காஸா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல். ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய பேஜர், வாக்கி-டாக்கிகள் வெடித்து, 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கடந்த வாரம் லெபனானில் இஸ்ரேல் வீசிய குண்டு மழையில், பெண்கள், குழந்தைகள் உள்பட 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு அஞ்சி தெற்கு லெபனானிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் செப்டம்பர் 27இல், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர்.
ஏன் தாக்குதல்? - 2023 அக்டோபர் 7 இல், இஸ்ரேல் மீது ஹமாஸ் (பாலஸ்தீன ஆதரவு இயக்கம்) நடத்திய தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அதில் இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து லெபனான் - இஸ்ரேல் எல்லையில் மோதல்கள் உருவாகியிருக்கின்றன.
பின்னணி: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் ஏற்படுவது முதல் முறை அல்ல; அரை நூற்றாண்டாகவே இப்பகையுணர்வு நீடித்துவருகிறது. 1975 - 1990வரையில் லெபனானில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதில் லெபனானின் தெற்குப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
இஸ்ரேலின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் லெபனானின் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலுக்குப் பின்னால் ஹிஸ்புல்லா அமைப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 1980களில் இஸ்ரேலுக்கு எதிராகச் சக்தி வாய்ந்த அமைப்பாக ஹிஸ்புல்லா வளர்ச்சியடைந்தது.
இம்மோதலில், இஸ்ரேலின் முக்கிய எதிரியான ஈரானின் முழு ஆதரவும் ஹிஸ்புல்லாவுக்குக் கிடைத்தது. பொருளாதாரரீதியாகவும், ஆயுதங்கள் வழங்குவதிலும் ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் உதவி வருகிறது. அதேவேளை, சிரியா அதிபர் பஷார் அல் அசாத்துடனும் ஹிஸ்புல்லா அமைப்பினர் நெருங்கிய நட்பில் இருந்தனர்.
2000இல் இஸ்ரேல் ராணுவம் லெபனானிலிருந்து வெளியேறியது. எனினும் லெபனானின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் இருப்பை ஹிஸ்புல்லா அமைப்பினர் எதிர்த்துவந்தனர். இதன் காரணமாக, 2006இல் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே போர் வெடித்தது. தெற்கு லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாவை வெளியேற்ற இஸ்ரேல் கடுமையாகச் சண்டையிட்டது.
அப்போரில் 1,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், போரில் தாங்களே வெற்றி பெற்றதாக ஹிஸ்புல்லா அறிவித்தது. இஸ்ரேல் உடனான போரைத் தொடர்ந்து படை பலம், ஆயுத பலத்தையும் அவ்வமைப்பு மேம்படுத்தியது.
எப்போதெல்லாம் காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறதோ அப்போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை ஹிஸ்புல்லா வழக்கமாகக் கொண்டுள்ளது.
ஹிஸ்புல்லாக்கள் யார்? - ஹிஸ்புல்லா, லெபனானில் இயங்கும் செல்வாக்குமிக்க ஷியா முஸ்லிம்களின் அரசியல் கட்சி. ஆயுதம் ஏந்திய அமைப்பாகவும் இது செயல்படுகிறது. இவ்வமைப்பினர் லெபனானின் அரசியல் அதிகாரத்திலும், நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பில் சுமார் 1,00,000க்கும் அதிகமான போராளிகள் உள்ளனர். இவர்களில் பலரும் சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்கேற்றவர்கள்.
உலகின் திறன்மிக்க ஏவுகணைகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகளில் அரசைச் சார்ந்திராத, பெரிய ஆயுத அமைப்பாக ஹிஸ்புல்லா அறியப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவைத் தீவிரவாத அமைப்பாகவே பார்க்கின்றன. ஷியா மதகுருவான ஹசன் நஸ்ரல்லா, 1992ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தலைமை வகித்துவந்தார்.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பை அரசியல் - ஆயுதப் படையாக வழிநடத்திச் சென்றதில் நஸ்ரல்லாவின் பங்கு முக்கியமானது. ஈரானுடனும், அதன் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமேனியுடனும் நஸ்ரல்லா நெருங்கிய தொடர்பில் இருந்தவர். நஸ்ரல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் ஐந்து நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் - நஸ்ரல்லா இடையேயான நெருக்கத்தை அறியலாம்.
தாக்குதல் தொடரும்: காஸாவில் ஹமாஸ் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக இஸ்ரேல் குறைத்துக்கொண்டுள்ளது. அதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் தெற்கு லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்தை ஐ.நா. அவை வலியுறுத்தியுள்ளது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. “காஸா போரில் முழு வெற்றியை இஸ்ரேல் அடையும்வரை எங்கள் போராட்டம் தொடரும். ஹிஸ்புல்லா மீதான தாக்குதலும் தொடரும்” என அவர் பதிலளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, நெதன்யாகுவுடன் பேசியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹிஸ்புல்லா அமைப்புக்கு உதவிவரும் ஈரானுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருப்பது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
அடுத்து என்ன? - ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மரணம் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை விரிவுபடுத்தியிருக்கிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரானும் களத்தில் இறங்கும் சூழல் உருவாகலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நஸ்ரல்லாவின் மரணம் ஹிஸ்புல்லாவை பலவீனப்படுத்தியிருந்தாலும், தலைவரின் மரணத்துக்கு இஸ்ரேலைப் பழிவாங்க ஹிஸ்புல்லாவினர் உறுதிகொண்டுள்ளனர். மறுபக்கம், ஹிஸ்புல்லா அமைப்பை முழுவதுமாக அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுவருகிறது. ஹமாஸுடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா பலம் பொருத்திய அமைப்பு. இதை உணர்ந்தே இஸ்ரேலின் அணுகுமுறை வரும் நாள்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago