இந்தியாவில் உயர் கல்வி வசதிகளை உருவாக்க வேண்டும் என்கிற திட்டத்தில் ஆங்கிலேயர்கள் இறங்கியபோது, முதல்கட்டமாக முக்கியமான மூன்று நகரங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. 1857இல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகமும் அவற்றில் ஒன்று. தென்னிந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இதுவே தாய். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர் சி.வி.ராமன், அப்துல் கலாம் போன்றோர் இதன் முன்னாள் மாணவர்கள். இத்தகைய பின்புலம் கொண்ட பல்கலைக்கழகம் விரைவில் மூடப்படுமோ எனப் பேச்சு அடிபடும் அளவுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
அதிகார மோதல்: தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நடந்துவரும் அதிகார மோதல், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் ஓராண்டுக்கும் மேலாகத் துணைவேந்தர் இன்றி இயங்கிவரும் நிலைக்கும் இந்த முரண்பாடே முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ள மாநில ஆளுநர், இணைவேந்தராக உள்ள உயர் கல்வித் துறை அமைச்சர், துணைவேந்தர் ஆகியோர் அதிகாரப் படிநிலை வரிசையில் முன்னணி வகித்தாலும், நடைமுறையில் அந்தந்த மாநில அரசுகள்தான் பல்கலைக்கழகத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் உரிமை செலுத்துவதாக உள்ளன.
துணைவேந்தர் இல்லாததன் விளைவு: சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கௌரி ஆகஸ்ட், 2023இல் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனிச் சட்டம்தான் துணைவேந்தர் நியமனத்துக்கு அடிப்படை. அதன்படி உருவாக்கப்படும் நியமனக் குழுதான் புதிய துணைவேந்தரை நியமிக்கும். இக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரைச் சேர்க்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தியதை ஒட்டிச் சிக்கல் ஏற்பட்டது.
இது மாநில அரசுக்கும் ஆளுநருக்குமான மோதலாக மாறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதுவரை சென்றது. தற்போதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர் கல்வித் துறைச் செயலர் முதலான மூவர் குழு, துணைவேந்தர் பொறுப்பைக் கையாள்கிறது. எல்லாக் கோப்புகளும் இம்மூவரின் பார்வைக்கும் தனித்தனியாகச் சென்றுவரும் நிலை.
அனைத்து வேலைகளும் தாமதம் ஆகின்றன; முக்கியமான முடிவுகள் எடுக்கத் தயங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் பொறுப்பு அதிகாரிதான். துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழாவும் தள்ளிப்போனது. பல மாணவர்கள் படித்து முடித்தும் பட்டம் பெற முடியவில்லை. அவர்கள் உயர் கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்பிப்பதும் சிக்கலுக்கு உள்ளானது.
ஆசிரியர் பற்றாக்குறை: 540 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிய வேண்டிய நிலையில், 193 பேர் மட்டுமே இங்கு உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 1,417 பேர் இருக்க வேண்டிய நிலையில் 460 பேர் மட்டுமே இருப்பதாகவும் ஆசிரியர் / பணியாளர் சங்கங்கள் கூறுகின்றன. கௌரவ ஆசிரியர்களையும் ஒப்பந்தப் பணியாளர்களையும் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொண்டிருக்கிறது.
சில துறைகள் ஓராசிரியரைக் கொண்டும் ஈராசிரியரைக் கொண்டும் இயங்குகின்றன. கௌரவ ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் சில முறை தடைபட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்தப் பணியாளர்களுக்குச் சம்பளம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் தூய்மைப் பணியாளர்களும் அடக்கம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 91 சுயநிதிக் கல்லூரிகள். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறி அக்கல்லூரிகளின் ஆசிரியர்களை செனட் தேர்தலில் பங்குபெற விடாமல் சென்னைப் பல்கலைக்கழகம் முன்பு தடுத்தது. ஒரு பல்கலைக்கழகமாக அது எடுக்கப்பட வேண்டிய சரியான நடவடிக்கைதான்.
ஆனால், தனது ஆசிரியர்களுக்கே உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க இயலாத நிலை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டது. ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் மட்டும் வழங்கப்படுகிறது. கருணைத்தொகை உள்ளிட்ட பிற ஓய்வூதியப் பலன்கள் 2018இலிருந்து நிலுவையில் உள்ளன. முழுமையான ஓய்வூதியப் பலன்களைக் கேட்டுப் போராடிவரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 37 பேர் முதுமை காரணமாக இறந்துவிட்டனர்.
பல்கலைக்கழகமா? தனியார் நிறுவனமா? - ஓய்வூதியம், ஆராய்ச்சி போன்றவற்றுக்கான நிதியை ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்குச் சம்பளம் கொடுக்கப் பல்கலைக்கழகம் பயன்படுத்தியது, இன்னொரு பிரச்சினைக்கு வழிவகுத்தது. தணிக்கை அறிக்கையில் இது ஆட்சேபிக்கப்பட்டதை முன்வைத்து, பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் நிதியை மாநில அரசு குறைத்தது. பல்கலைக்கழகத்தின் செலவில் பாதிக்கும் மேல் அரசின் ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டது.
இதைக் காரணம் காட்டி வருமான வரித் துறை, சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தனியார் நிறுவனமாகக் கருதி, அதற்கேற்ப வரி விதித்தது. முந்தைய 3 ஆண்டுகளாகப் பல்கலைக்கழகம் 424 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறை 2024 தொடக்கத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்தியாவில் எந்த ஓர் அரசுப் பல்கலைக்கழகமும் வருமான வரித் துறையால் இப்படி நடத்தப்பட்டதில்லை. இந்தப் பிரச்சினை பின்னாள்களில் தீர்க்கப்பட்டுவிட்டாலும், பல்கலைக்கழகத்தின் நற்பெயர் கேள்விக்குள்ளானது. மாநில அரசுக்கு மத்திய அரசு ஏற்படுத்தும் மறைமுக நெருக்கடியாகவும் இது பார்க்கப்பட்டது.
தமிழக அரசின் பாராமுகம்: ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதலோடு, பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்திடம் பாராமுகமாக இருந்து வருவதும் பின்னடைவுக்கு இட்டுச்சென்றுள்ளது. நிர்வாகத்தில் குளறுபடி இருப்பின் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு தீர்வுகாண முடியும். சில ஆண்டுகளுக்கு முன் இதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பிரச்சினைகள் எழுந்தன. அப்போது ஐஏஎஸ் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி அரசால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்ட நிகழ்வை ஒரு முன்னுதாரணமாகக் கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எனத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி பல ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுதான் இப்போது எதிர்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு அளிக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகமாக இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி, நிர்வாக நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த நிலையில், தமிழக அரசு அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, 2013இல் அதை அரசுப் பல்கலைக்கழகம் ஆக்கியது. அந்தப் பிரச்சினையோடு ஒப்பிடுகையில், சென்னைப் பல்கலைக்கழகம் எதிர்கொண்டிருப்பது எளிய பிரச்சினைதான்” என்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காந்திராஜ்.
பொற்காலமும் பொறுப்புகளும்: சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட அரசு உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தைத் தக்கவைப்பதில் ஆளுநருக்கு உள்ள அக்கறை வரவேற்கப்பட வேண்டியதே. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்துப் பேசும் சர்க்காரியா குழு, புஞ்சி குழு ஆகியவை ஆளுநர் பதவியில் இருப்பவருக்குப் பல்கலைக்கழக வேந்தருக்கான அதிகாரங்களைப் பல வரம்புகளுக்கு உட்பட்டே வழங்குகின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் அவற்றின் தனி உரிமையை ஆளுநர் மதிக்க வேண்டும். இதுதான் இந்தியா முழுவதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.
மருத்துவரும் கல்வியாளருமான ஆர்க்காடு லட்சுமணசாமி, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் தடம்பதித்த ஒரு துணைவேந்தர். அவரது பணிக்காலத்தில் மாநில முதல்வராகவே இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதை முடிந்த வரை தவிர்க்கும் சூழல் இருந்தது. பல்கலைக்கழகம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என நினைத்ததோடு, அதை உறுதியோடு செயல்படுத்துபவராகவும் லட்சுமணசாமி இருந்தார். காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்கள்கூட, லட்சுமணசாமியின் கொள்கைக்கு மதிப்பு அளித்து முதிர்ச்சியுடன் நடந்துகொண்டனர். இத்தகைய முன்னோடிகள் பணிபுரிந்த இடம் இது.
புத்தொளி பாயட்டும்: துணைவேந்தர் இல்லாமலே சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது. உயர் கல்வித் துறைச் செயலர், துணைவேந்தர் பொறுப்பில் செயல்பட்டுள்ளார். இது மிக அரிதான நடைமுறை. எனினும் நீண்ட காலமாகக் காத்திருந்த 1,300 மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது ஆறுதலை அளிக்கிறது. முந்தைய பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காமராஜரின் ஆட்சி பள்ளிக் கல்வியின் பொற்காலமாகவும் கலைஞரின் ஆட்சி கல்லூரிகளின் பொற்காலமாகவும் இருந்ததைப் போல எனது ஆட்சி உயர் கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
ஏழை மாணவர்களின் உயர் கல்விக் கனவுகளை நிறைவேற்றுவதில் சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவைதான் முன்னிற்க முடியும். நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்குப் புத்தொளி பாய்ச்சுவதன் மூலம் முதல்வர் ஸ்டாலினின் வார்த்தைகள் செயல்வடிவம் பெறட்டும்.
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago