பசுமை வழிச்சாலைக்கு தேவை என்ன?- உலுக்கும் ஒற்றை கேள்வி

By இரா.தினேஷ்குமார், எஸ்.விஜயகுமார், வி.சீனிவாசன்

 

சே

லம் - சென்னை இடையே கண்டிப்பாக பசுமை வழிச் சாலை அமைந்தே தீரும் என்ற முதல்வரின் அறிவிப்பு, சேலம் தொடங்கி சென்னை வரையிலான 6 மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுமைக்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கின்றனர். எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

பசுமை வழிச் சாலையை நிறைவேற்றினால் என்ன பாதிப்பு வரும், என்னென்ன சாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை கண்டறிய ‘தி இந்து’ நிருபர் குழு களமிறங்கியது. சம்பந்தப்பட்ட பகுதிகளையும் மக்களின் கருத்தையும் அலசும் சிறப்புச் செய்திதான் இது.

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிப்பாதையாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சேலம்-சென்னை இடையிலான பயண நேரத்தை 3 மணி நேரமாக குறைத்திடும் வகையில் அமைக்கும் இந்த சாலை சென்னை வண்டலூரை அடுத்துள்ள சுற்றுச்சாலை அருகே தொடங்கி சேலத்தை அடுத்த அரியானூர் அருகே முடிவடையும். இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நில எடுப்பு பணிக்காக அரசாணை எண்.85, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (HV1), நாள். 21.5.2018-ன்படி நிலம் கையகப்படுத்த அந்தந்த மாவட்டத்திலும் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கையகப்படுத்தப்பட உள்ள நிலம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தில் சுக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், அக்ரஹார பூலாவரி, ஜருகுமலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, மஞ்சவாடி (காப்புக்காடு), அரமனூர், ஆச்சாங்குட்டபட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர் ஆகிய 23 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

சேலத்துக்கும் சென்னக்கும் இடையே தற்போது உள்ள வழித்தடங்கள் விவரம்:

1. ஆத்தூர்-கள்ளக்குறிச்சி வழி: சேலம் - ஆத்தூர் - கள்ளக்குறிச்சி - விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை சென்றடைய சுமார் 296 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலை உள்ளது. இதில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், 8 புறவழிச் சாலைகளும் இதுவரை 4 வழிச்சாலையாக மாற்றப்படவில்லை. இவற்றை 4 வழிச்சாலையாக மாற்றினால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

2. தருமபுரி-கிருஷ்ணகிரி-வேலூர் வழி: சேலம்-தருமபுரி-கிருஷ்ணகிரி-ஆம்பூர் - பள்ளிகொண்டா - வேலூர் - ஆற்காடு - ஸ்ரீபெரும்புதூர் வழியாக 354 கிமீ, பயணித்து 6 மணி நேரத்தில் சென்னை சென்றடைய முடியும். இதில் சேலம்-கிருஷ்ணகிரி வரை 4 வழிச்சாலையும், கிருஷ்ணகிரி-சென்னை வரை 6 வழிச்சாலையும் உள்ளது.

3. அரூர்- ஆம்பூர் வழி: சேலம் - அரூர் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - ஆம்பூர் - வேலூர் வழியாக 329 கிமீ, பயணித்து 6.30 மணி நேரத்தில் சென்னை சென்றடைய முடியும். இந்த சாலையில் சேலம் முதல் ஆம்பூர் வரையில் இரு வழிச்சாலையும், ஆம்பூர்- தொடங்கி சென்னை வரை 6 வழிச்சாலையும் உள்ளது.

இவை தவிர சேலம்- திருவண்ணாமலை- திண்டிவனம்- சென்னை, சேலம்-திருவண்ணாமலை-சேத்பட்- வந்தவாசி- காஞ்சிபுரம்- சென்னை ஆகிய வழித்தடங்களும் உள்ளன.

சிறப்பான ரயில் வசதி

சேலம் - சென்னை இடையே 2 ரயில் வழித்தடங்கள் உள்ளன. இதில் சேலம்-ஜோலார்பேட்டை- அரக்கோணம்- சென்னை. இந்த வழித்தடம் 353 கிமீ தூரம் கொண்டது. தற்போது இதில் சேலம் - சென்னை இடையே 8-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்பாதை இரட்டை மற்றும் மின் மயமாக்கப்பட்ட பாதை என்பதால் சேலம் - சென்னை இடையே அதிக எண்ணிக்கையில், அதிவேக ரயில்களை இயக்க முடியும். தற்போது சராசரியாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயண நேரம் 6 மணி நேரமாகிறது. ரயில் பாதையை பலப்படுத்தி, ரயில்களின் வேகத்தை அகலப்படுத்தினால் பயணம் நேரம் சுமார் 2 மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.

அடுத்து சேலம்-விருத்தாசலம்- எழும்பூர் வழித்தடம். 340 கிமீ தூரம் கொண்ட இந்த அகல ரயில்பாதையில் சென்னைக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் சேலம் - விருத்தாசலம் வரையில் மட்டும் ஒற்றை வழிப்பாதை. விருத்தாசலத்தில் இருந்து எழும்பூர் வரை இரட்டை மற்றும் மின் மயமாக்கப்பட்ட பாதையாக உள்ளது. சேலம்-விருத்தாசலம் இடையிலான பாதையை மட்டும் இரட்டை மற்றும் மின்மயமாக்கிவிட்டால் சென்னைக்கு தடையின்றி ரயில்களை இயக்க முடியும். அவ்வாறு செய்தால் பயண நேரத்தை 5 மணி நேரமாக குறைத்திட முடியும்.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது 1.11.2007-ல் கேரளா - தமிழகம் இடையே சேலம் வழியாக ‘சரக்கு போக்குவரத்துக்கான பாதை (ஃப்ரைட் காரிடர்) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் சேலம்-சென்னை இடையே தடையற்ற சரக்கு ரயில் சேவையை நடத்திட முடியும். இதுபோன்ற திட்டங்களை செய்வதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.

கடலின் ஆழத்தில் உள்ள ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்று கூறி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியவர்கள், பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மழை தரக்கூடிய வனப்பகுதிகளையும் விவசாயத்தையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய சாலை அமைப்பது யாருடையை வளர்ச்சிக்கானது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கேள்வி எழுப்புகிறார், தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் டி.ஹரிஹரன் பாபு.

சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து வசதி உள்ளது. சேலத்தில் தினமும் காலை 11 மணி புறப்படும் விமானம், காலை 11.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக விமானங்களை இயக்கினால் பயணிகளுக்கு விரைவான போக்குவரத்து சேவை கிடைக்கும். போதிய பயணிகள் இல்லாததால் 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் மீண்டும் தொடங்கியது.

உலா வரும் சந்தேகங்கள்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை அமைப்பதால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பு எதுவும் தற்போது வரை உறுதி செய்யப்படாத நிலையில், விவசாயம் மட்டுமே தெரிந்த, விளை நிலத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கானோரை வெளியேற்றினால் அவர்களது எதிர்காலம் என்னவாகும்?

வறட்சி காலங்களில் விவசாய பணிகள் கிடைக்காதபோது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் அவலம் நிலவுகிறது. மேலும், செம்மரம் வெட்டுவதற்காக சென்று உயிரை பலி கொடுப்பதும் சேலம், திருவண்ணாமலை மாவட்ட மக்களே. இப்போது நிரந்தரமாக விளை நிலம் பறிக்கப்பட்டு, விவசாயம் குறையும்போது, இந்த பகுதி மக்களின் எதிர்காலம் என்னவாகும்?

சேலத்தில் கஞ்சமலை, திருவண்ணாமலையில் கவுந்திமலை, தருமபுரி அரூர் ஆகிய இடங்களில் மலைகளிலும், நிலத்தடியில் உள்ள கனிம வளங்களை தோண்டி சென்னை துறைமுகம் வரை எடுத்துச் செல்வதற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொதுமக்களின் நலனுக்காக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்று உறுதி கூற முடியுமா?

சென்னை- பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் (Industrial Corridor) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால், சேலம்- சென்னைக்கு 8 வழிச்சாலை அமைக்கும் அளவுக்கு முக்கிய வர்த்தக காரணங்கள், வேலைவாய்ப்பு காரணங்கள், சாலையோர தொழிற்சாலைகள் (Industrial Corridor) என எவ்வித தேவையும் மக்களிடம் கோரிக்கையும் இல்லாதபோது ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்து, இயற்கை சமநிலையை சீர்குலைத்து பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

தமிழகத்தில் நீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், நதிகளை இணைக்க வேண்டும், புதிய அணைகளை கட்ட வேண்டும், மரங்களை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மேற்கண்ட மொத்த கோரிக்கைகளுக்கு சற்றும் பொருந்தாத பொதுமக்களிடம் கோரிக்கையே எழாமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன?

இந்த ஒற்றை கேள்வியை மக்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

மாற்றமா...? ஏமாற்றமா...?

சேலத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பசுமை வழி சாலைக்காக கையகப்படுத்தப்படும் என்ற தகவல் மாவட்ட விவசாயிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 38 கிமீ தூரத்துக்கு அமையவுள்ள சாலையால் தென்னை, பாக்கு, வாழை, அரளி, மல்லி பூந்தோட்டங்கள் அழியும். சேர்வராயன் மலை, அறநூற்றுமலை, கல்ராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, ஜருகு மலை ஆகிய மலைகளின் தோற்றம் மாறும். ஜருகுமலையை 3 இடங்களில் குடையப்படும். சேலம்- சென்னை வழித்தடத்தில் ஆறு ஆற்றுபடுகை குறுக்கே பிரமாண்ட பாலம் கட்டப்படும். இவ்வாறு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, இயற்கை வளங்கள் சீரழிவை தடுக்க முடியாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

கெஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறியதாவது: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து, சர்க்கரை நோயால் கால்களை இழந்தும், விவசாயத்தை விடாமல் செய்து வருகிறேன். விளை நிலத்தை அழித்து, சாலை வசதி செய்வது என்பது கண்களை குருடாக்கி, ஓவியத்தை ரசிக்க வைப்பதை போன்றது. ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபணை கடிதம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தருமபுரி மாவட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள 8 வழிச் சாலை தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டம் தீர்த்தமலை அடுத்த தாம்பல் கிராம பகுதியில் நுழைகிறது. பின்னர் வேடகட்டமடுவு, தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சின்னாங்குப்பம், கொக்கராபட்டி, பாம்பம்பாடி, இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட ஊர்கள் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர் பகுதியில் முடிகிறது. பின்னர் சேலம் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து விடுகிறது. நிலம் கையகப்படுத்தப் படலாம் என்ற தகவலால் விளைநிலங்களையும் வீடுகளையும் இழக்க நேரலாம் என்ற அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள். இதனால் கடந்த 2 மாத காலமாக இப்பகுதியில் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஆனால், சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் தெரிவித்ததால், சாலை அமையவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், காவல்துறையின் பெரும் படையை துணைக்கு வைத்துக் கொண்டு நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், அப்பகுதி விவசாயிகளில் பலரும் அறவழி போராட்டங்களில் இறங்கிட தயாராகி வருகின்றனர். ஆனால், அதை சீர்குலைக்கும் விதமாக காவல் துறை மூலம் மிரட்டல் தொனியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், விவசாயிகளை குழுக்களாக பிரித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மீது பரவலாக புகார் எழுந்துள்ளது.

பாப்பம்பாடி பகுதியைச் சேர்ந்த வேலு கூறும்போது, “தருமபுரி நகரம் எங்களுக்கு பூர்வீகம். 7 ஏக்கர் நிலம் வாங்கி பாப்பம்பாடியில் குடியேறினோம். உழைப்பால் சொர்க்க பூமியாக மாற்றி வைத்துள்ள நிலத்தை திடீரென அரசு பறித்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும். எங்களின் 7 ஏக்கரில் சாலைக்கு கையகப்படுத்தியது போக சுமார் 2 ஏக்கர் மிஞ்சும். அதுவும் சாலைக்கு கிழக்கே 1 ஏக்கர், மேற்கே 1 ஏக்கர். ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு செல்ல நாங்கள் 20 கிலோ மீட்டர் சுற்றி அலைய வேண்டும். எனவே, நிலத்தை தர மாட்டோம். மீறி அளவிடவும், சாலை அமைக்கவும் வந்தால் வாகனங்கள் முன்பாக படுப்போம். சிறைக்கு அனுப்பினாலும் கவலையில்லை. வெளியில் வந்து மீண்டும் சாலையில் தான் குடிசை அமைப்போம்” என்கிறார்.

அதேபோல, இருளப்பட்டி அடுத்த சின்னப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவரும், விவசாயுமான சந்திரகுமார், ‘எட்டு வழிச் சாலைக்கு நிலம் அளிக்க மறுப்போர் குழு’ என்ற பெயரில் குழுவை உருவாக்கி விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் கூறும்போது, ‘விவசாயிகளின் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தினால் உயிரை ஆயுதமாக்கி போராடுவோம். மணமாகாத 3 பிள்ளைகளை வைத்துள்ள நான், அரசு தரும் இழப்பீட்டைக் கொண்டு எத்தனை நாள் வாழ முடியும். அதனால் இந்த களத்திலேயே என் உயிர் போகட்டும்’ என்கிறார் ஆவேசமுடன்.

வனப்பகுதியில் 13 கி.மீ.

பசுமை வழிச்சாலையின் மொத்த தூரம் 274.3 கிமீ. இதில் 13.290 கிமீ அடர் வனப்பகுதி ஊடாக வருகிறது. இதற்காக வனத்துறையின் செங்கல்பட்டு சரகத்தில் சிறுவஞ்சூர், சாத்தனூர் சரகத்தில் பிஞ்சூர், திருவண்ணாமலை சரகத்தில் சொரகொளத்தூர், ஆரணி சரகத்தில் நம்பேடு, போளூர் சரகத்தில் அழியாலமங்களம், செங்கம் சரகத்தில் முன்னார்மங்கலம், அனந்தவாடி, ரவண்டவாடி, தீர்த்தமலை சரகத்தில் பூவம்பாடி, பூவம்பாடி விரிவாக்கம், அரூர் சரகத்தில் நொனங்கனூர், பள்ளிப்பட்டி விரிவாக்கம், சேர்வராயன் சரகத்தில் மஞ்சவாடி கணவாய், ஜருகுமலை ஆகிய வனப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனியாருக்கு சொந்தமான விளை நிலம், வீடுகள், அரசுக்கு சொந்தமான நிலம் ஆகியவையும் கையகப்படுத்தப்பட உள்ளது.

சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட நிலைமை இவ்வாறு இருக்க திருவண்ணாமலை மாவட்ட நிலவரம் குறித்து நாளை பார்க்கலாம்.

(தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்