‘கருப்பர் நகரம்’ முதல் சிங்கார ‘சென்னை’ வரை: தொல்லியல் பேராசிரியர் சு.இராசவேல் பகிர்வு | சென்னை தினம் சிறப்பு

By ஜி.காந்தி ராஜா

“சிங்காரச் சென்னை என்று இன்று வழங்கப்படும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் வரலாறு ஏதோ ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் வளர்ச்சி கண்டு இன்று பெருநகரமாக உருவாகியுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பதை இந்நகரத்தின் தொன்மையான வரலாற்றைப் படித்தால் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்” என்கிறார் தொல்லியல் பேராசிரியர் சு.இராசவேல்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் கடல்சார் தொல்லியல் துறையின் தலைவராகவும் பணியாற்றி பணி நிறைவு செய்தவர் இவர். ஆசிரியப் பணியில் சேர்வதற்கு முன், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுக் கிளையில் கல்வெட்டு வல்லுநராகவும் பணியாற்றியுள்ளார். சென்னையில் கல்வெட்டுக்கான மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இவர் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து, ஏராளமான புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார்.

23 நூல்களையும் 90-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு சோழ வரலாற்றுச் சங்கத்தால் வழங்கப்பெற்ற தொல்லியல் துறைக்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ இவர் மேனாள் நீதிபதி கிருபாகரன் கரங்களால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தினத்தை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய வரலாற்றில் மனித இனத்தின் தொடக்கம்: “இந்திய வரலாற்றில் மனித இனத்தின் தொடக்கம் இந்த நகரத்தில் இருந்துதான் தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா? சென்னைக்கு அருகில் இன்றைக்கு பல்லாவரம் என்று வழங்கப்படும் பல்லவபுரத்தின் மலைப்பகுதிகளில் 1863-ஆம் ஆண்டு பழங்கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கோடரி ஒன்றைக் கண்டுபிடித்து உலகுக்கு முதலில் அறிவித்தார் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர்.

அதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பழங்கற்கால மனிதன் விட்டுச் சென்ற கைக்கோடரிகள் பெருமளவில் அவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி 17 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே சென்னையின் வரலாறு என்பது பழங்கற்காலம் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற்று விளங்கியது என்பதை அறிய முடிகிறது.

சங்க காலத்தின் தொண்டை மண்டலத்தில் பல கோட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக சென்னை விளங்கியது. சென்னைப் பகுதியில் புலியூர் கோட்டம் புழற்கோட்டம் போன்ற கோட்டங்களும், கோட்டூர் நாடு, எழுமூர் நாடு, அம்பத்தூர் நாடு, ஞாயறு நாடு போன்ற நாடுகளும் இருந்தன. பல ஊர்களும் பட்டினங்களும் பாக்கங்களும் குப்பங்களும் நிறைந்த பகுதியாக சென்னைப் பெரும்பகுதி விளங்கி வந்தது. இந்நகரத்தில் பல தொன்மை வாய்ந்த கோயில்களும் இருந்துள்ளன.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாடி என்கிற திருவலிதாயம், திருவேற்காடு, திருவொற்றியூர், வேளச்சேரி, கோயம்பேடு, திரிசூலம், வடபழநி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயில், போரூர், திருமுல்லைவாயில், வில்லிப்பாக்கம், பிரம்பூர், நெய்த வாயில், அயன்புரம், ஆதம்பாக்கம், புலியூர், தரமணி ஆகிய ஊர்களில் சிவாலயங்களும் திருமாலுக்குரிய கோயில்களும் இருந்துள்ளன.

தொல்லியல் பேராசிரியர் சு.இராசவேல்

மாதரசன் பட்டணம்: இந்நகரத்தின் பழமையான பெயர் மாதரசன் பட்டணம். மாதரசன் பட்டணம் மிகச் சிறந்த துறைமுக நகரமாக விளங்கி வந்துள்ளது. இன்றைய மீன்பிடி துறைமுகமாக விளங்கி வருகின்ற ராயபுரம் பகுதியே அக்காலத்தில் மாதரசன் பட்டணம் என விளங்கி வந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது கப்பல்களை நிறுத்துவதற்கும் பண்டக சாலைகள் அமைப்பதற்கும் இத்துறைமுகத்துக்கு அருகில் மற்றொரு துறைமுகத்தை உருவாக்கினர். எதற்கும் பயன்பெறாமல் இரண்டு சிறிய ஆறுகளுக்கு இடையில் இருந்து களிமண் பூமியாக விளங்கிய தீவுத்திடல் பகுதியில் தங்களது கோட்டையையும் கட்ட விரும்பினர்.

இந்த நிலப் பகுதி இன்றைய சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள அரசு மருத்துவமனைப் பகுதி வரை நீடித்து இருந்தது. இதனை நரி மேடு என அக்காலத்தில் அழைத்தனர். கடற்கரை ஒட்டிய பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்ட சந்திரகிரி மன்னரிடம் அனுமதி கேட்கின்றனர். மன்னரும் எதற்கும் பயன்படாத இப்பகுதியை ஆங்கிலேயருக்கு அளிக்கின்றார். அதன் நினைவாக சந்திரகிரி மன்னரின் பெயரில் சென்னப்பநாயக்கன் பட்டணம் என இப்பகுதியை தங்களது அலுவலகக் குறிப்புகளில் எழுதத் தொடங்கினர். இதனை மதராஸ் பட்டணம் என்றும் அவர்களது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில் வணிக நடவடிக்கைகளுக்காக பண்டக சாலைகளையும் தங்களது வங்கிகளையும் ஆங்கிலேயர்கள் குடியிருப்புகளையும் ராணுவ வீரர்கள் தங்கும் பகுதிகளையும் அமைத்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை ‘வெள்ளையர் நகரம்’ என அழைத்தனர். அவர்களுக்குப் பணியாற்றிய இந்தியர்கள் சிலரது குடியிருப்புகளும் கோட்டை பகுதிக்குள் அக்காலத்தில் இருந்தன.

மெரினா கடற்கரை


கருப்பர் நகரம்: ஆங்கில உயர் அதிகாரிகளும் அவர்களது மனைவிகளும் நாள்தோறும் நடைபயிற்சி செய்ய கோட்டையின் வெளியே வடக்கில் எல்பின்ஸ்டன் சாலை என்ற சாலையை உருவாக்கினர். ஏனெனில் அக்காலத்தில் கோட்டையின் கிழக்கில் கடற்கரைச் சாலை இல்லை. கோட்டையின் கிழக்குப் புறச்சுவர் கடலின் அலைகளால் சூழப்பட்டு இருந்தன. கிழக்குக் கடற்கரைச் சாலை பிற்காலத்தில்தான், கடல் பின்னோக்கி சென்ற பின் உருவாக்கப்பட்டது. எல்பின்ஸ்டன் சாலையின் வடக்கிலும் மேற்கிலும் இருந்த பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த பகுதியாகும். இதனை ‘கருப்பர் நகரம்’ என ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் இந்நகரத்தில் பல குளங்கள், ஏரிகள், ஆறுகள் இருந்தன. ஏரிகள் நிரம்பிய பகுதிகளின் பக்கங்களில் பல ஊர்களும் இருந்தன. நுங்கம்பாக்கம், புதுப்பாக்கம் (புதுப்பேட்டை) கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு இடையில் பெரிய ஏரி ஒன்று இன்றைய தியாகராய நகர் வரை இருந்தது. இதன் வடக்குக் கரை அமைந்த கரை என வழங்கப்பட்டு இன்று அமஞ்சி கரை ஆகிவிட்டது.

தியாகநகர் பகுதியில் இருந்த ஏரி நிலங்கள் அதிகமாக இருந்த மாம்புலம் பகுதிகளுக்கு வேளாண்மைக்கு நீரை அளித்தன. மாம்புலங்கள் இருந்த பகுதியே இன்று மாம்பலம் என வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஏரியை அழித்தே கடந்த நூற்றாண்டில் தியாகராய நகர் மற்றும் அருகிலுள்ள பல பகுதிகள் உருவாயின.

மாதரசன் பட்டணம் துறைமுகத்தில் வந்த கப்பல்களுக்கு விஜய நகர காலத்தில் வரி வசூல் செய்யப்பட்டதை கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. மாதரசன் பட்டணம் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பின் பிழையால் மதராஸ் பட்டணம் என மருவி அச்சொல் தமிழ்ச் சொல்லல்ல எனக் கருதப்பட்டு ஆங்கிலேயர்கள் புதியதாக வைத்த சென்னப் பட்டணத்தின் பெயரால் இன்று சென்னைப் பட்டணம் என அழைக்கப்பட்டு வருகின்றது.

பேசின் பிரிட்ஜ்

இந்நகரம் முழுவதுமாக ஆறுகளும் அவற்றின் கால்வாய்களும் ஓடியதால் 1800-களில் ஆங்கிலேயர்கள் நகரம் முழுவதும் பல பாலங்களை கட்டினர். சைதாப்பேட்டை பாலம் 1776 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோன்று எழுமூருக்கு அருகில் ஆண்ட்ரிஸ் பாலம் 1817ம் ஆண்டும், பாந்தியன் சாலையில் காலேஜ் பாலம் 1829, காமண்டர் இன் சீப் பாலம் 1825, சேத்துப்பட்டு மன்றோ பாலம் 1824, பேசின் பிரிட்ஜ் 1807-லும் கட்டப்பட்டன. எனவே சென்னை நகரைச் சுற்றி நீர் வளமும், நில வளமும் பெற்ற ஊர்கள் பல இருந்தன. கடற்கரைப் பகுதிகளில் பட்டணங்களும் மீனவர்கள் குடியிருப்புகளும் இருந்தன.

