இ
ந்த முறை நீட் நுழைவுத் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் இந்த அனுபவத்தை என்றைக்கும் மறக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் எந்தத் தலைமுறையினரும் பார்த்திராத அளவுக்குக் கெடுபிடிகள், குளறுபடிகள், அலைக்கழிப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள் மருத்துவக் கனவைச் சுமந்திருக்கும் மாணவர்கள். குறிப்பாகத் தமிழக மாணவர்கள். வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் நீண்ட தூரப் பயணத்தால் மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதியிழந்து நிற்கிறார்கள். இந்த அவலத்துக்குக் காரணம் சி.பி.எஸ்.இ. நிர்வாகமா, முறையாகச் செயல்படாத தமிழக அரசா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
சென்ற முறை நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் விஷயத்தில் தமிழக அரசு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றிக் கடைசி நேரத்தில் தேர்வை எதிர்கொள்ளும் சிரமத்துக்கு ஆளாகினர் தமிழக மாணவர்கள். தவிர்க்கவே முடியாது எனும் நிலை உருவானதும் இந்த முறை தமிழக மாணவர்கள் கடும் பயிற்சிசெய்து, நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயாரானார்கள். இந்த முறை தேர்வு மையம் வடிவில் வந்தது பிரச்சினை. இந்தக் குழப்பத்தை 5,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், சிக்கிம் என்று சிதறடிக்கப்பட்டார்கள் மாணவர்கள். எத்தனை மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வெளி மாநிலத் தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று ஏப்ரல் 27-ல் உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்தது. தேர்வு தேதிக்குச் சரியாக மூன்று நாட்களுக்கு முன்னர், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதனால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நம்பிக்கையுடன் இருந்த 5,000 சொச்சம் மாணவர்களும் பெற்றோர்களும் கடைசி நேரத்தில் பிற மாநிலங்களுக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகினர்.
பரிதவித்த மாணவர்கள்
நாமும் தேர்வுகள் எழுதி வந்தவர்கள்தானே? ஒரு நாள் முன்னதாகக்கூட செல்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்பது நமக்குத் தெரியாதா? மே 4-ம் தேதி நிலவரப்படி மறுநாளான 5-ம் தேதிக்கு சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு ரயில்கள் இல்லை. விமானப் பயணச்சீட்டுகள் ரூ.12,500 தொடங்கி ரூ.50,000 வரை இருந்தன. இத்தனை நெருக்கடி உருவானதைத் தொடர்ந்து ராஜஸ்தான், கேரளா என்று வெளி மாநிலத் தமிழர்கள், அமைப்புகள் உதவிக்கரம் நீட்டினர். கடைசி நேரம் விழித்துக்கொண்ட தமிழக அரசு, வெளி மாநிலம் சென்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையை ‘கருணை’யோடு அறிவித்தது.
இத்தனைக் களேபரத்துக்கும் பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் நடுவில் ஒரு மாணவர் எப்படி இந்தத் தேர்வை எதிர்கொண்டிருப்பார் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். புதிய பிரதேசம், அறியாத மொழி என்று அந்நியத்தன்மை இளம் மாணவர்களை அச்சுறுத்தியிருக்காதா? இளம்பயிரைப் பிடுங்கிப் புதிய நிலத்தில் நடுவதை என்னவென்று சொல்வது? பதின்ம வயதில் எதிர்காலம் குறித்த குழப்பத்துடன் இருக்கும் மாணவர்களிடம் கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டாமா? கல்லூரி முடிந்து போட்டித் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கும் பெற்றோரின் துணை தேவைப்படும் இந்தக் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இல்லையா? நீட் தேர்வெழுத திருத்துறைப்பூண்டியிலிருந்து எர்ணாகுளத்துக்குத் தனது மகனை அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மரணமடைந்திருக்கிறார். இந்த இழப்பை எந்தச் சமாதானத்தாலும் ஈடுகட்ட முடியுமா? இந்தத் துயரங்கள் போதாதென்று, எல்லா தேர்வு மையங்களிலும் சோதனை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகள் வேறு.
இவ்விஷயத்தில் சி.பி.எஸ்.இ. பாரபட்சத்துடன் நடந்துகொண்டது என்று குற்றம்சாட்டுபவர்களின் வாதம் புறந்தள்ள முடியாதது. தேர்வு மையக் குழப்பம் தொடர்பாக வெவ்வேறு குரல்களில் பேசுகிறது சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 31% அதிகரித்ததைக் காரணம் காட்டும் சி.பி.எஸ்.இ. மறுபுறம் இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்கிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் 170 மையங்களை ஒதுக்கிய சி.பி.எஸ்.இ., கர்நாடகத்தில் 96,000 சொச்சம் பேருக்கு 187 தேர்வு மையங்களை ஒதுக்கியது எப்படி என்று தெரியவில்லை.
வணிகமயமா?
நீட் பயிற்சி வகுப்புகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. “நீட் தேர்வின் பின்னணியில் பெரிய அளவில் வணிக நோக்கம் இருக்கிறது. குறைவான எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது என்பதே, செலவைக் குறைக்கும் நடவடிக்கைதான்” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் மீது, மனசாட்சியின் மீது, மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரிடமும் தொக்கி நிற்கும் கேள்வி இது. எதிர்காலக் கனவுகளைச் சுமந்து நிற்கும் பதின்மவயது மாணவர்களிடம் இத்தனைக் கடுமை காட்டப்படுவது ஏன்? இந்த அளவுக்குக் கெடுபிடியை ஒரு தேர்தலில் காட்ட நம்மிடம் போதுமான தெளிவு, நேர்மை, கட்டுக்கோப்பு இருக்கிறதா?
வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago