டியாஸ் கேனல்: கியூப அரசின் புதிய முகம்!

By வெ.சந்திரமோகன்

கி

யூபாவில் சத்தமில்லாமல் ஒரு அதிகார மாற்றம் நடந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக ராணுவ உடை அணியாத, கேஸ்ட்ரோ குடும்பத்தினர் அல்லாத ஒருவர் கியூபாவின் அதிபராகியிருக்கிறார். மிகேல் டியாஸ் கேனல். வயது 58. ஆம். கியூபப் புரட்சிக்குப் பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக அந்நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அமெரிக்காவுடனான உறவில் நீடிக்கும் சிக்கல், பொருளாதார நெருக்கடி, எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாடு, பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கான கியூபர்களின் எதிர்பார்ப்பு என்று பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிபராகியிருக்கும் மிகேல் டியாஸ் கேனல் மீதுதான் தற்போது உலகின் பார்வை திரும்பியிருக்கிறது.

டியாஸ் கேனல் யார்?

கியூபாவின் சாண்டா கிளாரா மாகாணத்தில் 1960 ஏப்ரல் 20-ல் பிறந்தவர். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த டியாஸ் கேனல் எளிமையைத் தன் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்துவருபவர். மின் பொறியியல் படித்துவிட்டு சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றியவர், பின்னர் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1987-ல் கியூபாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான ‘கியூப கம்யூனிஸ்ட் கட்சி’யில் சேர்ந்தார். இளம் கம்யூனிஸ்ட் சங்கத்தில் உறுப்பினரானார். 1994-ல் வில்லா கிளாரா பகுதியின் பிராந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றது அவரது முதல் மைல்கல். உயர் கல்வித் துறை அமைச்சர், அமைச்சர் குழுவின் துணைத் தலைவர் என்று படிப்படியாக உயர்ந்த அவர், 2013-ல் கியூபாவின் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பதவிகள் வந்தபோது வசதியான மாளிகைக்கு மாறாதவர் என்று அவரது சொந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் நினைவுகூர்கிறார்கள். ஆடம்பரத்தை விரும்பாதவர் என்றபோதிலும், நவீனத் தொழில்நுட்பங்களில் ஈடுபாடு கொண்டவர். ரோலிங் ஸ்டோன்ஸ், பீட்டில்ஸ் ரசிகர். அலுவலகப் பணிக்கு மடிக்கணினி பயன்படுத்திய உயர் நிலைத் தலைவர்களில் ஒருவர். கியூபாவில் இணையப் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

செயல்வேகம் இவரது சிறப்பம்சம். தன்பாலின உறவாளர்களின் உரிமையை மதிப்பவர்; கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான தலைவர் என்றும் கியூப பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. அதிபர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், கேஸ்ட்ரோ குடும்பத்தினருடனான அவரது விசுவாசம், கியூபாவின் புரட்சிகர அரசியல் சித்தாந்தம் மீதான ஆழமான பற்று போன்றவையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்க விரோதம்

ஒபாமா ஆட்சிக் காலத்தில், 2015-ல் அமெரிக்காவுடனான உறவில் லேசாகத் துளிர்த்த நட்புறவு, ட்ரம்ப் ஆட்சியில் அதலபாதாளத்துக்குப் போயிருக்கிறது. கியூபா ஒரு தீய சக்தி என்று பேசிவருகிறார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன். உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும் கியூபா மீது குற்றம் சுமத்துகிறார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மைக் போம்பேயோ, கியூபாவிடம் உறவை மேம்படுத்த ஒபாமா எடுத்த முயற்சிகளைத் தொடக்கத்திலிருந்தே விமர்சித்துவருபவர். அமெரிக்காவின் விரோதப் போக்கை நன்கு அறிந்திருக்கும் டியாஸ் கேனல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒருபோதும் நம்பக் கூடாது எனும் உறுதியுடன் இருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பு கைமாறினாலும், கட்சியின் தலைமைப் பொறுப்பு இன்னமும் ரவுல் கேஸ்ட்ரோ வசம்தான் இருக்கிறது. 2021 வரை அவர் கட்சித் தலைவராக இருப்பார். இதுவரை, பிடல் கேஸ்ட்ரோவும் சரி, ரவுல் கேஸ்ட்ரோவும் சரி கட்சி, ஆட்சி இரண்டின் தலைமைப் பொறுப்பை ஒருசேர வகித்துவந்தனர். கட்சி விதிகளின்படி கட்சித் தலைமை சொல்வதைத்தான் அதிபர் கேட்க வேண்டும். இதுவும் டியாஸ் கேனலுக்கு ஒரு சவால் எனலாம்.

பொருளாதாரரீதியான சவால்கள்

1994 முதல் புழக்கத்தில் இருந்துவரும் ‘இரட்டை கரன்சி’ முறையை முடிவுக்குக் கொண்டுவர, ரவுல் கேஸ்ட்ரோ திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. பொருளாதாரரீதியில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்பதால், புதிய அதிபர் இதை எப்படிச் செயல்படுத்துவார் என்று பார்க்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது, வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது, சுற்றுலா வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் போன்றவையும் ரவுல் கேஸ்ட்ரோவால் முன்னெடுக்கப்பட்டவைதான். இந்நடவடிக்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துவிடக் கூடாது எனும் குரல்களும் எழுந்திருக்கின்றன. இதைக் கவனமாகக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு டியாஸ் கேனலுக்கு இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் எண்ணெயை இறக்குமதி செய்தது கியூபா. பதிலுக்கு மருத்துவர்களையும் மருத்துவ சேவைகளையும் வழங்கிவந்தது. தற்போது வெனிசுலாவில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், கியூபாவில் எரிபொருள், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. உற்பத்தியும் குறைந்திருக்கிறது. மின்சாரப் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

1990-களில் சோவியத் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளை பிடல் கேஸ்ட்ரோ எதிர்கொண்ட விதம் இன்றளவும் பாராட்டப்படுகிறது. 1991 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகள், கியூபாவுடனான வர்த்தக உறவைக் கைவிட வேண்டும் என்று தென் அமெரிக்க நாடுகளுக்குக் கொடுத்த நெருக்கடி போன்றவற்றைத் திறம்படச் சமாளித்தார் பிடல் கேஸ்ட்ரோ, மக்களின் ஒத்துழைப்புடன். இத்தனைக்கும் ஜிடிபி 15% அளவுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. இக்கட்டான அந்தச் சூழலிலும், அனைவருக்குமான பொது விநியோக முறை, இலவசக் கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றில் தடங்கல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். தற்போது அந்த அளவுக்குப் பெரும் நெருக்கடி இல்லை என்றாலும், பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குத் தயாராகிவரும் கியூபாவின் பாதையில் இது ஒரு தடங்கலாகப் பார்க்கப்படுகிறது. தவிர, ஒபாமாவின் முன்னெடுப்பால் கியூபா மீதான சில பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப் அரசு அவற்றை மீண்டும் கொண்டுவந்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கட்சித் தலைமையின் தலையீடு இருக்கும் என்பதால், இந்த அதிகார மாற்றத்தைப் பெரிய மாற்றமாக, பெரும்பாலான இளம் தலைமுறையினர் பார்க்கவில்லை. ஆனால், மக்களுடன் நேரடியாகப் பழகும் தலைவர் என்பதால் டியாஸ் கேனலின் வரவை மூத்த தலைமுறையினர் மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்!

- வெ.சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்