கொலைகார டாஸ்மாக்: தமிழக ஆட்சியாளர்கள் திருந்துவது எப்போது?

By டி.எல்.சஞ்சீவி குமார்

ள்அரவமற்ற அந்த நடுநிசியில் சிறுவன் தினேஷின் தற்கொலை தருணங்களை சராசரி மனிதர்களால் கற்பனைசெய்யக்கூட இயலாது. அடர்ந்த இருளில் மேம்பாலத்தின் உச்சியிலிருந்து கழுத்தில் சுருக்கு மாட்டிக் குதித்துத் தொங்கியிருக்கிறான் தினேஷ். இவ்வளவு கொடூரமான தற்கொலை முடிவை நோக்கி அவனைத் தள்ளியது எது?

அவனது வீட்டின் சூழல்தான். இங்கே, ஒவ்வொரு குடிநோயாளியின் வீடும் நரகம். மிகைப்படுத்தவில்லை, வேண்டுமெனில் நரகத்தைவிடக் கொடியதாக ஏதேனும் இருந்தால், அதனுடனும் பொருத்திக்கொள்ளலாம். குடிநோயாளியின் வீட்டில் ஒழுங்கு எதுவும் இருக்காது. அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி, சிரிப்பு இருக்காது. நகைகள் தொடங்கி பண்ட பாத்திரங்கள் வரை எதுவும் மிஞ்சாது. அறம் சார்ந்த விஷயங்களுக்கு அங்கே அறவே இடமில்லை. நல்ல சிந்தனைகள், மனம் திறந்த உரையாடல்களுக்கு இடமில்லை. எந்த நேரமும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் பெண்கள் ஓலமும் வீட்டைச் சபித்திருக்கும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே பெரும்பாடு. அவர்கள் அணிந்துகொள்ள நல்ல உடை இருக்காது; உண்பதற்குச் சரியான உணவு கிடைக்காது. அக்கம்பக்கத்துக் குழந்தைகளைப் பார்த்து ஏங்கிஏங்கியே அவர்களின் கண்கள் உள்ளடங்கிப்போயிருக்கும். பெரும்பாலும் அவமானத்தையும் அவநம்பிக்கையுமே சுமக்கும் அந்தக் குழந்தைகளின் சிந்தனைகளும் எதிர்மறையாகவும் தன்னிரக்கம் சூழ்ந்தும் இருக்கும். இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால், துர்நாற்றமும் வசவோடிய வார்த்தைகளின் இரைச்சலும் நிறைந்த தமிழக அரசின் மதுக்கடை ‘பார்’களுக்கும் குடிநோயாளிகளின் வீடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

தமிழகத்தின் மக்கள்தொகையில் சுமார் ஒன்றரை கோடி பேர் குடிநோயாளிகள். அவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநோயாளிகளாகிவிட்ட குடும்பத்தினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையைத் தொடும். இப்படியாக ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாம் வாழும் மாநிலமும் ஒருவகையில் நரகம்தானே.

குடிநோயாளிகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். குறிப்பாக, குழந்தைகள் மீதான உளவியல் தாக்குதலையும் தாண்டி அவர்களின் மொத்த எதிர்காலமும் குடிநோயாளிகளால் அடித்துப் பிடுங்கப்படுகிறது. இந்த நிமிடத்தில் தினேஷ் இல்லை, இறந்துவிட்டான்... ஆனால், நடைபிணமாக வாழும் நிறைய குழந்தைகளை அறிவேன்.

குழந்தைகள் எப்போதுமே பெரியவர்களைவிட புத்திசாலிகள், நுண்ணறிவு மிக்கவர்கள். பெரியவர்களிடம் அவர்கள் ஏமாறுவதுகூட அவர்கள் மீதான நம்பிக்கையால்தான். குடிநோயாளிகளின் குடும்பங்களில் இப்படியான குழந்தைகள் வளரும்போது அவர்கள் மனரீதியாக - பொறுப்புள்ள குழந்தைகள், அனுசரித்துப்போகும் குழந்தைகள், கோமாளிக் குழந்தைகள், முரட்டுக் குழந்தைகள் என நான்கு வகையாக மாறுகிறார்கள் என்கிறது குடிநோய் சார்ந்த மனநல மருத்துவம்.

