பூரண மதுவிலக்கு சாத்தியமா?

By வைகைச்செல்வன்

கள்ளக்​குறிச்​சியில் கள்ளச்​சா​ராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுவிலக்கு குறித்தான கோரிக்கைகள் நாளும் வலுத்து​வரு​கின்றன. மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மாநிலங்​களுக்கு மத்திய அரசே இழப்பீடு தர வேண்டும் என்கிற கோரிக்கைகளும் மேலோங்கி நிற்கின்றன.

இந்தச் சூழலில், வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்த்தால் சில உண்மைகள் புலப்​படும். காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலம் தமிழ்​நாடுதான் என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியா சுதந்​திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்​தப்​பட்டது. சுதந்​திரத்​துக்குப் பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. மதுவிலக்கு ரத்து செய்யப்​பட்​டதோடு மட்டுமல்​லாமல், மது விற்பனைக்​கென்றே ஒரு நிறுவனத்தை அரசு நிறுவி, அதைச் செயல்​படுத்தி வருகிறது.

அது மட்டுமல்ல, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ண​யித்துச் செயல்​படும் மாநில​மாகத் தமிழ்நாடு இருப்பது வேதனை​யிலும் வேதனை. இந்தச் சூழ்நிலை​யில்​தான், தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

வரலாறு என்ன சொல்கிறது? - தமிழ்​நாட்டில் 1937ஆம் ஆண்டு முதலில் மதுவிலக்கு அமலானது. மதுவிலக்கை ரத்து செய்து​விட்டு, கள்ளுக்​கடைகளைத் திறக்கத் திட்ட​மிட்டது அன்றைய ஆங்கிலேய அரசு. அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்​தார். ஆனால், அந்த எதிர்ப்​பையும் மீறி, 1944ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்​பட்டுக் கள்ளுக்​கடைகள் திறக்​கப்​பட்டன. இந்தியா சுதந்​திரம் பெற்றதற்குப் பிறகு, மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியா​வில், 1971ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியில் தொடங்கி, ஓமந்தூர் ராமசாமி​யார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்​சலம், அண்ணா வரை எந்த முதலமைச்​சரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வர​வில்லை.

திமுக 1967ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய​போது, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்​துரைத்​தனர். மதுவிலக்கை ரத்து செய்தால், 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என அதிகாரிகள் அன்று கூறிய ஆலோசனையை நிராகரித்தார் அண்ணா. ‘மதுவிற்பனை மூலம் வரும் வருவாய், தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்கு​வதற்குச் சமம்’ என்றார். ஆனால், அண்ணாவுக்குப் பின்னர், தமிழக முதல்வரான மு.கருணாநிதி மதுவிலக்கை நீக்கினார். 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய திமுக அரசு மதுவிலக்கை ரத்து செய்து அவசரச் சட்டம் கொண்டு​வந்தது. இதன் பின்னணியை ஆராய்ந்​தால், வியப்பாக இருக்​கும்.

அப்போது இந்தியாவில் பல மாநிலங்​களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத​தால், மதுவிலக்கை நடைமுறைப்​படுத்தும் மாநிலங்​களுக்கு மானியம் வழங்கப்​படும் என மத்திய அரசு அறிவித்தது. ‘தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது; எனவே, எங்களுக்கும் மானியம் தர வேண்டும்’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்ட​போது, அதை ஏற்க மறுத்து​விட்டது மத்திய அரசு.

மதுவிலக்கும் நீக்கமும்: ஏற்கெனவே மதுவிலக்கை நடைமுறைப்​படுத்​தி​யுள்ள மாநிலங்​களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு கூறியது. ‘மதுவிலக்கை நடைமுறைப்​படுத்​தி​யதற்கு இப்படியொரு தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பிய தமிழ்​நாடு, பின்னர் மதுவிலக்கை நீக்கும் முடிவை எடுத்தது.

பல ஆண்டுக் காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு திடீரென ரத்து செய்யப்​பட்டது மக்களிடையே பெரும் விமர்​சனத்தை ஏற்படுத்​தியது. அதையும் மு.கருணாநிதி சமாளித்​தார். ‘அக்னி வளையத்​துக்குள் இருக்கும் கற்பூர​மாகத் தமிழ்நாடு இருக்​கிறது. நான் என்ன செய்வது? மற்ற மாநிலங்​களில் மதுவிற்பனை நடக்கும்போது நான் மட்டும் என்ன செய்ய முடியும்?’ எனச் சாமர்த்தி​ய​மாகப் பதிலளித்தார் அவர். இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்​படுத்​தியது.

எனினும், 1974ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்​தியது. 1983இல் எம்.ஜி.ராமச்​சந்​திரன் ஆட்சி​யின்போது மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. 1987ல் மீண்டும் மதுவிலக்கு அமலானது. 1990 முதல் 1991 வரை பிளாஸ்டிக் பைகளில் மலிவு விலை மதுவை விற்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 1991இல் முதல் முறையாகத் தமிழக முதலமைச்​சராகப் பொறுப்​பேற்ற ஜெ.ஜெயலலிதா முதல் கையொப்ப​மிட்டு இதனை ரத்து செய்தார்.

தொடர்ந்து கள்ளச்​சா​ராயம் பெருகியதால் பலர் உயிரிழந்​தனர். அப்போது தனியார் வசம் மதுக்​கடைகள் இருந்​த​தால், பெரும் பணத்தை அவர்களே ஈட்டி வந்தார்கள். 2001இல் ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு அவ்வரு​மானங்கள் அரசு நிறுவனமான ‘டாஸ்​மாக்’ நிறுவனத்தின் கட்டுப்​பாட்டுக்குள் கொண்டு​வரப்​பட்டன. இன்று தேசிய அளவில் அதிக வருவாயை ஈட்டித்​தரும் பொதுத் துறை நிறுவனம் டாஸ்மாக்​தான். இவ்வரு​மானத்தின் மூலம் அரசு நடைபெறு​வதும் பெரும் சர்ச்​சைகளை ஏற்படுத்​திவரு​கிறது.

தமிழகத்தில் குடிப்​பழக்கம் இன்று பரவலாகி​விட்டது. தமிழகத்தில் 28.5 சதவீதம் ஆண்கள் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்​ளனர். இவ்விஷ​யத்தில் அகில இந்திய அளவில் தமிழகத்​துக்கு 19ஆவது இடம். முதலிடம் சத்தீஸ்கர். இந்தியாவில் 7இல் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். பதின் பருவத்​தினரிடமும் மதுப்​பழக்கம் பரவலாகி​விட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தி​யாகும்.

மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டா​யத்தில் நாம் இருக்​கிறோம். சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்​கியம் ஆகியவற்றைப் பாதிக்கும் மிகப்​பெரிய பிரச்​சினையாக மது அருந்தும் பழக்கம் இருக்​கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அரசின் கடமை: மதுவிலக்கை அமல்படுத்​தினால் கள்ளச்​சா​ராயம் பெருகி​விடும் என்று கூறுவதை ஏற்றுக்​கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்​றனர். காரணம், கள்ளச்​சா​ராயம் விற்கப்​பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மதுவிலக்கு அமல்படுத்​தப்​பட்​டால், இப்போது மது குடிப்​பவர்​களில் 10 சதவீதம் பேர் வேண்டு​மானால் சாராயம் அருந்​தலாம். ஆனால், மது குடிப்​போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாகக் குறைந்​து​விடும் என்பதை மறுப்​ப​தற்​கில்லை.

இதன்மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதை வாங்கி அருந்​துவது எப்படித் தவறாகும் என்பது மது குடிப்​போரின் வாதமாக உள்ளது. எனவே, அரசு மது விற்பனையைக் கைவிடும் நிலையில், மது குடிப்​போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் ஐயம் இல்லை. மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்​பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தி​யமில்லை என்று சிலர் கூறுகின்​றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.

இன்னொரு புறம், மதுவிலக்கு அமலானால் அண்டை மாநிலங்​களில் சர்வ சாதாரணமாக மதுபானங்கள் கிடைப்​பதைக் காரணமாக்கி அங்கு சென்று மது அருந்​துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கிவந்து விற்பதோ மிக எளிதாகி​விடும். விலை குறைவு என்ற ஒரே காரணத்​துக்​காகப் புதுவையில் இருந்து ஏராளமான மதுபானங்கள் அண்டை மாநிலங்​களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்​படுத்த முடிய​வில்லை. அப்படி​யிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால், வெளியில் இருந்து மதுவைக் கொண்டு​வரு​வதை​யும், அங்கு சென்று குடிப்​ப​தையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.

குடிக்​கின்ற ஒவ்வொரு​வரும் மனம் மாறினால்தான் குடிப்​பழக்​கத்தை முழுமையாக ஒழிக்க முடியும். மிகப்​பெரிய மக்கள் எழுச்சி வந்தால்​தான், அரசும் சேர்ந்து மதுக்​கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்​தா​லும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்​படுத்து​கிறபோது மிகப்​பெரிய மாற்றத்​துக்கான ஒரு புதிய பாதை ஒன்று நிச்சயம் உருவாகும்!

- தொடர்புக்கு: mlamailid@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்