காலத்தை மீறிய திரைப்பயணம்

By ஆசை

ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ (2001: A Space Odyssey) படத்தை முதல் தடவை பார்த்து முடித்தவுடன் இந்தப் படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தேன். ஆனால், அடுத்த சில நாட்கள் அந்தப் படம் என் ஆழ்மனதில் ஏதோ ரசவாதம் செய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. 1968-ல் முதன்முறையாக இந்தப் படம் வெளியானபோது பெரும்பாலானோரின் நிலையும் இதுதான். தொடக்கத்தில், ‘ரொம்பவும் கொட்டாவி விட வைக்கும் படம்’ என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. ஒருசில நாட்களில் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. படம் யாருக்கும் புரியவில்லை என்றாலும், மக்கள் கூட்டம் திரையரங்குக்குப் படையெடுத்தது. இதற்கு ஹிப்பிகளும் முக்கியக் காரணம். போதை மருந்து உட்கொள்ளும்போது அனுபவிப்பதுபோன்ற உணர்வுகளை இந்தப் படத்தில் அவர்கள் கண்டுகொண்டார்கள். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘இதோ கடவுள், இதோ கடவுள்’ என்று கத்தியபடி ஒருவர் ஓடியிருக்கிறார். விளைவு, படம் ‘கல்ட் ஹிட்’!

நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகள் கூட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு சிறிய தண்ணீர்க் குட்டையை யார் உரிமை கொள்வது என்று குரங்குக் கூட்டங்கள் இரண்டுக்கும் இடையிலான போராட்டம். இதற்கிடையே அந்த இடத்தில் கறுப்பாக ஒரு செவ்வகக் கல் ஒன்று நிற்கிறது. (இயற்கையில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் கிடையாது). அந்தச் செவ்வகக் கல்லைச் சுற்றி என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் குரங்குகள் சத்தம் போட்டபடி ஓடுகின்றன. அந்தக் கல் ஏதோ ஒருவகையில் அங்குள்ள குரங்கொன்றிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறந்து கிடந்த விலங்கொன்றின் எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி எதிரிக் கூட்டத்துக் குரங்கொன்றைக் கொன்று தண்ணீர்க் குட்டையின் உரிமையைக் கைப்பற்றுகிறது குரங்கு. அதற்குப் பிறகு நாற்பது லட்சம் ஆண்டுகளைக் கடந்து 2001-க்குக் கதை செல்கிறது. அதே போன்றதொரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் வீரர்கள், அவர்களில் சிலரைக் கொன்றுவிடும் ஹால் எனும் கணினி, அதனைக் ‘கொல்லும்’ பிரதான பாத்திரமான டேவிட் போமேன் (Keir Dullea), காலவெளியூடான அவரது பயணம், விசித்திரக் காட்சிகள் என்று ஒட்டுமொத்தமாக நாற்பது லட்சம் ஆண்டுகளைத் தாண்டிப் பயணிக்கிறது படம்.

உலகின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க்கின் ‘தி சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக்கப்புள்ளி. அந்தக் கதையை குப்ரிக்கும் கிளார்க்கும் சேர்ந்து நாவல் வடிவில் விரிவாக்க ஆரம்பித்து, அதன் அடிப்படையிலேயே படமும் உருவாக்கப்பட்டது. புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருந்தாலும், இந்தப் படத்தில் விளக்கங்கள் ஏதும் அளிக்கவில்லை குப்ரிக். மாறாக, பார்வையாளர்களை அவர்களுக்கு விருப்பமான விளக்கங்களைக் கொடுத்துக்கொள்ளத் தூண்டினார். ஒருவகையில் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டபோது ‘உருவாக்கப்படவில்லை’; பார்க்கப்பட்டபோதுதான் ‘உருவாக்கப்பட்டது’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் பிரதான புதிர், செவ்வகக் கல்தான். மனித இனமே தோன்றியிராத காலத்தில் அவ்வளவு பளபளப்பாக உருவாக்கப்பட்ட அந்தக் கல்லைக் குரங்குகளிடையேயும், நிலவிலும், வியாழனுக்கருகேயும் யார் வைத்தது? பார்வையாளர்கள் இந்தப் புதிரை அவிழ்ப்பதை விட புதிரில் மூழ்க வேண்டும் என்றே குப்ரிக் விரும்பினார். மற்றுமொரு முக்கியமான விஷயம் மனித உணர்வுள்ள ஹால் கணினி. செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் துளிர்விடவே ஆரம்பிக்காத காலத்தில் அதனால் மனிதகுலத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி தீர்க்கமான எச்சரிக்கையை இந்தப் படத்தில் விடுத்திருக்கிறார் குப்ரிக்.

1968-ல் வெளியான இந்தப் படத்தின் பெரும்பாலான கதைக்களன் 2001-ல் நடப்பதால், உண்மையில் 2001-ல் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடியவர்கள் தன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கக் கூடாது என்பதில் குப்ரிக் உறுதியாக இருந்தார். அதனால், திரைப்பட சிறப்பு வடிவமைப்பாளர்களை விடுத்து, உண்மையான அறிவியலாளர்களையும் நாசாவின் தொழில்நுட்பப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார் குப்ரிக். விண்கலம், அதன் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம், விண்வெளி வீரரின் உடைகள், கணினி என்று எல்லாவற்றிலும் தன் காலத்தை மீறிய சித்தரிப்பை குப்ரிக் தந்திருக்கிறார். படம் வெளியான 50 ஆண்டுகள் கழித்துத் திரும்பிப்பார்க்கும்போது, நாசாவே குப்ரிக்கிடம் பின்தங்கியிருப்பதை உணர முடிகிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்பத் துல்லியம் பற்றி நாசா தன் இணையதளத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. இந்தப் படத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை மனிதகுலம் இனிதான் செயல்படுத்த வேண்டும் என்றும் இறுதியில் நாசா கூறுகிறது.

இந்தப் படத்தின் தொடக்கப் பகுதியில் ஒரு காட்சி வரும். எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட குரங்கு, வெறியாட்டத்தில் எலும்பை வான் நோக்கித் தூக்கியெறியும். மேலே சென்று கீழ்நோக்கி வரும்போது அது 40 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக் கலமாக உருவெடுக்கும். மனித இனத்தை உந்தித்தள்ளும் எறிதல் அது. அதுபோன்று திரையுலகத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளிய மாபெரும் எறிதல் என்றே ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ திரைப்படத்தைச் சொல்லத் தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்