‘த
ந்தை, தாய்க்கிடையே பிணக்கையும் தீராத சச்சரவையும் பார்த்து வளரும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே பாரம்பரியம், கவுரவம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இழந்துவிடுகின்றன’ - தாஸ்தாயெவ்ஸ்கிக்காக கோணங்கி தொகுத்து வெளியிட்ட ‘கல்குதிரை’ சிறப்பு மலரில் பார்த்த இந்த வாக்கியம்தான், பள்ளிப் பருவத்திலேயே எழுத்தைத் துறையாகத் தேர்ந்தெடுக்க வைத்தது. மகிழ்ச்சியற்ற குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள்தான் அதிகமாக லௌகீக உத்தரவாதமற்ற துறைகளை நோக்கி ஈர்க்கவும்படுகின்றனர் என்று தோன்றுகிறது.
எனது துக்கம் இந்த உலகிலேயே தனியானது என்று நினைத்திருந்த 15 வயதில், “உன்னைப் போலத்தான் பாலகுமாரனுக்கும் அப்பாவைக் கண்டால் ஆகாது” என்ற அறிமுகத்துடன் கொடுக்கப்பட்டது ‘சினேகமுள்ள சிங்கம்’ நாவல். இப்படித்தான் பாலகுமாரன் எனக்கு அறிமுகமானார். அடுத்த 10 நாட்களிலேயே ‘இரண்டாவது சூரியன்’ கிடைத்துவிட்டது. என் தந்தையாரோடு நான் பழகிக்கொண்டிருந்த ரவுத்திரத்தையும் என் அம்மா மீதான நேசத்தையும் மகத்துவப்படுத்தியவர் பாலகுமாரன். தாய்க்கும், காதலிக்கும், மனைவிக்கும் தாயுமானவனாக விளங்கும் ஒரு ரொமாண்டிக்கான ஆணை எனக்குள் லட்சிய உருவமாக மாற்றியவரும் அவர்தான்.
கமல்ஹாசன் முன்னுரையுடன் பழுப்பாக அட்டை பிய்ந்த நிலையில் ‘சின்னச் சின்ன வட்டங்கள்’ சிறுகதைத் தொகுப்பை ஆசையுடன் தொட்டது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. ‘குணா’ படத்தில் அவர் எழுதிய ஒவ்வொரு வசனத்தோடும் நான் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். “என் முகம் அப்பா கொடுத்தது, அது அசிங்கம் அசிங்கம்” என்று கமல் சுற்றிச்சுற்றி அறையில் பேசி விழுவார். நானும் குணசேகரனைப் போலவே பித்தாகி ‘ரத்னா’ தியேட்டரில் அமர்ந்திருந்தேன். ‘பாலகுமாரன், பாலகுமாரன்’ என்று எனது வகுப்பு சகாவிடம் அரற்றினேன். அவனுக்குப் புரியவில்லை.
தொடர்ந்து, ‘இரும்பு குதிரைகள்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’ எனத் தொடர்ந்து துரத்தி, அப்போது வெற்றிபெற்ற இளையராஜா பாடல்களின் முதல் வரியில் (‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘என் அன்புக் காதலா’) பாக்கெட் நாவல்களை மாதந்தோறும் வாங்க பணத்தை ஒதுக்கும் பழக்கம் வரை முன்னேறினேன். பேருந்துப் பயணங்களில் எல்லாம் பாலகுமாரன் என்னுடன் வந்தார். அவர் ஒவ்வொரு பாக்கெட் நாவலிலும் வாசகர்களுக்காக எழுதும் அறிமுகக் குறிப்பை அத்தனை இதத்துடன் படித்திருக்கிறேன். ‘சிநேகமுடன் பாலா’ என்று கையெழுத்திடுவார். ஒருமுறை என் அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் ‘சிநேகமுடன்’ என்று சொல்லி எனது கையெழுத்தைப் போட்டு விடுதியிலிருந்து போஸ்ட் கார்ட் அனுப்பிவிட்டேன். கல்லூரி முதல்வர் அறையில் உள்ள தொலைபேசிக்கு ஒருநாள் என்னை அழைத்தார்கள். போனில் நான் வெட்கப்படும்படி எனது அம்மாவிடம் வசை வாங்கினேன். அம்மாவுக்கு சிநேகமுடன் என்றெல்லாம் எழுதுவது அத்துமீறல் என்று சமூகம் புரியவைத்தது. கல்லூரிக் காலத்தில் பாலகுமாரனுக்கு ரசிகர்களாக இருக்கும் குடும்ப உறவினர்களும் எனக்கு அறிமுகமானார்கள். எனது பெரியம்மா மகனும் அவர் காதலித்து மணந்துகொண்ட அண்ணியார், இரண்டு பேருமே பாலகுமாரன் ரசிகர்களாக எனக்கு நெருக்கமாகவும் பேசு வதற்கு ஆத்மார்த்தமாகவும் ஆகினர். எனது பெரியப்பாவோ, தனது பிள்ளைகளையும் பெண்களையும் கெடுப்பது பால குமாரன் என்று கூறி, பாலகுமாரன் புத்தகங்களையெல்லாம் தேடியெடுத்து அப்போது வீட்டடுப்பில் வெந்நீர் போடுவதற்கு விறகுகளுடன் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.
தமிழகத்தில் கீழ் மத்திய தர வர்க்கம், மேலே நகர்ந்ததில் மேல் சாதியினருக்கும் இடைச் சாதியினருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சாரப் புலங்களில் நடந்த பரிவர்த்தனை சுமூகமானதற்கு பாலகுமாரனது எழுத்துகளுக்கும் பங்குண்டு. சைவச் சமையலறையில் அசைவ உணவு காதலாக நுழைந்தது. மாநிறமும் கறுப்புமான பெண்ணின் வசீகரத்தை எழுதியவர் பாலகுமாரன். கல்வி, பொருளாதாரம் சார்ந்து வீட்டை விட்டு வெளியே வந்து இருபாலினரும் சேர்ந்து பழகுவதற்கான முறைசாராக் கல்வியை ஒரு தலைமுறைக்கு வழங்கிய ஆசிரியர் பாலகுமாரன்.
எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் தன் வீட்டுக்கு வந்த ஒரு இளைஞனுக்கு, அடிப்படையாக வாசிக்க வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட துறைவாரியான பட்டியலை பாக்கெட் நாவல் ஒன்றில் வெளியிட்டிருந்தார். அந்தப் பட்டியலைச் சில வருடங்களாவது நான் பாதுகாத்து அவர் சொன்ன நூல்களைத் தொடர்ந்து படித்தேன். ராகுல சாங்கிருத்யாயன் தொடங்கி கரிச்சான்குஞ்சு வரை இன்னமும் அனைத்துத் தொடக்க நிலை வாசகர்களுக்கும் பயனுள்ள பட்டியல் அது. அந்தப் பட்டியலில் இருந்த ஒவ் வொரு புத்தகமும் பாலகுமாரனிடமிருந்து தள்ளிக்கொண்டேபோனது. அவர் எனக்குச் செய்த பெரிய உபகாரம் அதுதான். சென்னைக்குப் போனால் நேரடியாக பாலகுமாரன் வீட்டுக்குப் போய்த்தான் இறங்குவது என்று அக்காலத்தில் முடிவெடுத் திருந்தேன். பாலகுமாரனைப் போய்ப் பார்க்கவே இல்லை.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago