உ
லகம் முழுவதும் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் வளர்ந்ததற்கு இணையாக, உலகம் முழுவதும் வாசிக்கப்படும் ஆங்கில வார இதழாக மலர்ந்தது ‘டைம்’. உலக வரலாற்றை உடன் எழுதிச்செல்லும் வாராந்தரி. அரசியல், கலை, இலக்கியம் ஆகியவற்றுடன் உலகப் பிரபலங்களை அடையாளம் காட்டும் காலக் கண்ணாடி. ‘டைம்’ அட்டையில் ஒருவருடைய முகம் வெளியாகிவிட்டால், அவர் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டதாக அர்த்தம். ஆண்டுதோறும் அது வெளியிடும் ‘100 பேர்’ பட்டியல், உலகெங்கும் உள்ள எல்லாப் பத்திரிகைகளுக்குமான செய்தி. அவ்வளவு செல்வாக்கு மிக்க பத்திரிகைக்கு இது ஒரு சிக்கலான காலகட்டம். என்னவென்று பிற்பகுதியில் பார்ப்போம்.
இரு இளைஞர்களின் முயற்சி
பிரிட்டன் ஹேடன், ஹென்றி லூஸ் இருவரும் இணைந்து தொடங்கிய அமெரிக்க வார இதழ் ‘டைம்’. இருவரும் யேல் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரிகள். அப்போது ‘தி பால்டிமோர் நியூஸ்’ என்ற பத்திரிகையில் இளம் நிருபர்களாக இருந்தார்கள். இருவரும் சேர்ந்து 86,000 டாலர்களைத் திரட்டித் தொடங்கியதுதான் ‘டைம்’ பத்திரிகை.
இருவரில் ஹேடன் கொஞ்சம் ஜாலி பேர்வழி. பொழுதுபோக்காக ஒரு மணி நேரத்துக்குள் படித்துவிட்டுத் தூக்கி வீசும் வகையில்தான் பத்திரிகை இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளவர். ஹென்றிக்கு கொஞ்சம் மாறுபட்ட கருத்து உண்டு. இருவரின் சிந்தனையில், கூட்டு உழைப்பில் உருவானது ‘டைம்’. அரசியல் தொடங்கி பாப் கலாச்சாரம் வரை எல்லா சுவாரஸ்யமான விஷயங்களை யும் ‘டைம்’ தொட்டது. எல்லாத் துறைகளிலும் உள்ள பிரபலங்களை அடையாளப்படுத்தியது பத்திரிகையின் தனி அம்சமாகத் திகழ்ந்தது. ஆண்டின் சிறந்த மனிதர், உலகின் முதல் நூறு சிறந்த தலைவர்கள் என்றெல்லாம் புகைப்படங்களுடன் சிறு குறிப்புகளை வெளியிட்டது. இந்தச் சிறு குறிப்புகளை வேகமாகப் படித்த வாசகர்கள், மேலதிக விவரங்களை வேறு இடங்களில் தேடிப் படித்துக்கொண்டார்கள் என்றாலும், சிறு குறிப்புகளுக்காகவே அதிகம் ‘டைம்’ பத்திரிகையை விரும்பினார்கள்.
1923-ல் ‘டைம்’ தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டு களிலேயே அதாவது 1929-ல் ஹேடன் மறைந்துவிட்டார். பிறகு, ஹென்றி முழுப் பொறுப்பேற்று அதை நடத்தினார். ‘டைம்’ பத்திரிகையைப் பற்றி ‘தி மார்ச் ஆஃப் டைம் 1935-51’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் ரேமாண்ட் பீல்டிங். அதில் ‘டைம்’ பத்திரிகை வளர்ச்சி பெற யாரெல்லாம் காரணம் என்று விவரித்திருக்கிறார். இதில் ஹென்றிக்கு அடுத்து அவர் அதிகம் குறிப்பிட்டிருப்பது ராய் எட்வர்ட் லார்சன். ஹென்றிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் லார்சன். விற்பனை மேலாளர், பொது மேலாளர், பதிப்பாளர், நிறுவனத்தின் தலைவர் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பல பதவிகளைத் திறம்பட நிர்வகித்தவர்.
பொற்காலமும் சரிவும்
ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் ராஜ்ஜியத்தை விரித்தது ‘டைம்’. 8,000 பேர் அதற்காகப் பணிபுரிந்தனர். ‘டைம்’ மட்டும் அல்ல; ‘ஃபார்ச்சூன்’, ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட்’, ‘மனி’, ‘பீப்பிள் அண்ட் ஸ்டைல்’ ஆகியவையும் அதன் சகோதரப் பத்திரிகைகள். அது மட்டுமின்றி ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கென்று தனித்தனி வெளியீடுகளும் வந்தன. ‘டைம்’ பத்திரிகையில் வேலைபார்ப்பது மட்டும் அல்ல; அந்தப் பத்திரிகையைக் கையில் வைத்திருப்பதே ஒரு கௌரவம் என்று கருதப்படும் சூழல் உருவானது.
1990-களுக்குப் பிறகு ‘டைம்’ தடுமாறத் தொடங்கியது. வேகம் எடுத்த தொலைக்காட்சி ஊடகங்கள் விளம்பர வரு மானத்தைப் பங்குகொள்ள வந்ததே காரணம். பத்திரிகை யின் விற்பனை மூலம் கிடைத்த தொகை அதன் உலகளா விய விற்பனை, விளம்பர அமைப்புக்குப் போதுமானதாக இல்லை. எனவே, இவற்றின் அச்சுக் கூலிக்கும் நிர்வாகச் செலவுக்கும் பத்திரிகையாளர்களின் ஊதியத்துக்கும் பணம் போதாமல் திண்டாட்டம் ஏற்பட்டது.
2013 ஜனவரி முதல் மார்த்தா நெல்சன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அப்பதவிக்கு வந்த முதல் பெண் அவர்தான். 2013 செப்டம்பரில் நான்சி கிப்ஸ் முதல் பெண் நிர்வாக ஆசிரியராகப் பதவியேற்றார். 2017 நவம்பரில் மெரிடித் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ‘டைம்’ நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. 2012-13-ல் ‘டைம்’ வார இதழ் 33 லட்சம் பிரதிகள் விற்பனையாகின. வாசகர்கள் எண்ணிக்கை 2.6 கோடி.
‘லைஃப்’ பத்திரிகையும் ‘டைம்’ குழுமத்திலிருந்து வெளியானதுதான். அது புகைப்படங்களுக்காக முக்கியத்துவம் தந்து பெயர் எடுத்தது. 1936 தொடங்கி 1972 வரை சக்கைப் போடு போட்டது. இரண்டாவது உலகப் போர் முடிந்து நாடு திரும்பிய அமெரிக்க வீரர், காதலி நர்ஸை வீதியில் கட்டி அணைத்து முத்தமிடும் காலத்தால் அழியாத புகைப்படத்தைப் பிரசுரித்தது ‘லைஃப்’தான். பிரிட்டனில் பிரசுர மான ‘பஞ்ச்’ பத்திரிகையைப் போல இருக்க வேண்டும் என்று வெகு கவனமாகத் தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘லைஃப்’ உலக அளவில் ஒருகாலத் தில் வாரந்தோறும் 135 லட்சம் பிரதிகள் விற்றது என்றால் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே அது அச்சுப் பத்திரிகைகளின் பொற்காலம்தான்.
அட்டை ஒரு கலை வெளிப்பாடு
சர்வதேச அளவில் பிரபலங்களை அட்டையில் புகைப் படமாக அச்சிடும் வழக்கத்தை ஒரு பாணியாக மாற்றியது ‘டைம்’. அட்டையில் சிவப்பு நிறத்தில் நாலா பக்கமும் கோடு போடப்பட்டு அதற்குள் புகைப்படம், தலைப்பு வரிகள் உள்ளிட்டவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். இந்த சிவப்புக் கோடு எல்லை போலவே இருக்கும்.
இந்த எல்லை சிவப்புக் கோடு இதுவரை 4 முறை மட்டும் வேறு நிறக் கோடுகளாக இடம்பெற்றன. அதுவும் அந்த வாரத்தின் முக்கிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதத்தில்! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தைத் தீவிரவாதி கள் தகர்த்த 2001 செப்டம்பர் 11 சம்பவத்தைக் கண்டிக்கும் விதத்தில் இந்த எல்லைக்கோடு கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டது. பிறகு, 2008 ஏப்ரல் 28 உலக புவி நாளைக் கொண்டாடும் வகையில், இந்த எல்லைக்கோடு பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டது.
மீண்டும், 2011 செப்டம்பர் 19 இதழில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு உலோக வெள்ளி நிறத்தில் எல்லைக்கோடு அச்சிடப்பட்டது. அடுத்து, 2012 டிசம்பர் 31 இதழில் பராக் ஒபாமாவுக்குச் சிறப்பு விருது அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வெள்ளி நிற எல்லைக் கோடு இடம்பெற்றது.
