வீ
ட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று விதவிதமான தோட்டங்களை வைத்து பலரும் வீட்டிலேயே இயற்கை விவசாயம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டம், குளச்சலில் மாடித் தோட்டம் மட்டுமின்றி வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பு,இயற்கை எரிவாயு தயாரிப்பு, சூரிய மின் சக்தி தயாரிப்பு, மரச் செக்கு எண்ணெய் தயாரிப்பு என்று இயற்கையைச் சார்ந்த தற்சார்பு பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்கள் கிளான்ஸ்டன் – நேசசுஜாதா தம்பதியர்!
குளச்சல் நகராட்சிக்குபட்ட பகுதியில் இருக்கிறது இவர்களின் வீடு. வெளியில் அடிக்கும் வெயிலின் உக்கிரத்தை வீட்டுக்குள் நுழையவிடாமல் பார்த்துக்கொள்கிறது இயற்கை வேளாண்மைமுறையிலான மாடித் தோட்டம். கிளாஸ்டனிடம் பேசினேன். “என் மனைவி நேசசுஜாதாதான் தோட்டத்துக்கு பொறுப்பு. கத்திரி, வெண்டை, தக்காளி, அவரைக்காய், பச்சைமிளகாய், பாகற்காய்,கீரை வகைகள்ன்னு அன்றாட வீட்டுத்தேவைக்கு தேவையான எல்லா காய்கறிகளும் நிக்குது. பழ வகைகளுக்காக திராட்சையும் திசு வாழையும் இருக்குது” என்று தோட்டத்தைச் சுற்றிக்காட்டுகிறார். காய்கறிகளும் திராட்சையும் வாழையும் செழித்து வளர்ந்திருக்கின்றன.
வீட்டின் புழக்கடைக்கு அழைத்துச்சென்றார். அங்கு உரத் தயாரிப்புக் கூடம் இருக்கிறது. தொட்டி அமைத்து, மண்புழு உரம் தயாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பஞ்சகவ்யா தயாராக இருக்கிறது.மாடித்தோட்டத்தின் செழிப்புக்கான காரணம் புரிந்தது. அடுத்து வீட்டின் முன்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார். மரச்செக்கு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணைய்,கடலை எண்ணெய்களை கடைந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை வீட்டுத் தேவைக்குப் போக அடக்க விலைக்கே தெரிந்துவர்களுக்குக் கொடுக்கிறார்கள். மாடித் தோட்டத்தில் காய்கறி மட்டுமின்றி உக்கிரமாய் முறைக்கும் சூரியனிடம் இருந்து சத்தமில்லாமல் மின்சாரத்தையும் கறக்கிறார்கள். அதற்கான சோலார் மின் உற்பத்தி தகடுகள் ஜோராக ஜொலிக்கின்றன. செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் தொடங்கி மிக்ஸி, கிரைண்டர்,மின்விசிறி உள்ளிட்ட வீட்டுத் தேவைக்கும் சூரிய மின்சக்தியே கைகொடுக்கிறது. இதுமட்டுமா...சமையல் எரிவாயுவும் வீட்டிலேயே தயாராகிறது. சமையலறை கழிவுகள் மூலம் ‘சக்திசுரபி’என்னும் இயற்கை எரிவாயு கலனை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலனுக்குள் ஒன்பது கிலோ சமையலறைக் கழிவுகளை செலுத்தினால், மூன்று மணி நேரத்திற்கு அடுப்பைப் பயன்படுத்தி சமைக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு வீட்டில் சமையலறைக் கழிவுகள் கிடைக்காது. இதனால் கிடைக்கும் கழிவுகளை வைத்து, அடுப்பினை எரிக்கச் செய்து பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
“வீட்ல நானும், மனைவியும் மட்டும்தான். ஒரே மகளுக்கு திருமணம் முடிந்து அவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். காய்கறி தொடங்கி மின்சாரம், எரிவாயு வரைக்கும் நாங்க உற்பத்தி செய்வதே போதுமானதாக இருக்கிறது” என்று சொல்லும் கிளாஸ்டன், தமிழக அரசின் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். “குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்குச்சு நினைவில் இருக்கா? மின்சாரம், எரிவாயு தொடங்கி காய்கறி வரைக்கும் எதுவும் கிடைக்காம மக்கள் தவிச்சாங்க. ஆனால், எங்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படலை. காரணம் இயற்கையைச் சார்ந்த எங்கள் தற்சார்பு பொருளாதாரமே” உற்சாகமாக சொல்லி விடைகொடுத்தனர் தம்பதியர். இயற்கையோடு இணைந்திருப்பது வாழ்க்கை மட்டுமல்ல, அது வரமும்கூட!
படம்: ராஜேஷ்குமார்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago