சிந்துவெளிப் பண்பாடு பற்றிய பொதுவெளி உரையாடல்கள் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்திருக்கின்றன. 1924 செப்டம்பர் 20ஆம் நாள் சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டுச் சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன என்கிற ‘மைல்கல் உணர்வு’ நூற்றாண்டு (2024) விழிப்புணர்வை விரிவாக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
வரலாறு என்பது முக்கியமானதும் தவிர்க்க முடியாததும் மட்டும் அல்ல; தப்பிக்கவும் முடியாதது. கடந்த காலம் என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி. அது கதைகளிலும் கரிமக் கணக்குகளிலும் மட்டும் அடங்குவது அல்ல; அது நம்முடன் நடந்தும்வருகிறது, மீள்நினைவுகளாக. வரலாறு என்பது பள்ளிப்பாடம் மட்டும் அல்ல; சமூகத்துக்கான படிப்பினையும்கூட.
இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர்மய வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்கள் மைய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையே சேரும்.
“சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பப்பட்ட நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், வளமான எழுத்தறிவோடும் வாழ்ந்துள்ளனர்” என்ற ஜான் மார்ஷலின் கருத்து இந்தியத் துணைக்கண்ட வரலாற்று எழுத்தியலின் போக்கைப் புரட்டிப்போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்பதென்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது.
» அதிரடியாக சதம் விளாசியது எப்படி? - மனம் திறக்கும் அஸ்வின் | IND vs BAN முதல் டெஸ்ட்
» இந்திய ஸ்டார் பேட்ஸ்மேன்களை ‘சம்பவம்’ செய்த ஹசன் மஹ்முத் யார்?
திராவிடக் கருதுகோள்: இந்தியத் தொல்லியல் துறை ‘திராவிடக் கருதுகோள்’ (Dravidian Hypothesis) என்ற சாத்தியம் நோக்கி நகர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் அறிவிப்புக்குப் பின்னர் நேர்ந்த மிகப் பெரிய மாற்றம் இது. ‘ஆரியர்களுக்கு முற்பட்ட சில தொல்குடிகள் இந்து மதம் என்று தற்போது அறியப்படும் சமய மரபுக்குள் ஒருபோதும் வந்து சேரவில்லை.
அத்தகைய தொல்குடியினரின் தாய்த்தெய்வ வழிபாடு, குறிப்பாக, பூமித்தாய் வழிபாடு மிக வலுவானது; மிக ஆழமாக வேரூன்றியது. இந்தியாவிலும் சரி, வேறு எங்கும் சரி... ஆரியர்கள் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த எந்த இடத்திலும், பெண் தெய்வங்கள் கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்குத் தாய்த்தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தப்பட்டதற்குச் சான்றுகள் எதுவும் இல்லை’ என்று ஜான் மார்ஷல் எழுதியுள்ளார்.
டிசம்பர் 1924இல் சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிடக் கருதுகோளைத் தெளிவாக முன்வைத்தார். 1925 தொடக்கத்தில் இதற்கு மாற்றான இந்தோ-ஆரியக் கருதுகோள்களும் தோன்றின. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி, பண்பாடு ஒரு விடுகதை என்றால், திராவிடம் இந்தோ-ஆரியம் என்ற இரண்டு நிலைப்பாடுகளும் தொடர்கதை போலவே தோன்றுகின்றன.
பரந்து விரிந்த ஹரப்பா பண்பாட்டு நிலப்பகுதியில் ஒரே வகையான மக்கள் வாழவில்லை. அதில் உள்ள பொறிப்புகளைப் பார்த்தாலே தெரியும்; அழகான பின்னலாடையை உடுத்திய நகர மனிதர்கள், அணிகலன்களை அணிந்தவர்கள், எருமையுடன் சண்டையிடுபவர்கள், எருமை மாட்டின் கொம்பை வைத்து நடனமாடுபவர்கள், பலி கொடுப்பவர்கள், தாய்த் தெய்வங்கள், கடலில் பயணிப்பவர்கள் என்று இந்தப் பொறிப்புகள், முத்திரைகள் பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அதே நேரத்தில் செங்கற்கள், எடைக்கற்கள், உலோகக் கலவை, ஒரே மாதிரியான பொறிப்புகள் என்கிற தரம் சார்ந்த ஒழுங்கும் காணப்படுகிறது. வெளிநாட்டு வணிகமும் செழித்திருந்தது. அத்தகைய சூழலில் பொதுவான தொடர்புமொழி என்பது தவிர்க்க முடியாத வளர்ச்சிப் படிநிலை. ஆனாலும் அம்மொழியை இதுவரை நம்மால் வாசிக்க இயல்வில்லை. அதனால், சிந்துவெளி மொழிப் புதிர் தொடர்கிறது.
சிந்துவெளி மக்கள் எங்கே போனார்கள்? - சிந்துவெளியின் வாழ்க்கைமுறையில், பொருளாதாரத்தில் ஏதோ ஒரு பெரிய நலிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் வாழ்க்கை கட்டுப்படியாகவில்லை என்றால், வேறோர் இடத்துக்குப் புலம்பெயர்வது மனித இயல்பு. அதுதான் சிந்துவெளியிலும் நடந்திருக்கக்கூடும். நீண்ட வறட்சி, பஞ்சம் - பட்டினி, பெரும்வெள்ளம், நிலநடுக்கம், வணிகச்சரிவு, புதிய மொழி /பண்பாட்டினரின் வருகை என்று காரணம் எதுவாகவும் இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுக்காரணிகள் இருக்கலாம். காரணம், எதுவாகினும் அவர்களில் ஏராளமானோர் புலம்பெயர்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகத் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நகர்ந்துள்ளார்கள்.
சிந்துவெளி மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்பதற்குத் தொடர்ச்சியான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. குஜராத், லோத்தல், தோலாவிரா, ராஜஸ்தான் முதலிய இடங்களில் முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிந்தைய கால ஹரப்பா பண்பாட்டின் தடயங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள தைமாபாத்தில் உள்ளன. கடல் சார்ந்தவர்கள் கடல் சார்ந்தே நகர்வார்கள் என்றால், அவர்கள் கடற்கரையை ஒட்டி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்திருப்பதற்கே கூடுதல் வாய்ப்பு உண்டு.
சிந்துவெளி மக்களின் புலப்பெயர்வை ஆராய்வதில் மட்பாண்டங்கள் உதவுகின்றன. மட்பாண்டங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், அந்தக் காலக்கட்டத்தில் கங்கை, யமுனை பகுதி சதுப்புநிலமாக இருக்கிறது. மேல் கங்கை சமவெளிப் பகுதியில்தான் சாம்பல் பழுப்புநிறப் பாண்டங்களைப் பயன்படுத்திய ஒரு பண்பாடு உருவானது. அந்தப் பண்பாட்டுடன் தொடர்பற்றவர்கள் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களை உருவாக்கிய மக்கள்.
சிந்துவெளியில் அதிகமாக இருப்பது செந்நிறப் பாண்டம். தெளிவாகக் கறுப்பு-சிவப்பு நிறப் பாண்டம் குஜராத் சூழலில் காணப்படுகிறது. குஜராத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிலையில், சிந்துவெளி மக்கள் கிழக்கு நோக்கி தபதி நதியை ஒட்டியே நகர்ந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கவும் போதிய தடயங்கள் உள்ளன. இதுதான் இந்திய வரலாற்றின் பானைத்தடம்.
மரபணுவியல் ஆய்வுகளின் வழி: தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லியமானவை என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் ஆகத் தொன்மையான மரபணுத்தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இம்மக்களுடன் ஈரானிய வேளாண், வேட்டைக்குடியினரின் குருதிக் கலப்பால் ஹரப்பா பண்பாடு உருவானது. இந்த ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கெனவே இங்கிருந்த தொல்தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள்தொகை உருவானது.
இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்வெளி) மேய்ச்சல் பண்பாட்டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்தொகையும் கலந்து உருவானதே. இன்னொரு வகையில் சொல்வதெனில், இன்றைய தெற்காசிய மக்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் ஹரப்பா பண்பாட்டு மக்கள்தொகையோடு தொடர்புடையவர்களே.
ஏன் கொண்டாட வேண்டும்? - சிந்துவெளி மக்கள் யார் என்கின்ற கேள்வியும், திராவிட மொழிக் குடும்பம், இந்தோ ஆரிய மொழிக் குடும்பங்களின் வழித்தடங்கள் பற்றிய கேள்வியும் நெருக்கமான தொடர்புகொண்டவை.
பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் ஆழிப் பேரலை போன்ற கடல் சீற்றத்துக்கு இரையானதை நாம் மீள்நினைவாகப் பதிவுசெய்துள்ளோம். தென் மதுரை, கபாடபுரம், மதுரை, முதல், இடை, கடைச் சங்கங்கள் என்று நமது இயற்கைப் பேரிடர்கள் சார்ந்த மீள்நினைவுகளோடு சேர்ந்து புலப்படுவது இழந்த நூல்களும், இழந்த பண்பாடும், இழந்த நகரங்களும்தான். இந்த நினைவலைகளின் ஊடான ஒற்றை உண்மை புலப்பெயர்வுகள்தான். பயணங்களால் பட்டைதீட்டப்பட்ட ஒரு பண்பாட்டின் நடுநெஞ்சில் இருந்துதான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’; ‘எத்திசைச் செலினும் அத்திசை சோறே’ என்பன போன்ற புரிதல்கள் புலப்படும்.
“இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதரும் புலம்பெயர்ந்தவர்; ஒவ்வொருவரும் வேறெங்கிருந்தோ வந்தவர்தான்” என்கிறார் கவிஞர் எலிசா கிரிஷ்வோல்ட். இப்போது நாம் இருக்கும் இடத்தில்தான் யுகம் யுகமாய் முளைத்து, வளர்ந்து, நகராமல் நிற்கிறோம் என்பது போன்ற மண் சார்ந்த பேரினவாதங்களால் நமது மொழி, இன அடையாளங்களைக் கட்டமைக்க முயல்கிறோம். பலரும் முன்னிறுத்துவதுபோல இந்தியா ஒரு உருக்குப் பானை (melting pot) அல்ல.
அது ஒரு ‘சாலட் கிண்ணமும்’ அல்ல. இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மியத்தை மழைக்காட்டுப் பன்மியம் (Rainforest Pluralism) என்று உச்சிமுகர்ந்து கொண்டாட வேண்டும். வெவ்வேறு மொழி பேசுவோர் கூடி வாழும் பெருநகர, ஒத்திசைவு வாழ்க்கைமுறைக்கான ஒற்றை ஆவணச் சான்று சங்க இலக்கியம்தான். அதனால்தான் சிந்துவெளிப் பண்பாட்டைச் சங்க இலக்கியம் என்கிற திறவுகோல் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்கிற முன்மொழிதலை வலியுறுத்துகிறோம்.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்துவெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நின்று பேசுகின்றன.
- ஆர்.பாலகிருஷ்ணன், தொடர்புக்கு: balakrishnan.irc@rmrl.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago