போது கேள்வியெழுப்பினர்.
‘ஒரு பெண் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட மனப் பதற்றத்தையும் நடுக்கத்தையும் கடந்து வர அத்தனை ஆண்டுகள் அவர்களுக்குத் தேவைப்படலாம். தன் மன வேதனை குறித்துச் சமூக ஊடகத்திலோ கட்டுரையிலோ திரைப்படத்திலோ எங்கு வேண்டுமானாலும் ஒரு பெண் பதிவுசெய்யலாம்’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சற்றே ஆசுவாசம் அளிப்பதாக அமைந்தது.
கடமைக்குக் கொடுத்த விலை: பெண்கள் பொதுவெளியில் செயல்படத் தொடங்கிய நாளில் இருந்தே அவர்கள் மீதான பணியிடப் பாலியல் தொந்தரவு தொடங்கிவிட்டது. அவற்றைப் பதிவுசெய்வதற்கோ முறையிடவோகூடச் சரியான அமைப்புகள் இல்லாத நிலையில் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘விசாகா நெறிமுறைகள்’ மிகத் தாமதமாக 1997இல் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டன. அதற்குக்கூட ஒரு பெண்தான் பலியாக வேண்டியிருந்தது.
ராஜஸ்தானின் பதேரி கிராமத்தைச் சேர்ந்த பன்வாரி தேவி என்பவர், தன் கிராமத்தில் ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கும் ஒரு வயது ஆண் குழந்தைக்கும் நடைபெறவிருந்த திருமணம் குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இதனால், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் உறவினர்களால் பன்வாரி தேவி தன் கணவரின் எதிரிலேயே கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். ஆதிக்கச் சாதியினரால் 1992இல் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம் அன்றைக்கு நாடு முழுவதும் பேசுபொருளானது.
ராஜஸ்தான் மாநில அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் கிராமப் பணியாளராக பன்வாரி தேவி 1985 முதல் செயல்பட்டுவந்தார். அவரது பணியைச் செய்ததற்கான தண்டனையாகத்தான் அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அதைக் கண்டித்துப் பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் போராடினர். ‘விசாகா’ உள்பட ஐந்து பெண்ணிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர, அதன் பிறகே ‘விசாகா வழிகாட்டு நெறிமுறைகள்’ உருவாக்கப்பட்டன.
ஆனால், இன்றுவரை பன்வாரி தேவிக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஐவரும் அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெண்ணிய அமைப்புகளின் அழுத்தத்தால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து வேறு வழியின்றி அரை மனதாக 1996இல் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இத்தனை ஆண்டுகளில் இந்த வழக்கில் ஒரே ஒரு முறைதான் நீதிமன்ற விசாரணை நடைபெற்றிருக்கிறது. வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.
பன்வாரி தேவி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நான்கு பேர் இறந்துவிட்ட நிலையில் 71 வயதிலும் நீதிக்காகக் காத்திருக்கிறார் பன்வாரி தேவி. குற்றமிழைத்தவர்கள் எவ்விதத் தண்டனைக்கும் ஆளாகாமல் தன் கண் முன்னே நடமாடுவதைப் பார்ப்பது பெரும் துயரம். அதை பன்வாரி தேவி அனுபவித்துவருகிறார்.
நாடறிந்த வழக்கிலேயே இதுதான் நிலை என்கிறபோது, பெண்கள் எப்படிப் புகார் கொடுக்க முன்வருவார்கள்? புகார் கொடுத்துவிட்டு இறக்கும் வரைக்கும் நீதிமன்றத்துக்கு அலைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிதர்சனத்தை மீறித்தான் சொற்ப எண்ணிக்கையிலான பெண்கள் வெளியே வந்து துணிவுடன் பேசுகிறார்கள். ஆனால், அவர்களது நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி, புகாரின் சாரத்தை நீர்த்துப்போகச் செய்வதைத்தான் பலரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
விருப்பமும் சம்மதமும்: இந்தியாவில் பணியிடப் பாலியல் குற்றங்கள் குறித்துப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்துபவர்களில் பலரும் திரைத் துறையைச் சார்ந்தவர்களாக இருப்பதாலேயே புகார்கள் போதுமான அளவுக்குக் கவனம் பெறுவதில்லை. திரைத் துறையில் இதெல்லாம் ‘இயல்பு’தானே என்கிற தொனியே புகாரின் தீவிரத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. இது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. ‘அந்தப் பெண்களின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது’ என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. விருப்பத்துக்கும் சம்மதத்துக்கும் வேறுபாடு உண்டு.
விருப்பம் என்பது தன்னிச்சையானது. ஆனால், நெருக்கடியை ஏற்படுத்தியும் ஒருவரைச் சம்மதிக்க வைக்க முடியும். ‘மீ டூ’ பாலியல் குற்றச்சாட்டுகளை இந்த அடிப்படைப் புரிதலோடு அணுக வேண்டும். பன்வாரி தேவி தன் கடமையைச் செய்ததற்காக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால், பெரும்பாலான துறைகளில் பணியில் நீடித்திருக்கவும் வேலை கிடைக்கவும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிப் பெறப்பட்ட சம்மதத்தையும் பொதுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் செயலாகத்தான் ‘மீ டூ’ புகார்களை அணுக வேண்டும்.
புறக்கணிப்பின் வேதனை: பணியிடப் பாலியல் அத்துமீறல் குறித்துப் புகார் கூறும் பெண்கள் வேலை நீக்கம், புறக்கணிப்பு, மிரட்டல், வாய்ப்பு மறுக்கப்படுவது, சமூகத்தால் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்களே இவற்றுக்கு அஞ்சி வாய்திறக்காமல் இருக்கிறபோது, முறைசாராப் பணியாளர்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகள் வெளியுலகின் பார்வைக்கே வராமல் மறைக்கப்பட்டுவிடுகின்றன.
இப்படியொரு சூழலில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் போக்கு பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிச் செய்பவர்களில் சிலர் முற்போக்கு, சமூக நீதி பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். பணியிடப் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி (2013) பணியிடங்களில் முறையான உள்ளகப் புகார் குழு அமைப்பது, நேர்மையான விசாரணை, தாமதமில்லாத நீதி ஆகியவற்றோடு பெண்களின் புகார்களுக்கு முகம்கொடுப்பதும் அவசியம். அதுதான் பொதுவெளியிலும் சமூக உழைப்பிலும் பெண்கள் தடையின்றி ஈடுபடுவதை உறுதிப்படுத்தும்.
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago