த
மிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம் தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.
விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த முக்தா வி.சீனிவாசன் 1940-களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அரசுப் பணியை இழக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தமிழ்த் திரைத் துறைக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் இப்படித்தான் கிடைத்தார்.
இயக்குநர் சீனிவாசன்
கீழிருந்து மேலே வந்தவர் சீனிவாசன். எழுத்துத் துறையோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். ஆரம்பக் காலத்தில் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்து டி.ஆர்.சுந்தரத்திடம் வசனப் பிரிவில் பணியில் இணைந்தார். அங்கேதான் மு.கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்டது. எல்லீஸ் ஆர்.டங்கன், வீணை எஸ்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தார். அந்த அனுபவம் அவரது திரையுலகப் பயணத்துக்கு உதவியாக இருந்தது.
1957-ல் சீனிவாசன் இயக்கிய முதல் திரைப்படமான ‘முதலாளி’ வெளிவந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற பெருமை அவருக்கு உண்டு. சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’ போன்ற படங்கள் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. ஜெயலலிதா நடித்த ‘பொம்மலாட்டம்’, ‘அன்பைத் தேடி’ போன்ற படங்களை இயக்கிய பெருமை முக்தா சீனிவாசனுக்கு உண்டு. ஜெயலலிதாவின் சிறந்த நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்த ‘சூரியகாந்தி’ முக்தா சீனிவாசனின் படைப்புதான். ஜெயலலிதா, சீனிவாசன் மீது இறுதி வரை மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.
சீனிவாசன் இயக்கிய ‘இதயத்தில் நீ’ திரைப்படத்தின் மூலமாகத்தான் ஒரு பாடலாசிரியராகப் பெரும் புகழ் பெற்றார் வாலி. கமல்ஹாசன் நடித்த ‘அந்தரங்கம்’ படம் சீனிவாசன் இயக்கியதே. இப்படத்தில்தான் முதன்முதலில் கமல்ஹாசன் பாடகர் அவதாரம் எடுத்தார் (‘ஞாயிறு ஒளி மழையில்’). ரஜினிகாந்த் நடித்த, ‘சிவப்பு சூரியன்’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். என்றாலும் சீனிவாசனின் பெரிய சாதனை என்று அவருடைய தயாரிப்பையே சொல்வேன்.
கச்சிதத்துக்குப் பேர் போனவர்
எல்லாவற்றையும் முன்கூட்டி திட்டமிட்டும் கச்சிதமாகப் பணிகளை முடிப்பதும் சீனிவாசனின் பாணி. குறைந்த நாட்களில் படம் எடுப்பதை ஒரு கலையாக அவர் மாற்றினார். அதேசமயம், இயக்குநர்களுக்குக் குறுக்கே நிற்காதவராகவும் இருந்தார். சீனிவாசனும், அவரது அண்ணன் வி.ராமசாமியும் இணைந்து நடத்திய ‘முக்தா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் 45 படங்களைத் தயாரித்தது. இவற்றில் 20 படங்கள் மிகப் பெரிய வசூலைப் பெற்றன. தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய ‘நாயகன்’ படத்தைத் தயாரித்தவர் சீனிவாசன்தான்.
சிக்கனத்துக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனமாக ‘முக்தா பிலிம்ஸ்’ திகழ்ந்தது. “சம்பளம் கொஞ்சம் குறைவாகக்கூட இருக்கலாம்; ஆனால், சொன்ன தேதியில் சொன்னபடி சல்லிக்காசு பாக்கியில்லாமல் தந்துவிடுவார் சீனிவாசன்” என்ற பெயர் எப்போதும் அவருக்கு இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால், பெரும்பாலும் முழுமையான சம்பளம் வந்தடையாது என்ற சூழல் நிலவும் தமிழ்த் திரையுலக நிசர்சனத்துடன் ஒப்பிட்டால்தான் சீனிவாசனின் நேர்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் தெளிவாகத் திட்டமிட்டு திரைப்படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வசூலில் சாதனை புரிந்து நிறைய சொத்துகளை முக்தா சகோதரர்கள் வாங்கினார்கள். ஆனால், பிற்காலத்தில் பல நஷ்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், யாரையும் அவர்கள் நஷ்டப்படுத்தவில்லை. முக்தா திருமண மண்டபம், முக்தா தொழிற்கூடம் தொடங்கி அவர்களுடைய வீடுகள் வரை விற்று கடன்களை அடைத்தனர். சென்னையில் இன்று பாஜக தலைமையகம் உள்ள இடம் ஒருகாலத்தில் சீனிவாசனின் வீடாக இருந்தது.
அரசியல் பயணம்
காந்தியிடம் சீனிவாசனுக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது. அவரிடம் வெளிப்பட்ட எளிமை, சிக்கனம், நேர்மை இவற்றுக்கெல்லாம் காந்தியின் தாக்கம் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அரசியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. 1961-ல் காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸில் இணைந்தார். 1970-களில் சிவாஜி ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
1989-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்ட பின் தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திற்கு நாள்தோறும் வருகைபுரிய ஆரம்பித்தார். இருவரும் பால்ய சிநேகிதர்கள். இருவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்கள். பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். அந்த வகையில் இருவர் இடையிலும் அபரிதமான நட்பும் மரியாதையும் இருந்தது. 1999 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட சீனிவாசன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுவே அவருடைய அரசியல் வீழ்ச்சியாகவும் மாறியது. திரையில் பல வெற்றிகளைக் கண்டிருந்தாலும் அரசியலில் வெற்றி பெறாதது பற்றிய வருத்தம் அவருக்கு இறுதிவரை இருந்தது. அதேபோல எழுத்துலகுடனும் நெருக்கமான உறவில் அவர் இருந்தார். இறுதிக் காலத்தில் ‘திருவிடம்’ என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி நிறைய நூல்களை எழுதி, வெளியிட ஆரம்பித்தார். ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘20 ஆம் நூற்றாண்டு சாதனைகள்’ (5 பாகங்கள்), ‘இணையற்ற சாதனையாளர்கள்’ (5 பாகங்கள்) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
சென்னைப் புத்தகக்காட்சியில் தனது அரங்கில் புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பார். அரங்குக்கு வரும் அனைவரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வாஞ்சையுடன் வரவேற்பார். அடுத்த புத்தகக்காட்சியில் சீனிவாசனைப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர் நினைவின்றி எவரும் கடக்கவும் முடியாது!
- ஆ.கோபண்ணா, தலைவர்,
ஊடகத்துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago