ஒலிம்பிக்: ஒரு சிலிர்ப்புணர்வு!

By ஆதி வள்ளியப்பன்

ஒலிம்​பிக் - விளையாட்டின் மீது தீராத ஆர்வம்​ கொண்ட​வர்​களின் பெருங்​கனவு. பண்டைய கிரேக்கம்​ தந்த இந்த விளையாட்டுத் திருவிழாவை, நவீனக் காலத்​தின் அடையாளமாக உருமாற்ற நினைத்​தார் ஃபிரெஞ்​சுக் கல்வியாளர் பியர் தெ கூபர்​டின். உலகில் அதிக​மானோரால் பார்க்​கப்​படு​பவை​யாகக் கால்பந்து, டென்னிஸ், கிரிக்​கெட் போட்டிகள் இருக்​கலாம்.

ஆனால், இ்ந்தப்​ போட்டிகளைவிட அதிகமாக எதிர்​பார்க்​கப்​படுவது ஒலிம்​பிக். காரணம், அதன் தனித்​தன்​மை. ஒருபுறம் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்​கெட் போட்டிகள், புரோ கபடி போன்ற தனியார் விளையாட்டுப் போட்டிகள் திட்ட​மிட்டுப் பரபரப்பை அதிகரிக்​கின்றன, மக்களின் பொழுதுபோக்கு உணர்வைத் தங்களுக்கான மூலதனமாக மாற்றிக்​கொள்​கின்றன.

இதனால் விளையாட்டின் அடிப்படை அம்சங்கள்​ பல அடிபட்டுப்​போகின்றன. மற்றொருபுறம் விளையாட்டுகளைத் துல்லிய​மாக்​கவும், விதிமுறைகளைத் திட்ட​வட்ட​மாகக் கடைப்​பிடிக்​கவும் தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு போன்ற தலையீடுகள் அதிகரித்​துக்​கொண்டே வருகின்றன.

இவையெல்​லாம் இருந்​தா​லும்கூட, விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்​களின் நேரடிப் பங்கேற்பு, யோசனை, புதிய உத்தி அந்த விளையாட்டுக்​குப் புதிய பரிமாணத்தை வழங்கலாம், சுவாரசி​யத்​தைக் கூட்டலாம், பரபரப்பை அதிகரிக்​கலாம். மனித உடல், ஆரோக்​கியமான பொழுதுபோக்​குத் திறன்​களின் உச்ச வெளிப்​பாடுதான் ஒலிம்​பிக் போட்டிகள். அப்படி இருக்க வேண்டு​மென்​றுதான் கூபர்​டின் உள்ளிட்ட முன்னோடிகள் அதை நிறுவியபோது எதிர்​பார்த்​தார்​கள்.

கற்பிதம் தகர்ப்பு: 19ஆம் நூற்றாண்​டின் இறுதி​யிலேயே ஒலிம்​பிக் போட்டி தொடங்கிவிட்டது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்​பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றிருந்​தா​லும்கூட, 1936 பெர்லின் ஒலிம்​பிக் போட்டியைப் பிரம்​மாண்​டமாக நடத்தி, உலகுக்​குத் தங்களைப் பற்றி வெளிச்சம்​ போட்டுக் காட்ட நினைத்தது, ஜெர்மனியை அப்போது ஆண்ட ஹிட்லரின் நாஸி கட்சி. அந்தப்​ போட்டிகள்​தான் முதன்​முதலில் தொலைக்​காட்​சி​யிலும் பரவலாக வானொலியிலும் ஒலிபரப்​பப்​பட்டன.

நாஸி கட்சிக் கொள்கைப்படி ஆரியர்​கள்​தான் அனைத்​திலும் உச்சத்​தில் இருக்க வேண்டும் என ஜெர்மன்​ சர்வாதிகாரி ஹிட்லர்​ எதிர்​பார்த்​த​போது, தன் விளையாட்டுத் திறமையால் அந்தக்​ கற்பிதத்தை உடைத்​தார் ஆப்ரிக்க அமெரிக்​கரான ஜெஸி ஓவன்ஸ். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய நான்கிலும் தங்கப்​ பதக்கம்​ வென்று ஜெஸி ஓவன்ஸ் சாதித்தார்.

இவ்வளவுக்​கும் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பதற்றமாக இருந்த ஜெஸி ஓவன்ஸை நிதானப்​படுத்​தி​யவர்​ ஜெர்மானியரான லஸ் லாங். எப்படி​யாவது பதக்கத்​தைத் தனதாக்​கிக்​கொள்ள வேண்டும் என்று எண்ணுவதைவிட, விளையாட்டு வெற்றி பெற வேண்டும் என நினைக்​கும் லஸ் லாங் போன்ற ஆளுமைகள்​ பதக்கம்​ பெறாமலே மனங்களை வென்று​விடு​கிறார்கள்.

நவீனக் காலத்​தில்... ஜெஸி ஓவன்ஸின் சாதனையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழித்து, 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்​பிக்​கில் அமெரிக்​கா​வின் கார்ல் லூயிஸ் சமன்செய்​தார். 2008 பெய்ஜிங் ஒலிம்​பிக்​கில் ஜமைக்​கா​வின் உசைன் போல்ட் 9.69 விநாடிகளில் 100 மீ. தொலைவை ஒரு சிவிங்​கிப்​புலியைப் போலச் சடாரெனக் கடந்த​போது, ஓடுதளங்கள்​ தீப்பிடிக்காத குறைதான். அதே ஒலிம்​பிக்​கில் 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டத்​திலும் அவர் சாதனை படைத்​தார் என்றால் சும்மாவா? கால்பந்து, டென்னிஸ் வீரர்​/வீராங்​க​னைகளுக்கு இணையான புகழை ஒரே நாளில் அவர் அறுவடை செய்தார்.

பெண்களும் ஒலிம்​பிக் தருணங்​களுக்கு ஒளியேற்றி​யிருக்​கிறார்​கள். 1976 மாண்ட்ரியல் ஒலிம்​பிக்​கில் ருமேனியாவின் நாடியா காமென்சி ஜிம்​னாஸ்டிக்​ஸில் 10-க்கு 10 எடுத்​த​போது, அன்றைக்கு இருந்த மின்னணுக் காட்சிப்​பல​கைகளால் அதைக் காட்ட முடிய​வில்லை.

காரணம் 9 வரைதான் அந்தப்​ பலகைகளில் இடம்பெறச் சாத்தியம்​ இருந்தது. 1988 சியோல் ஒலிம்​பிக்​கில் அமெரிக்​கா​வின் ஃபிளாரன்ஸ் ஃகிரிபித் ஜாய்னர்​ 200 மீ. ஓட்டப் போட்டி​யிலும் அதற்கு முன்னதாக ஒலிம்​பிக் தேர்வுக்கான 100 மீ. ஓட்டத்​திலும் உலக சாதனை படைத்​தார். இன்றுவரை அந்தச்​ சாதனைகள் முறியடிக்​கப்​பட​வில்லை.

இந்தி​யர்​களும் பல மாயாஜாலத் தருணங்​களைத் தந்து சிலிர்ப்படைய வைத்திருக்​கிறார்​கள். ஒரேயொரு வித்தி​யாசம், அவர்களால் பதக்கம்​ வெல்ல முடிய​வில்லை என்பதே. ‘பறக்​கும் சீக்கியர்’ மில்கா சிங் 1960 ரோம் ஒலிம்​பிக்​கில் 400 மீ. ஓட்டத்​தில் 0.1 விநாடி​யில் வெண்கலப் பதக்கத்​தைத் தவறவிட்டார்.

இந்திய ஓட்டப்​பந்தய வீரர்​களைப் பொறுத்தவரை அவருக்​குப் பிறகு வேறுயாரும் இந்த நிலையைக்​கூடத் தொட்டதில்லை. அதேபோலத்​தான் பி.டி.உஷா விஷயத்​திலும் நடந்தது. 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்​பிக்​கில் 400 மீ. தடையோட்டப் போட்டி​யில் 0.01 விநாடி​யில் வெண்கலப் பதக்கத்தை அவர் தவறவிட்டார்.

ஒத்தி​கையற்ற நாடகம்: 2020 டோக்கியோ ஒலிம்​பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் கத்தா​ரின் மாதஸ் இஸ்ஸா பர்ஷிம், இத்தாலியின் ஜமர்கோ தம்பேரி இருவரும் ஒரே உயரத்​தைத் தாண்டி​யிருந்​தனர். கூடுதல் உயரத்​தைத் தாண்டி ஒருவர்​ மட்டும் தங்கப்​ பதக்கத்தை வென்றிருக்க முடியும். ஆனால், அதற்கு மாறாகத் தங்கப்​ பதக்கத்தை இருவரும் பகிர்ந்து​கொண்டு ஜஸ் லாங்-ஜெஸி ஓவன்ஸ் வெளிப்​படுத்திய உயர்ந்த மனிதப் பண்பை அடுத்த கட்டத்​துக்கு நகர்த்​தினார்​கள்.

இப்படி நம் காலத்​துக்​கென்று சிரிப்பு, அழுகை, உணர்வுவயப்​படுதல், சோகம், கொண்டாட்டம் போன்ற பல்வேறு உணர்வுக் கலவை​களும் அசைபோட்டு மகிழ்​வதற்கான தருணங்​களும் தேவைப்​படு​கின்றன. சுருக்​கமாக ஒத்தி​கை​யில்​லாமல் ஒரு நாடகம் நடக்க வேண்டும். இதுபோன்ற சிலிர்ப்​புணர்வை ஏற்படுத்​தும் மாயாஜாலத் தருணங்கள்​ இந்த ஒலிம்​பிக்​கில் வாய்க்​குமா?

நவீனத்​துக்​கும் புதுமைக்​கும் வரலாற்றில் பெயர்பெற்ற பாரிஸில் நடைபெறும் இந்தப்​ போட்டி, அதற்கு உத்தர​வாதம் அளிக்​கும் என்றே தோன்றுகிறது. வழக்கத்​துக்கு மாறாக இந்த ஒலிம்​பிக்​குக்கான தயாரிப்பு, ஏற்​பாடுகளில் நிறைய மாற்றம்​ நிகழ்ந்துள்ளது ஒரு காரணம். மட்டுமல்​லாமல், கோவிட் தொற்​றுக்​குப் பிறகு அச்சம்​ இல்​லாமல் நடை​பெறும் போட்டி என்​ப​தா​லும் மயிர்க்​கூச்​செறியும் ஒலிம்​பிக் தருணங்​களுக்காக நம்​பிக்​கையுடன் காத்​திருப்​போம்.

- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

27 days ago

மேலும்