அதே மாதிரி, உலக அளவில் சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள் ஆகியோரின் புகைப்படங்களை அட்டையில் தப்புக் குறி (X)யுடன் வெளியிட்டு, தனது கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர், ஈராக் அதிபர் சதாம் உசைன், அபு முசாப் அல் ஜர்காவி, ஒசாமா பின் லேடன் ஆகியோர் அப்படி அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
மாற்றங்கள்... மாற்றங்கள்..
நீண்டகாலமாக ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு வந்த ‘டைம்’ 2007-ல் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் பல மாற்றங்களைச் செய்தது. சிவப்பு எல்லைக்கோட்டின் அடர்த்தியைக் குறைத்தது. பத்திகள் தலைப்பு வடிவத்தில் பெரிதாக்கப்பட்டன. கதைபோல எழுதப்படும் செய்திகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கட்டுரைகளைச் சுற்றிய வெள்ளை இடைவெளி அதிகப்படுத்தப்பட்டது.
கட்டுரையாளர்களின் புகைப்படங்களுடன் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இதேபோல, இந்த ஆண்டின் சிறந்த மனிதர், உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள், எல்லாக் காலத்திலும் பேசப்படும் 100 சிறந்த திரைப்படங்கள், எல்லாக் காலத்திலும் கொண்டாடப்படக்கூடிய 100 தலைசிறந்த நாவல்கள், 100 சிறந்த டி.வி. நிகழ்ச்சிகள், 100 சிறந்த ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் என்று ‘டைம்’ இதழ் வெளியிடும் தேர்வுகளும் வாசகர்களிடையே பெரும் வரவேற் பைப் பெற்றன.
புதிய சிந்தனைகள், புதிய எண்ணங்கள், புதிய வெளிப்பாடுகள் இவையே இதழியலை வெற்றிகரமாக வைத்திருக்கும் என்பது ‘டைம்’ நிறுவனத்தின் நம்பிக்கை. அதேபோல ஊழியர்களே அதன் முக்கியமான முதலீடு என்றும் அது கருதிவந்தது.
பத்திரிகையின் தலைமை அலுவலகத்தில் இரண்டு விதமான அறைகள் இருக்கும். சுவரைப் பார்த்தார்போல, ஜன்னல் ஏதும் இல்லாத அறைகள் ஆய்வு உதவியாளர் களுக்கும் இளநிலைப் பத்திரிகையாளர்களுக்கும் ஒதுக்கப்படும். வெளிவாசலைப் பார்த்தபடி, ஜன்னல்களுடன் உள்ள அறைகள் மூத்த ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு ஒதுக்கப்படும். மூத்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அறைகளில் படுக்கை வசதியுடன் கூடிய சோபா, டி.வி. போன்ற வசதிகள் உண்டு. வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகையை அச்சுக்கு அனுப்பும் நாளன்று மூத்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கேலிச்சித்திரக்காரர்கள் போன்றோர் இரவு உணவுக்காக வெளியில் போய் அலையக் கூடாது என்று பத்திரிகை நிர்வாகமே இரவுச் சாப்பாட்டுக்கும், பணி முடிந்த பின் மதுவுக்கும் ஏற்பாடு செய்துவிடும்.
உருவாகியிருக்கும் சவால்
சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா முன்வரிசையில் நிற்பதுபோல இதழியல் சவால்களை எதிர்கொள்வதில் ‘டைம்’ முன்னிற்பதும் இயல்பானது. சமீபத்திய தகவல் தொழில்நுட்பப் புரட்சி உலகம் முழுவதுமே இதழியலுக்குப் பெரும் சவாலாகத்தான் மாறியிருக்கிறது. இது இதழியல் எதிர்நோக்கும் சவால் என்பதுடன் அறிவுலகமும் ஜனநாயகமும் எதிர்நோக்கும் சவால் என்றும் சொல்லலாம். நாள் முழுவதும் செல்பேசியிலேயே கழிப்பது, காணொலிகளிலேயே மூழ்கியிருப்பது என்று படித்தவர்களே வாசிப்பை மறப்பது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பின்னடைவுதானே?
சரியும் விற்பனையையும் வருமானத்தையும் தூக்கி நிறுத்த புதுப் புது உத்திகளைக் கையில் எடுத்திருக்கிறது ‘டைம்’. வார இதழ் உலகில் ‘டைம்’ எடுக்கும் எந்த உத்தியும் உலகம் முழுவதுமுள்ள வாரப் பத்திரிகைகளில் தாக்கத்தை உண்டாக்கும். “எல்லாச் சிக்கல்களும் ஒருவகை யில் வாய்ப்புகள்” என்பார்கள். இந்தக் காலச் சிக்கலை ‘டைம்’ எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago