புதிய பாடம்... புதிய பாதை!: உற்சாகம் ஊட்டும் முதல் வகுப்புப் பாடம்

By ஆதி வள்ளியப்பன்

வி

ரிவான திட்டமிடுதல், துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு, விளையாட்டு வழிக் கல்வி, மாணவர்களைப் படிக்கத் தூண்டும் பாடங்கள் என சீரிய முறையில் புதிய பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை, சாதாரணமாகப் புரட்டும்போதே உணர முடிகிறது. முதல் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் என நான்கு பாடங்கள். நான்கு பாடங்களும் இணைந்து இரண்டு தொகுதிகளாக முதல் பருவத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்கள் என்றால் வெறும் எழுத்தாகவே இருக்கும் என்ற கருத்து உடைக்கப்பட்டிருக்கிறது. ஓவியங்கள், வண்ணங்கள், வடிவமைப்பு என பல்வேறு அம்சங்கள் இந்தப் புத்தகங்களைக் கையில் எடுத்தவுடன் படிக்கவும், புரட்டிப் பார்க்கவும், விளையாடவும் தூண்டுகின்றன. விளையாட்டு வழியாகவும் புதுமையான முறைகளிலும், எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் பாடங்களை இயல்பாகக் கற்கலாம் என்பது நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது

ஆக்கப்பூர்வமான அம்சங்கள்

. இயற்கை, தாவரங்கள், உயிரினங்கள் மீதான அன்பை, கரிசனத்தைத் தூண்டும் தன்மை உள்ளது. முன்பு இல்லாத வகையில் உள்நாட்டுத் தாவரங்கள், பறவைகள், உயிரினங்கள் குறித்து படங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

. அழ. வள்ளியப்பா போன்றோரின் நேரடிப் பாடல்கள், பிரபலமான பாடல்களை அடியொற்றி அமைக்கப்பட்ட பாடல்கள் கற்றலை எளிமையாக்கும்.

. அறிவுரைகளும் ஆலோசனைகளும் நீதிபோதனையாகப் புகுத்தப்படாமல் கதைப்போக்கில் கூறப்பட்டுள்ளன.

. புதுமையும் சுவாரசியமும் நிறைந்த வகை வகையான விளையாட்டுகள், புதிர்கள், வரைதல், கைவினைப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.

. மணலில் எழுதுதல், நீரைத் தொட்டு எழுதுதல், முதுகில் எழுதுதல், கையில் எழுதுதல், காற்றில் எழுதுதல் போன்ற செயல்பாடுகள் விளையாட்டுப் போக்கில் எழுதக் கற்றுக்கொள்ள உதவும்.

. நமக்கு நன்கு தெரிந்த ஓர் இடம், அறை, பகுதியில் இருக்கும் பல்வேறு அம்சங்களின் பெயர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

. ஏற்கெனவே நிலவிவரும் சமூகப் புறக்கணிப்புகள், முன்தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தாமல், கதை, கதாபாத்திரப் போக்கின் ஊடாகவே சமூகத்தின் பன்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணங்கள்.: ‘அம்மாவையும் குழந்தையையும் மட்டுமே ஒரு குடும்பம் கொண்டிருக்கலாம்’; ‘சமூகத்தில் அனைத்து மதத்தினரும் ஓர் அங்கம்.’

களைய வேண்டிய குறைகள்

.'Clap your hands' போன்ற ஆங்கிலப் பாடல்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பாடுவதற்கு வசதியாக இல்லை. வேறு பொருத்தமான நேரடிப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

. ஓரிடத்தில் நாரை எனக் குறிப்பிட்ட இடத்தில் கொக்கு படம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல இன்னொரு இடத்தில் முகர்தலுக்கு (மோப்பம்) பதிலாக நுகர்தல் என்று தவறாக உள்ளது. இதுபோன்ற கருத்துப் பிழைகள் அரிது. எனினும், அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் இந்தப் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை உரிய முறையில் உள்வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் பாடத்தை நடத்துவதும் குழந்தைகளிடம் எடுத்துச்செல்வதும் அமைய வேண்டும். பாடப் புத்தகம் என்றால் சலிப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை இந்தப் புத்தகங்கள் மாற்றிவிட்டன. அந்த வகையில் பாதிக் கிணற்றைத் தாண்டியாகிவிட்டது. இனி களச் செயல்பாட்டில் மீதிக் கிணற்றையும் வெற்றிகரமாகத் தாண்டுவார்கள் என்று நம்புவோம்.

ஒரு புதுமைக் கதை

தனித் தனிக் குழுக்களாக விளையாடும் வேறு உயிரினங்களிடம் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள முடியுமா என்று ஒரு எலி கேட்கிறது. ஆனால், யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. பிறகு அந்த எலி தனியாக விளையாடப் போகிறது. அப்போது அதனுடன் சேர்ந்து விளையாட மற்றவர்கள் ஓடிவருகிறார்கள். தன்னை அவர்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை தன்னோடு சேர்ந்துகொண்டு விளையாட அழைக்கிறது அந்த எலி. எதையும் நீதி போதனையாகத் தராமல், நல்லெண்ணத்தை இயல்பாக ஊட்டும் இதுபோன்ற கதைகள் புதிய பாடநூல்களில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்