ஆ
ங்கிலத்தில் ‘ஓவர்ஷேடோட்’ எனும் ஒரு சொல் உண்டு. அதாவது, குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இரண்டு பேர் உழைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒருவரது உழைப்பும், அதனால் அவர் பெறும் புகழும் இன்னொருவரின் உழைப்பையும் புகழையும் மறைத்துவிடும். இது அந்த இரண்டு பேருக்குமே தெரியாது. வரலாற்றைக் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால்தான், அந்த வித்தியாசம் புரியும்.
ராபர்ட் எஃப்.கென்னடி விஷயத்திலும் இதுதான் நடந்தது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடியவர், மார்ட்டின் லூதர் கிங். அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அமெரிக்காவில் 1964-ம் ஆண்டு ‘சிவில் உரிமைச் சட்டம்’ நடை முறைப்படுத்தப்படுவதற்கு மிக முக்கியமான காரண மாக இருந்தவர்.வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக் கும் இடையிலான வித்தியாசங்களைக் களைந்து, அனைவரையும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்திய கிங்கை, வெள்ளையர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே, 1968-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, ஜேம்ஸ் இயர்ல் ரே எனும் வெள்ளையன் ஒருவனால், மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டார். அவரது 50-வது நினைவு தினத்தை இந்த ஆண்டு ஏப்ரலில் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனுசரித்தனர். மார்ட்டின் லூதர் கிங்குக்குக் கிடைத்த கவனத்தில் சிறு பகுதிகூட, ராபர்ட் கென்னடிக்குக் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
அமெரிக்காவில் ‘சிவில் உரிமைச் சட்டம்’ நடை முறைப்படுத்தப்படுவதில் ராபர்ட் கென்னடியின் உழைப்பு அபரிமிதமானது. சொல்லப்போனால், ராபர்ட் கென்னடியின் ஆதரவில்லாமல், மார்ட்டின் லூதர் கிங்கால் மட்டும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு, கறுப்பின மக்களின் போராட்டங்களுக்குத் துணை நின்றவர் ராபர்ட். அதனாலேயே, மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஏற்பட்ட அதே கதி, ராபர்ட் கென்னடிக்கும் ஏற்பட்டது. ஆம்… மார்ட்டின் லூதர் கிங், கொல்லப்பட்டு சரியாக 62 நாட்களுக்குப் பிறகு, சிர்ஹான் சிர்ஹான் எனும் பாலஸ்தீனிய அமெரிக்கர் ஒருவரால் கொல்லப்படுகிறார் கென்னடி.
ஒற்றுமைகளும் வித்தியாசங்களும்
அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசிய ராபர்ட் கென்னடியின் வாழ்க்கையும், துப்பாக்கித் தோட்டாவாலேயே முடிந்தது. ராபர்ட் கென்னடி யின் பெயரால் மனித உரிமை விருதுகூட வழங்கப்படு கிறது. ஆனால், அவரது 50-வது நினைவு தினத்தை, எத்தனை மனித உரிமை ஆர்வலர்கள் அனுசரிக்கிறார்கள் என்பது சந்தேகமே! இத்தனைக்கும் ராபர்ட் கென்னடி யார் தெரியுமா? அமெரிக்காவின் 35-வது அதிபராக இருந்த ஜான் எஃப்.கென்னடியின் தம்பி!
அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றைப் படித்தால், மார்ட்டின் லூதர் கிங்கும், ராபர்ட் கென்னடியும் ஒரே நோக்கத்துக்காக, ஆனால் வேறு வேறு திசையில் பயணித்து, இறுதியில் அடைய வேண்டிய இலக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது புலனாகும். காந்தியின் செயல்பாடுகளால் மார்ட்டின் லூதர் கிங் உத்வேகம் பெற்றார் என்றால், அசிஸியின் புனித பிரான்சிஸ் எனும் கத்தோலிக்கப் புனிதரிடமிருந்து தனக்கான உந்துதலைப் பெற்றார் ராபர்ட் கென்னடி. சிவில் உரிமைக்காகப் போராடுவதால், தான் கொல்லப்படலாம் என்று இருவருமே எதிர்பார்த்தார்கள்.
வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை இருவருமே எதிர்த்தார்கள். ‘தேசத்தின் பெருவிருப்பமாகத் துப்பாக்கிகள் மாறும்போது, அதன் சமூக வளர்ச்சித் திட்டங்களின் நிலை திண்டாட்டமாகும்’ என்றார் கிங். ‘இந்தப் போர் மிகவும் கொடூரமான தவறு’ என்றார் ராபர்ட் கென்னடி.
அடுத்த அதிபர் தேர்தலுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த சூழலில் ராபர்ட் கென்னடி இதைச் சொன்னார் என்பது இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது. நாடே, அடுத்த அதிபராக ராபர்ட் கென்னடி வந்து விடுவார் என்று எதிர்பார்த்த சூழலில், வியட்நாம் போருக்கு எதிராக இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவிப் பார் என்று அவரது அரசியல் எதிரிகள்கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
சகோதரத்துவத்துக்கு அங்கீகாரம்
சிவில் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் இருவருக்குமான பழக்கம் என்பது வெறும் 8 ஆண்டுகள்தான். அதிலும் கடைசி 4 ஆண்டுகளில்தான், ஒரே ஒரு முறை மட்டும், இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொண்டார்கள். அதுவும் சில நிமிடங்கள்! மற்றபடி, கடிதங்கள், தொலைபேசி, பத்திரிகையாளர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள் மூலமே இருவருக்குமான உரையாடல் நிகழ்ந்தன.
கறுப்பர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில், மார்ட்டின் லூதர் கிங், அகிம்சை முறையைப் பின்பற்றினார். ஆனால் அதுவே, பெரும் வன்முறையாக அமெரிக்க அரசியல்வாதிகளால் பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு நோபல் பரிசு கிடைத்தவுடன், கிங்கைப் பாராட்டிய முதல் நபர் ராபர்ட் கென்னடிதான். ‘இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதன் மூலம் அமெரிக்காவின் சகோதரத்துவத்துக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது’ என்றார் கென்னடி.
கிங்கைவிட நான்கு வயது மூத்தவரான கென்னடியின் மனதில் கிங்கைப் பற்றி உயர்வாக வைத்திருந்ததன் விளைவே, இந்தச் சொற்கள். அதேபோல, இதர கறுப்பினத் தலைவர்கள் ராபர்ட் கென்னடியின் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயத்துக்கான விஷயமாகச் சந்தேகப்பட்டபோது, ‘அவருக்குள் ஒரு நல்ல மனிதன் ஒளிந்திருக்கிறான். அவனை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும்!’ என்றார் கிங்.
மார்ட்டின் லூதர் கிங், கறுப்பர்களுக்காக உழைத்தார். அதனால் வெள்ளையர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பர்களுக்காகப் பாடுபட்ட ராபர்ட் கென்னடி கொல்லப்பட்டதோ ஒரு பாலஸ்தீனியரால். அதற்குக் காரணம் இஸ்ரேலின் ‘ஆறு வாரப் போர்’ நடவடிக்கையை அவர் ஆதரித்தார் என்பதுதான். ராபர்ட் கென்னடி இறந்தபோது அதை ஒரு இளைஞனின் பைத்தியக்காரச் செயல்பாடாக அமெரிக்கா பேசியது. உண்மையில், வன்முறைக்கும் பாகுபாட்டுக்கும் எதிரானவர்கள் கொல்லப்படும்போது ஒட்டுமொத்த உலகத்தின் பைத்தியக்காரச் செயல்பாடாகவே அது உருவாகிறது!
- ந.வினோத் குமார்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
ஜூன் 6: ராபர்ட் கென்னடியின் 50-வது நினைவு தினம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago