நிழல் உலகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சிய ஜே.டே.!

By ந.வினோத் குமார்

த்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியல் கார்சியா மார்கேஸ் “இதழியலில், புலனாய்வு இதழியல் என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா இதழியலுமே அடிப்படையில் புலனாய்வு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்” என்பார். நிழல் உலகம் குறித்து பிரத்யேகமான தகவல்களை எழுதிவந்த பத்திரிகையாளர் ஜோதிர்மயி டேயின் இதழியல் அப்படியான ஒன்றுதான். மும்பையை நடுங்கச் செய்த நிழல் உலகத்தினரைப் பற்றி, மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் ஜே.டே. என்று அழைக்கப்படும் ஜோதிர்மயி டே. அதற்கு விலையாகத் தனது உயிரையே கொடுத்தவர் அவர். 2011 ஜூன் 11 அன்று அவர் கொல்லப் பட்டார்.

மும்பையின் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரைப் பற்றி அவர் வெளியிட்ட செய்திகள், காவல் துறையினருக்குப் பெருமளவுக்கு உதவியாக இருந்தன. அந்தச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், பல குற்றங்கள் தடுக்கப்பட்டன. நிழலுலகத்தைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பலர் கைதுசெய்யப் பட்டனர்.

குற்ற உலகைப் பதிவுசெய்தவர்

நிழல் உலகத்தைப் பற்றி டேவுக்குப் பழுத்த அனுபவம் இருந்தது. அந்த அனுபவங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் ‘கல்லாஸ்’(2008), ‘ஜீரோ டயல்’(2010) ஆகிய புத்தகங்களை எழுதினார் டே. ‘ஜாய்க்கோ’ பதிப்பக வெளியீடான அந்த இரண்டு புத்தகங்களும் அவை வெளியான சமயத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. இரண்டு புத்தகங்களும் 2011-ல் அதே பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதாவது, டே கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவை மீண்டும் புத்தகக் கடைகளை எட்டியிருந்தன.

ஜே.டே.யின் முதல் புத்தகமான ‘கல்லாஸ்’, உண்மையில் நிழல் உலகத்தைப் பற்றிய ஒரு அகராதி என்றுதான் சொல்ல வேண்டும். நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் மொழி, சொல்லாடல், சங்கேதக் குறியீடுகள் குறித்து அந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார். அந்தச் சொற்களின் வழியே, நிழல் உலகத்தின் வரலாறு, பின்னணி, முக்கியமான நபர்கள் போன்றவை பற்றியும் விவரித்திருந்தார்.

நிழல் உலகின் அசல் முகம்

நிழல் உலகத்தைப் பற்றி, திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்திருந்த கற்பிதங்களை அந்தப் புத்தகம் உடைக்கிறது. நிழல் உலகத்தில் வெவ்வேறு பின்னணி கொண்ட பலர் இயங்கியதைக் குறிப்பிட்டிருக்கிறார் ஜே.டே. ‘த்ரில்லர்’ வகை நாவல்களுக்குப் பெயர்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய நாவல்களைப் படித்துவிட்டு, அதேபோல திட்டங்களை வகுக்கும் ஆட்கள் அங்கு இருக்கிறார்கள். ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் உண்டு. அணு இயற்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். ‘புரானா மந்திர்’ என்ற படத்தில், பேயாக நடித்த முகமது இக்பால் ஷேக் (இவர் பின்னாளில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்) போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.

1990, 2000-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மிக முக்கிய மான என்கவுண்ட்டர்களில் பங்கெடுத்த ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றியும், மும்பை வாழ் தமிழர்களின் ‘காட் ஃபாத’ராக விளங்கிய வரதராஜ முதலியாரின் ஆரம்ப கால வழ்க்கையைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார் ஜே.டே.

சங்கேத மொழி

‘நான் ஆக்ஸிடென்ட் ஆயிட்டேன்’ (நான் போலீஸாரால் துரத்தப்படுகிறேன்), ‘நான் அட்மிட் ஆயிட்டேன்’ (நான் கைது செய்யப்பட்டுவிட்டேன்), ‘ஆர்ட்டிஸ்ட்’ (துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த நபர்) ‘ரூட் பஸ் நம்பர் 11’ (கொலை செய்துவிட்டு, கார்களைப் பயன்படுத்தாமல், ஓடித் தப்பிப்பது) போன்ற, நிழல் உலகத்தினர் தினசரி பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளைப் பற்றி புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் டே. இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு, சில தாதாக்கள் துபாய்க்குத் தப்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, கொஞ்ச காலத்துக்கு அங்கிருந்துகொண்டே, இந்தியாவில் உள்ள தங்களது குழுக்களை நிர்வகிப்பார்கள். ‘நான் கிராமத்துக்குப் போறேன்’ என்று சொன்னால், ‘நான் துபாய்க்குப் போறேன்’ என்று அர்த்தமாம்!

அவரது இரண்டாவது புத்தகம், போலீஸுக்கும் நிழல் உலகத்தினருக்கும் தகவல்களை வழங்குகிற ‘இன்ஃபார்மர்’களைப் பற்றியது. அவரது புத்தகங்களைப் படிக்கும்போது, நிழல் உலகம் தொடர்பான அவரது அறிவும் அனுபவமும் நம்மை வியக்கவைக்கின்றன. அதேசமயத்தில், இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்த அவர், நிழல் உலகத்தினருக்கு எவ்வளவு ஆபத்தானவராக இருந்திருப்பார் என்பதை யும் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ‘ஆபத்தை’ நிழல் உலகத்தினர் விட்டுவைப்பார்களா? ஜே.டே. சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது கொலைக்குக் காரணமான சோட்டா ராஜன் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேருக்குக் கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜே.டே-யின் ஏழாவது நினைவு தினத்தில் இது ஆறுதல் தரும் செய்தி. நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை உலகின் பேனா ஒன்றுக்கு நீதி கிடைத்திருப்பது, நீதித் துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்டுகிறது!

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு : vinothkumar.n@thehindutamil.co.in

ஜூன் 11: ஜோதிர்மயி டே நினைவு தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்