இப்படியாக, எளிதில் உணர்ச்சிவசப்படும் பிள்ளையான தினேஷ், தனது தந்தையிடம் முரட்டுத்தனத்தைக் காட்ட இயலாமல் தன்னிடமே காட்டிக்கொண்டு தற்கொலைசெய்துகொண்டிருக்கிறான். இன்று அநேகக் குடிநோயாளிகளின் வீடுகளில் குழந்தைகளின் நிலைமை இதுதான். அங்கே குழந்தைகளின் இயல்பு சிதைக்கப்படுகிறது. அவர்களின் குழந்தைமை நசுக்கப்படுகிறது. குடிநோயாளிகளுக்கும் குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஆலோசனை அளித்துத் தேற்றிவிட ஆல்கஹாலிக் அனானிமஸ், அல்-அனான் ஆகிய அமைப்புகள் பல இடங்களில் இருக்கின்றன. ஆனால், குடிநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஆலோசனை அளிக்கும் அல்லட்டீன் அமைப்பு மிக அரிதாகவே இருக்கிறது. அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் பரவலாக இருக்கும் இந்த அமைப்பு தமிழகத்தில் சென்னையில் மட்டும் எண் 17, பால்ஃபோர் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்கிற முகவரியில் இருக்கிறது. இந்த அமைப்பில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை, குழந்தைகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன.

குழந்தைகள் சார்பாக இறுதியாகக் கேட்கிறேன்... இன்று நீதிமன்றங்களில் விவாகரத்து கேட்டு நிரம்பி வழியும் வழக்குகளில் 70% குடிநோய்ப் பின்னணி கொண்டவையே. குடிநோயாளி கணவன் வேண்டாம் என்று மனைவியும், மனைவி பிடிக்கவில்லை என்று கணவனும் விவாகரத்து கேட்கிறார்கள். ஆனால், குடிநோயாளியாக இருக்கும் தனது தந்தை அல்லது தாயைப் பிடிக்கவில்லை என்றால், குழந்தைகள் எங்கே செல்லும்? அவர்களும் அப்படிக் கேட்க முடியுமா? யாராக இருந்தாலும் இதற்கு விடை சொல்லிவிட்டு அடுத்த கோப்பை மதுவைப் பற்றி சிந்தியுங்கள்!

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட தினேஷ்!

என். சுவாமிநாதன்

நெல்லை மாவட்டம், குருக்கள்பட்டியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் இருக்கும் கே.ரெட்டியப்பட்டியில் இருக்கிறது தினேஷின் வீடு. சரியான பேருந்து வசதிகூட இல்லாத இந்த ஊரின் முதல் மருத்துவராகியிருக்க வேண்டிய தினேஷ் நல்லசிவன், தனது தந்தை மாடசாமியின் குடிப்பழக்கத்தால் இன்று இல்லை. ‘நான் செத்துப்போனதுக்கு அப்புறமாவது குடிக்காம இரு. எனக்குக் கொள்ளி வைக்காதே… மொட்டை போடாதே… குடிக்காதே அப்பா... ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’ என்ற தினேஷின் கடித வரிகளைத் திரும்பத்திரும்பப் படித்துவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் குடிநோயாளியான மாடசாமி. ‘கடைசியாக ஒருமுறை உன் பேச்சை மீறுகிறேன் என்று அழுதவர்’ மகனுக்குக் கொள்ளிவைத்து, மொட்டை போட்டுள்ளார்!

 

 

மாடசாமியிடம் பேசினேன். “நீ குடிச்சீனா, நான் செத்துடுவேன்னு அடிக்கடி சொல்லுவான். விளையாட்டா சொல்லுறான்னு நினைச்சேன். செஞ்சுப்புட்டானே! இனி ஆயுசுக்கும் சாராயத்தைத் தொட மாட்டேன். இதோ இப்போகூட ஊரே குத்தம் சொல்லுது. படபடப்பாவே இருக்கு. பழைய மாடசாமின்னா குவாட்டரை போட்டுருப்பான். நான் உண்மையிலயே திருந்திட்டேன்…” என உருகுகிறார்.

மாடசாமி திருந்தினாலும், போன மகன் வரப்போவதில்லையே!

(இது சுருக்கப்பட்ட பகுதி. முழுக் கட்டுரையும் வாசிக்க... ‘காமதேனு’!)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்