தூ
த்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.
போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவதுதான் மக்கள் முன்னிருக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர் கள் மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.
மகாராஷ்டிரம் நிராகரித்த ஆலை
தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்துக்கான நீண்ட காலப் போராட்டம். மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். “ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ் டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.
சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூடப் போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது. மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களைச் செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?
படப்பிடிப்புக்காகப் பல முறை நான் தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக் கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!
குப்பைத்தொட்டியா தமிழகம்?
2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தூத்துக்குடியின் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிற ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ‘நியூட்ரினோ திட்டம்’ என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படை யில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள். தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவதைப் போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மக்கள் போராட்டங்களை ‘பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை’ என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்? மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?
அரசு என்ன சொல்கிறது, ‘வேலைவாய்ப்பு தருகிறோம்’ என்கிறது. ‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்’ என்று மக்கள் சொல்லும்போது, ‘உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்’ என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகுவைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?
ஒரு பிரச்சினையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணை கொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச் சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத் தைக் குலைக்கின்றன.
வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!
- சூர்யா, நடிகர் , சமூகச் செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: suriya@agaram.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago