உ
லகிலேயே, பெண்கள் வாழ அச்சுறுத்தல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றிருப்பதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் இடம்பெற்ற நாடுகள் இடைப்பட்ட ஆண்டுகளில் தங்கள் போக்கை மாற்றியிருக்கக்கூடும்; தவறுகளிலிருந்து பாடம் கற்றிருக்கக்கூடும் என அந்நிறுவனம் கருதியது. அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் ஆய்வை நடத்தியது. இந்த முறை நாம் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்திருக்கிறோம்.
ஒருபுறம், இது இந்தியாவுக்கே அவமானம் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், உலக அரங்கில் இந்தியாவை மட்டும் குற்றம்சொல்லும் வகையில் மேற்கத்திய ஊடகங்கள் நடந்துகொள்கின்றன என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி நாம் பேச வேண்டிய விஷயங்கள் இன்னமும் மீதம் இருக்கின்றன.
உலக அளவில்…
பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையை மட்டும் அல்லாமல் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்குக் கிடைக்கிற மருத்துவ உதவி, பணப் புழக்கம், பாலியல் வன்முறை, பாலியல் சாராத வன்முறை, ஆட்கடத்தல் போன்றவை அதில் முக்கியமானவை. இந்தப் பட்டியலின் மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, இந்தியா கீழேதான் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பண்பாடு – கலாச்சாரம் ஆகியவற்றின் பேரால் கற்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், அடிமைப் பணிக்காகவும் பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்படுதல் ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
2012-ல் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, உலகத்தின் பார்வையை இந்தியா மீது திருப்பியது. அதைத் தொடர்ந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் சட்ட வரையறையில் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என மத்திய அரசு வாக்களித்தது. இத்தனைக்குப் பிறகும், பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத்தான் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. காஷ்மீர் மாநிலம் கதுவாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஓர் உதாரணம்.
இது போன்ற ஆய்வறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் சரிப்பதற்காகச் செய்யப்படும் வேலை எனச் சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள். பெண்கள் மீது அதிகரித்துவரும் வன்முறையை அரசே பதிவுசெய்திருக்கிறது என்பதுதான் அது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, 2012-ல் பெண்கள் மீதான வன்முறை 41.7%-ஆக இருந்தது. 2016-ல் அது 55.2%-ஆக உயர்ந்திருக்கிறது. அதே ஆண்டில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான குற்றங்களில் வழக்கு பதியப்பட்டும் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
மறைக்கப்படும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருமளவு குறைந்துவிட்டதாகச் சட்ட மன்றத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், இங்குதான் ரயில் நிலையம், பேருந்து நிலையம், தேவாலயம், கல்லூரி வளாகம், வீடு என எல்லா இடங்களிலும் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்; அமிலம் வீசித் தாக்கப்படுகிறார்கள்; வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால், கொலை வரை நீளும் குற்றங்கள் மட்டுமே பொதுமக்களின் கவனத்துக்கு வருகின்றன. வெளியில் தெரியாமல் எத்தனையோ குற்றங்கள் நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன.
பொதுவாக, இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படுவதில்லை. இதில் குடும்ப வன்முறை குறித்துச் சொல்லத் தேவையில்லை. காரணம் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அம்சங்களில் குடும்ப அமைப்பு முக்கியமானதாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. எது நடந்தாலும் பொறுத்துபோகப் பழக்கப்பட்ட பெண்கள், தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைக்கூட வாழ்க்கையின் அங்கம் என நினைத்து அவற்றுக்குப் பழகிவிடுகிறார்கள். திருமண வல்லுறவு குறித்து யாருமே வாய் திறப்பதில்லை. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அது முடிந்துவிட வேண்டும் என்பதைத்தான் இந்தச் சமூக அமைப்பு விரும்புகிறது.
யாருடைய பொறுப்பு?
2007-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016-ல் பெண்கள் மீதான வன்முறை 83% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. முன்பு இருந்ததைவிடப் பெண்கள் இப்போது துணிச்சலோடு வெளியே வந்து புகார் செய்கிறார்கள்; எதையும் பொறுத்துக்கொள்வதில்லை எனவும் இதைப் புரிந்துகொள்ளலாம். அப்படியே இருந்தாலும் பெண்கள் மீதான குற்றங்களின் சதவீதம், புறக்கணித்துச் செல்கிற அளவுக்குக் குறைவாக இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உலகமயமாக்கலும் பாலினப் பாகுபாடும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பெண்களைச் சந்தைப் பொருளாக மட்டுமே பார்க்கிற மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து எளிதில் தப்பமுடிவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறினால் என்ன செய்வது என்ற குழப்பத்தாலேயே பெரும்பாலான பெண்கள் குடும்ப வன்முறையைச் சகித்துக்கொள்கிறார்கள். அப்படியே மீறி குடும்பத்தைவிட்டு வெளியேறும் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் இந்தச் சமூகம் மதிப்புடன் நடத்துவதில்லை. பெண்கள் பின்னடைவைச் சந்திப்பதற்கும் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவதற்கும் பொருளாதார தற்சார்பின்மை முக்கியக் காரணம். இப்படியான பின்னணியில் இருந்துதான் பெண்களின் இருப்பை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அபாய மணியாக நினைத்துச் செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’, ‘தங்க மகள் சேமிப்புத் திட்டம்’, ‘குடும்ப வன்முறை தடைச் சட்டம்’ எனத் திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் அவை முழுவீச்சில் அவற்றுக்குரிய நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்!
- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு:
brindha.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago