அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!

By ஆசை

ல்லூரிக் காலகட்டத்தில் எங்கள் நண்பர்கள் குழுவுக்குள்ளே இளையராஜா இசை சார்ந்து இரண்டு பிரிவுகள் உண்டு. ‘மெட்டி ஒலி காற்றோடு’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’, ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’, ‘பருவமே புதிய பாடல் பாடு’ போன்ற ராஜா பாடல்களை அதிகமாகக் கேட்கும் எங்கள் குழு. ‘ஏதோ மோகம்’, ‘சந்தத்தில் பாடாத கவிதை’, ’ சின்ன தாயவள்’ போன்ற பாடல்களைக் கேட்கும் தனிநபர் குழுவாக ஒரு நண்பர்! “உங்களை வித்தியாசமானவங்களாக் காட்டிக்கணும்னு அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிப்பிடிக்கிறீங்க” என்று அந்த நண்பர் எங்களைக் குற்றம்சாட்டுவார். கொஞ்ச காலம் கழித்து அந்த நண்பர் எங்களிடம் சொன்னார், “ஆமாம், அந்தப் பாடல்கள்லேயும் என்னமோ இருக்குடா.”

‘என்னமோ இருக்கு’, ‘என்னமோ செய்யுது’, ‘எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போவுது’ என்று சொல்வதெல்லாம் இசைஅறிவை வைத்தோ, தொழில்நுட்பத்தை வைத்தோ அல்ல. சொற்களில் திட்டவட்டமாக விவரிக்க முடியாத வகையில் ராஜாவின் இசை நமக்கு அளிக்கும் உணர்வையும் அது எழுப்பும் கற்பனையையும் வைத்து. இளையராஜாவைப் பிடிக்கும் என்று சொல்வது அவ்வளவு வழக்கமாகிப் போய்விட்ட விஷயம். அப்படி இருக்கும்போது நண்பர் ஒருவர் இளையராஜாவைப் பிடிக்காது என்று சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். ஏன் பிடிக்காது என்று அவரிடம் கேட்டேன். “நினைவுகளைத் தருகிறார். அந்த நினைவுகள் யாவும் ஏங்கித் தவிக்க வைக்கும் நினைவுகள்” என்றார். உண்மையில் இது ராஜாவுக்கான இன்னொரு பாராட்டு. நடந்தவற்றின் நினைவுகளை மட்டுமல்ல, நடக்காதவற்றின் நினைவு களையும் இல்லாதவற்றின் நினைவுகளையும் தரக்கூடியவை ராஜாவின் பாடல்கள்.

நம் கனவுகள் ஏன் நமக்கு அற்புதமாகத் தோன்றுகின்றன? நம் கனவுகளில் பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக இருப்பதில்லை. மனிதர்கள், காலம், இடம், சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று குழம்பிப்போய், ஒரு கலங்கலான உணர்வு தோன்றுவதால் கனவுகள் நமக்கு ஏற்படுத்தும் அற்புத உணர்வு உருவாகிறது. கனவுகள் அவற்றைக் காணும் நேரத்தில் அல்ல, உண்மையில் அவற்றை நினைவுகூரும் நேரத்தில்தான் அற்புதமாகத் தோன்றும். ஏனெனில், விழித்தபின் அவற்றில் பெரும்பாலான பகுதிகள் நமக்கு மறந்துபோய், இனம்புரியாத ஒரு உணர்வு மட்டும் நீடிக்கும். அந்த உணர்வை இழைபிடித்துக்கொண்டு போகும்போது இங்கொன்றும் அங்கொன்றும் கனவின் விஷயங்கள் நமக்கு நினைவுக்கு வரும்.

பேருந்தில் பயணிக்கும்போதோ அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதோ நாம் காணும் பொருளும் காட்சிகளும்கூட கனவின் மறக்கப்பட்ட ஒரு பகுதியை நமக்கு மீட்டுத்தரும். பெரும்பாலும், கனவை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. ஆனால், அதை நினைவுகூர முயலும் தருணங்கள் ரொம்பவும் அழகானவை. இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் பெரும்பாலானவை கனவை நினைவுகூர்வதற்கான தருணங்களைப் போன்றவை. சமயத்தில் அது கனவாக இல்லாமல் பூர்வஜென்ம வாசனை போன்ற நினைவுகளை (பூர்வஜென்மம் என்று ஒன்று இருக்குமானால்) நமக்குள் மீட்டுத்தருவனவாக மாறும். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’ போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அப்படித் தான் தோன்றும் எனக்கு.

இளையராஜாவின் இசையைப் பொறுத்தவரை அவருடைய மகத்தான சாதனையாக அவரின் இசை நுணுக்கங்கள், இனிமை, ராகங்கள், பாடகர் தேர்வு போன்றவற்றைப் பலர் குறிப்பிடுவதுண்டு. நான் நம் மனதில் அவர் இசை எழுப்பும் கற்பனைதான் அவருடைய பிரதானமான சாதனை என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவருடைய இசையில் வெளிப்படும் தொழில்நுட்பம் கேட்கும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால், அவர் இசை நம் மனதில் எழுப்பும் உணர்வுகளும் கற்பனைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்கேயான உலகைப் படைப் பதற்கான, தங்களுக்கேயான நினைவுகளை, கற்பனைகளை நிரப்பிக்கொள்வதற்கான இடைவெளிகளைக் கொண்டிருக்கும் இசை அவருடையது.

அதாவது, அங்கே இளையராஜா இசை நிகழ்த்துபவராகவும் நாம் அதைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் இல்லாமல் இளையராஜாவுடன் சேர்ந்து நாமும் இசை நிகழ்த்துகிறோம். இசைக் குறிப்புகள் அவருடையவை. அவற்றில் நம் மனதும் அதன் கற்பனைகளும் போய் உட்கார்ந்துகொள்கின்றன. ஒரே இளையராஜா தன் இசை வழியாக அவரவருக்கான இளையராஜாவைத் தருவதுதான் அவருடைய மகத்தான சாதனையாக நான் கருதுகிறேன். வாசகருக்குள் விதவிதமான கற்பனைகளைத் தருவதற்கு இடமளிக்கும் எழுத்துகளை உயர்ந்த எழுத்துகளாக இலக்கியத்துக்குள் கருதுவதுண்டு. இசையிலும் அதுபோல்தான், மகத்தான இசைக் கலைஞர்கள் பலரும் இப்படிச் செய்வதுண்டுதான். ஆனால், நம் மண்ணில் நமக்கு அதை விதவிதமாகச் செய்துகாட்டியவர் இளையராஜாதான். அந்த அளவுக்கு இசை கேட்பவரின் படைப்பூக்கத்துக்கான இடைவெளியை உருவாக் கித் தந்தவர்.

சமீபத்தில் ‘குவாண்டம் உயிரியல்’ என்ற புதிய அறிவியல் துறையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். நமது மூக்கு எப்படி வாசனையை உணர்கிறது என்பதை குவாண்டம் அறிவியல் அடிப்படையில் விளக்கினார்கள். மூக்கும் காதைப் போலக் கேட்கிறது என்றார்கள். அதாவது, வாசனையின் இசையை மூக்கில் உள்ள வாசனை ஏற்பிகள் கேட்கும் நிகழ்வுதான் முகர்தல் என்றார்கள். இதில் விநோதம் எது தெரியுமா? வந்து சேரும் வாசனை அணுக்கள் தங்களுக்கிடையில் பிணைப்புகளைத் தந்திக் கம்பிகள்போல் கொண்டிருக்கும்; அவற்றை நம் மூக்கின் ஏற்பியில் உள்ள எலெக்ட்ரான்கள் மீட்டும். அவையே மீட்டி அவையே இசையைக் கேட்கின்றன என்று அந்த ஆவணப்படம் விவரித்தது. வாசனை அணுக்களும் அவற்றில் நம் எலெக்ட்ரான் மீட்டும் இசையும் மூளையின் வெவ்வேறு பகுதியில் சென்றுசேர்ந்து, அது தொடர்பான நினைவுகளையும் நம்மிலிருந்து எழுப்பிவிடுகின்றன என்றும் ஆவணப்படம் விளக்கியது.

இளையராஜாவின் இசையை அறிவியல்பூர்வமாக விளக்கியதுபோல் இருந்தது அந்த விளக்கம். இளைய ராஜாவின் இசையும் வாசனைதான். அதை நம் செவியின் அணுக்கள் மீட்டி நினைவுகளாக நமக்குத் தருகின்றன. நாம் மீட்டுவதற்கு இளையராஜா தரும் தந்திதான் அவருடைய இசை. அவரவருக்கான இசை. அவரவருக்கான ராஜா!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்