நுங்கம்பாக்கத்திலுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் 1792ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆகாசத்திலிருக்கும் உருவங்களைக் காண்பதற்கு அனுகூலமாக இந்த அலுவலகம் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. அதேபோன்று விலங்குகளுக்கான மருத்துவச் சாலை பெரிய மேடு வேப்பேரி அருகில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இதனை ஆர்தர் எல்பங்க் ஹேல்பாக் என்பவர் 1899 ஆம் ஆண்டு உருவாக்கினார்.

பழைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் உள் பகுதி...

இந்தியாவின் இரண்டாவது இருப்புப் பாதை: இந்தியாவின் இரண்டாவது இருப்புப் பாதை இந்நகரில் தான் போடப்பட்டது. ராயபுரத்திலிருந்து வாலாஜாப்பேட்டைக்கு ரயில் பாதை 1853-ஆம் ஆண்டு போடப்பட்டு முதல் தொடர்வண்டி 1856-ஆம் ஆண்டு வாலாஜாப்பேட்டைக்கு புறப்பட்டது. அதில், அன்றைய சென்னை கவர்னர் ஹாரிஸ் பிரபு இத்தொடர் வண்டியில் தனது சக ஆங்கில அலுவலர்களுடனும் சீமாட்டிகளுடனும் பயணம் மேற்கொண்டார். இத்தொடர் வண்டியில் 300-க்கும் மேற்பட்ட ஆங்கில அலுவலர்கள் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் வாலாஜாபேட்டை அடைந்ததும் அத்தொடர்வண்டி நிலையத்தின் அருகில் இருந்து அம்மூரில் பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது தொடர்வண்டி ராயபுரத்திலிருந்து தமிழர்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வரை சென்று திரும்பியது. ஆங்கிலேயர்கள் அக்காலத்தில் கர்நாடகப் போர்களில் ஈடுபட ஆற்காடு வரை இத்தொடர் வண்டிப்பாதை பெரிதும் பயன்பட்டது. 1922 வரை ராயபுரமே தென்னிந்திய தொடர்வண்டிப் பாதையின் தலைமையிடமாகச் செயல்பட்டது. இங்குள்ள தொடர்வண்டி நிலையம் அக்காலத்தில் மிகப்பெரிய பரப்பளவில் செயல்பட்ட பின்னரே தெற்குப் பகுதிகளுக்குச் செல்ல எழுமூர் தொடர்வண்டி நிலையமும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்குச் செல்ல சென்ட்ரல் தொடர்வண்டி நிலையமும் செயல்பட்டது.

பெயர்களின் உச்சரிப்பு மாற்றத்தால் நாம் மாதரசன் பட்டணத்தை மறந்தோம். அதேபோன்று ஆங்கிலேயர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட பல பகுதிகளின் பெயர்களும் தெருக்களின் பெயர்களும் உச்சரிப்பு பிழைகளால் மருவி வழங்கப்பட்டும் வருகின்றது. காலடிப்பேட்டை என்ற பகுதி ஆங்கில அலுவலர் காலட் என்பவரின் பெயரால் காலட் பேட் என வழங்கி வந்தது. இவரே இப்பகுதியில் நெசவுத்தொழில் செய்யும் மக்களை குடியமர்த்தியவர். தற்பொழுது காலடிப்பேட்டை என இப்பகுதி வழங்கி வருகின்றது. காலால் தறி நெய்யப்படுவதால இப்பெயரும் பொருத்தமாகவே தற்பொழுது விளங்குகிறது.

கொலைகாரன் பேட்டை: குலசேகரப் பேட்டை என்ற பெயர் சென்னை நகரின் ஒரு பகுதியாக முன்பு விளங்கியது அது கொலைகாரன் பேட்டை என மருவி வழங்கப்பட்டு வருகின்றது. வில்லிப்பாக்கம் வில்லிவாக்கம் ஆகிவிட்டது. பசுக்கள் அதிகமாக வளர்க்கப்பட்ட பகுதியாக ஆகுடி என்னும் பகுதி தற்பொழுது ஆவடி ஆகிவிட்டது. பிரம்பூர் என்பது பெரம்பூர் என்று மருவி விட்டது.

காலத்தின் வேகத்தால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் சென்னை மாநகரம் தமிழகத்தின் மக்களை மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்நகரத்திற்கு வந்து வாழ்ந்து வரும் மக்களுக்கும் ஓர் அபய நகரமாக இன்றளவும் தனது தனித்தன்மையை இழக்காமல் சென்னைத் தமிழை வளர்த்து வரும் சிங்காரச் சென்னையாக விளங்கி வருகின்றது என்பது மறுப்பதிற்கில்லை” என்கிறார் தொல்லியல் பேராசிரியர் சு.இராசவேல்.

2024 ஆகஸ்ட் 22 - சென்னைக்கு வயது 385

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE