ஆதி மனிதர்கள் தங்கள் வேட்டையாடும் திறனையும், சண்டையிடும் திறனையும் வளர்த்துக்கொள்ள விளையாட்டை ஒரு பொழுதுபோக்காகத்தான் தொடங்கினர். விளையாட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட பின்னர் பதக்கங்கள், பயிற்சிக்கான தேவைகள், அதுதொடர்பான வணிகம் எனப் பல்வேறு அம்சங்கள் சேர்ந்துகொண்டன. ஒலிம்பிக் போட்டிகள் அவற்றின் உச்சம். வெற்றி தோல்விகளைத் தாண்டி பயங்கரவாதம், பாகுபாடுகள், நோய்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகளையும் கடந்துவந்திருக்கிறது ஒலிம்பிக்கின் பயணம்.
ஒற்றுமைக்கான தலம்: ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை, பதக்கம் வெல்வதைவிடவும் பங்கேற்பதே மிகப் பெரிய வாய்ப்பு. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் தருணத்தில்தான் ஒருவரையொருவர் விஞ்ச மோதிக் கொள்வதெல்லாம். போட்டி முடிந்ததும் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாகப் பழகுவார்கள்.
ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வார்கள். கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, எல்லா விதமான விளையாட்டுப் போட்டிகளிலும் இது இயல்பான விஷயம்தான் என்றாலும், பல்வேறு விளையாட்டுகளின் தொகுப்பாக, சர்வதேச அளவில் நிகழும் ஒலிம்பிக் திருவிழாவில்தான் உலகின் வெவ்வேறு வண்ணங்கள் சங்கமித்து ஒற்றுமை என்னும் ஒரு புதிய நிறம் உருவாகும்.
முதன்முறையாக, பொ.ஆ.மு. (கி.மு.) 776இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் வானம் - மின்னலின் கடவுளான ஜீயஸை வழிபடும் விதமாக, ஒரு மதத் திருவிழாவாகத்தான் தொடங்கின. கொண்டாட்டம்தான் அந்த விழாவின் முக்கிய நோக்கம். நவீன ஒலிம்பிக் போட்டிகள் சர்வதேச அளவில் விரிவடைந்தபோது அது வணிகரீதியாகப் பல மாற்றங்களைக் கண்டது.
» பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024: சிறப்பு அம்சங்களும், இந்திய நம்பிக்கைகளும்!
» வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை, புனே நகரங்கள்: 6 பேர் உயிரிழப்பு
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகள் அதனால் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களை அடைந்து விடுவதில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் மைதானங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் போன்றவற்றுக்கும் இதர ஏற்பாடுகளுக்குமான செலவுகள் மிக அதிகம்.
அடிப்படைத் தேவைகளைவிடவும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதா எனப் போராடியவர்கள் உண்டு. 1968இல் மெக்ஸிகோ ஒலிம்பிக்குக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேவேளையில், ஒலிம்பிக் போட்டிகள் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுவதில்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எந்த நாட்டையும் சார்ந்தது அல்ல. ஒவ்வொரு நாட்டின் ஒலிம்பிக் சங்கங்களும்கூட அரசு சார்ந்தவை அல்ல. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தனக்குக் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியை உலக நாடுகளின் - குறிப்பாக வறிய, வளரும் நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கே முதலீடு செய்கிறது.
காதல் முதல் காமம் வரை: ஒலிம்பிக் போட்டிகளில் சந்தித்துக் காதல் வயப்பட்டவர்கள், வெற்றிகரமாகத் திருமணம் வரை சென்றவர்கள் பலர். புகழ்பெற்ற ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், தனது காதல் மனைவியும் டென்னிஸ் வீராங்கனையுமான மிர்காவை முதன்முதலில் சந்தித்தது 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போதுதான்.
1988 சியோல் ஒலிம்பிக் போட்டிகளின்போதுதான் முதன் முதலில், எச்.ஐ.வி. பரவலைத் தடுக்க விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்பட்டன. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என அனைவருக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட ‘கார்ட்போர்டு’ (cardboard) அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட படுக்கைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதில் ஒரே ஒரு நபர்தான் படுத்து உறங்க முடியும். பாலியல் உறவு கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்தப் படுக்கைகள் - உறுதியற்றவையாக வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகக் குறுகிய அகலம் கொண்டது என்பதால் அதில் ஒருவர் படுத்து உறங்குவதே சிரமமாக இருப்பதாகப் புகார்களும் எழுந்திருக்கின்றன.
உண்மையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின்போதே இத்தகைய படுக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அப்போது கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதுதான் நோக்கமாக இருந்தது. அவை பாலியல் உறவைத் தடுப்பதற்கான படுக்கைகள் என்று பரப்பப்பட்ட தகவல்கள் தவறானவை என ‘ஃபோர்ப்ஸ்’ இதழும் தெளிவுபடுத்தியது.
1988 சியோல் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் க்ரெக் லோகேனிஸுக்குத் தலையில் அடிபட்டு நீச்சல் குளத்தில அவரது ரத்தம் கசிந்து பரவியது. காயத்துடன் அந்தப் போட்டியில் தங்கம் வென்றாலும் சர்ச்சைக்குரிய நபராக அவர் மாறினார். காரணம், அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தது.
அதை மறைத்து போட்டியில் கலந்துகொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தன. தன்பாலீர்ப்பாளரான க்ரெக் எச்.ஐ.வி. பாதிப்புக்குப் பின்னரும் நீண்டகாலமாக ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாட்டாளராகவும் இயங்கிவருகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: 1936 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர், 1972இல்தான் ஜெர்மனியில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்த மேற்கு ஜெர்மனியின் மியூனிக் நகரை மையமாகக் கொண்டுதான் ஒலிம்பிக் நடந்தது. அப்போது பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரேல் வீரர்களைப் பாலஸ்தீன பயங்கரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் உலகை அதிரவைத்தது.
அதன் பின்னர்தான் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. 1972 மியூனிக் ஒலிம்பிக்கின்போது கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்நிகழ்வு ரகசியமான இடத்தில் நடக்கும் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. காஸா போருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலின் தாக்கம்: ஒலிம்பிக் போட்டிகளில் அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் தாக்கங்கள் ஏற்பட்டதுண்டு. ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் 1936இல் ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது, அவரது நாஸி அரசின் இனவெறிக் கொள்கைகளைக் கண்டித்து பல ஐரோப்பிய நாடுகள் அந்தப் போட்டிகளைப் புறக்கணித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஜெர்மனியும் ஜப்பானும் தடைசெய்யப்பட்டிருந்தன.
எனினும், போட்டிகளைப் புறக்கணிப்பதைவிடவும், அவற்றில் பங்கேற்று வெவ்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்வதுதான் சிறந்த வழி என்று அனுபவம் மிக்க பல வீரர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்பது அவர்களின் வாதம்.
1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற டாம்மி ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகிய ஆப்ரிக்க அமெரிக்க வீரர்கள் தங்கள் நாட்டில் நிலவும் இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் பதக்க மேடையில் கறுப்புக் கையுறை அணிந்த கைகளை உயர்த்தி நின்றனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜெர்மனி தடகள வீரர் தாமஸ் பாஹ், 1976 மான்ட்ரியால் ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது ஆப்ரிக்க நாடு ஒன்றின் வீரர்கள், தங்கள் நாட்டு அரசு கடைசி நேரத்தில் ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கண்ணீருடன் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்து மிகுந்த வருத்தமடைந்ததாக ‘தி கார்டியன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார். பின்னாள்களில், மேற்கு ஜெர்மனியின் தடகள ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதாக மேற்கு ஜெர்மனி அரசு அறிவித்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் இவர்.
கனவைக் கலைத்த போர்: பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் முகமது ஹமடா (2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பாலஸ்தீனத்தின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றவர்), காஸா போரின் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் உடல்தகுதியை இழந்துவிட்டார்.
இஸ்ரேலின் தாக்குதலில் நிலைகுலைந்துவரும் காஸாவில், தனது குடும்பத்துக்காகத் தினமும் நெடுந்தொலைவு சென்று 500 லிட்டர் தண்ணீர் எடுத்துவந்த ஹமடா, அதன் மூலம் தனது உடல் வலிமை அதிகரிக்கும் என்றும் நினைத்திருந்தார். ஒருவழியாக காஸாவிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால், சத்தான உணவுக்கு வழியில்லாததால் அவரது உடல் எடை குறைந்துபோனது. விளைவாக, அவரது ஒலிம்பிக் கனவு தகர்ந்துவிட்டது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த எட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். அவர்களும் போரின் காரணமாக உரிய பயிற்சியும் போதிய ஊட்டச்சத்து உணவும் கிடைக்காதவர்கள்தான். ரமல்லாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான வசீம் அபு சல், “நான் இங்கு வெறுமனே பங்கேற்க மட்டும் வரவில்லை. களமாட வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இதுவரை பாலஸ்தீனத் தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதில்லை. இந்த முறையேனும் அந்தக் கனவு பலிக்கட்டும்!
- தொடர்புக்கு: chandrabuwan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago