சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு: உரிமையின் நூறு ஆண்டுகள்!

By செல்வ புவியரசன்

மு

தல் உலகப் போருக்குப் பிறகு, வெர்சைல்ஸ் உடன்படிக்கையின்படி 1919-ல் தொடங்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, நூற்றாண்டு விழாவில் அடியெடுத்துவைக்கவிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில், தொழிலாளர் நலன்களைக் காக்கும் நடவடிக்கைகளில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் பங்கு மிக முக்கியமானது.

கட்டுப்பாடு இல்லாத மூலதனப் பெருக்கம், அதிக வேலை நேரம், குறைவான கூலி, உழைப்புச் சுரண்டல், மனித உரிமை மீறல் என்றிருந்த இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதியில் தொழில்துறையில் ஒரு தரநிலையை உருவாக்க வேண்டிய தேவை எழுந்ததன் விளைவுதான் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு. முக்கியமாக, ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்த தொழிலாளர்களின் உரிமைக் குரலுக்குக் காது கொடுத்தாக வேண்டியதன் அவசியமும் இருந்தது. உலகப் போரைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுவந்த சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்பட்ட பணிச் சூழலையும் இனிமேலும் தள்ளிப்போட முடியாது என்ற நிலையில், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான அதிகாரமும், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட நாடுகள் அதைப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்கு அளிக்கப்பட்டன.

தொழிற்சங்கங்களின் தோழன்

இதற்கு முன் இப்படி சர்வதேச அளவில் அரசுகளையும், தொழில் நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிற அமைப்பு ஏதும் இருந்ததில்லை. இது அரசுகளின் கூட்டமைப்பு அல்ல, தொழிலாளர்களும் தொழில் நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளும் இதில் அங்கம் வகிக் கிறார்கள். சோஷலிசப் புரட்சிக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக முதலாளித்துவம் தொழிலாளர்களோடு ஒத்திசைந்து செல்லும் கட்டாயத்துக்கு ஆளானது என்பதற்கு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பே உதாரணம். அமைப்பு தொடங்கப்பட்டபோதே, இந்தியா அதன் உறுப்பு நாடானது. சுதந்திரம் பெறாத நிலையில், அவ்வமைப்பின் உறுப்பினராக இருந்த ஒரே நாடு இந்தியாதான்.

இந்தியாவில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊக்கம் பெறுவதற்கு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உருவாக்கத்துக்கும் இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. தொடக்கக் காலத்தில், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களால் ஏஐடியுசி வழிநடத்தப்பட்டது. காந்தியை நவீனத் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என்று அழைத்தார் தொழிற்சங்க வாதியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரி. பொறுப்புணர்வு, நியாயமான கோரிக்கைகள், முறையான பேரம், தேவைப்பட்டால் சமரசம் ஆகியவற்றைத் தொழிற்சங்கங்களுக்கு வலியுறுத்தினார் காந்தி. ஏறக்குறைய சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு பரிந்துரைக்கும் தொழிற்சங்கச் செயல்பாடுகளும் அத்தகையதே.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் முதலாவது ஆசியக் கிளை 1928-ல் டெல்லியில் தொடங்கப்பட்டது. 1929-ல் தொழிலாளர் நிலைகுறித்த ராயல் கமிஷன் அறிக்கையை விவாதப் பொருளாக்கியது, இந்தக் கிளையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். 1931-ல் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னால், தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அரசியல் சட்ட விதிகளை இயற்றுவதற்கு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றார் தொழிற்சங்கத் தலைவ ரான என்.எம்.ஜோஷி. 1934-ல் தொடங்கி 1944 வரைக்கும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழுவில் இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாக அவர் பொறுப்புவகித்தார்.

ஐ.நா.வின் அங்கமானது

முதலாம் உலகப் போரின் கசப்பான நிகழ்வுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற குறிக்கோளில் உருவான உலக நாடுகள் சங்கம், இரண்டாம் உலகப் போரால் செயலிழந்தது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐநா அவையின் அங்கமாக மாறியது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு. 1944-ல் பிலடெல்பியா உடன்படிக்கை, அந்த அமைப்பைத் தொழிலாளர் உலகின் மனித உரிமைப் பாதுகாவலராக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனியப் பிடியிலிருந்து ஆசிய நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் விடுபட்டன. எனவே, முதலாளித்துவ நாடுகளின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர அமைப்பாக இயங்கும் வாய்ப்பினை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு பெற்றது. அந்த அமைப்பு மேற்கொண்ட உடன்படிக்கைகளின் காரண மாக உலகெங்கும் கூட்டுப் பேரங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தவிர்க்கவியலாமல் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவானது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் - தொழிலாளர்களின் வேலை நேரம், பாதுகாப்பு, சுகாதாரம், சமூகக் காப்பீடு தொடர்பான - பல்வேறு உடன்படிக்கைகளை இந்தியா நடைமுறைப்படுத்தியிருக்கிறது. முத்தரப்புப் பேச்சுவார்த்தை முறையினையும் பின்பற்றிவருகிறது. இந்தியாவின் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களுக்கும் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் வழிகாட்டியாக இருந்திருக்கிறது. சர்வதேச அமைப்பில் அங்கம்வகித்த இந்திய அதிகாரிகள், உலகளாவிய தொழிலாளர் நல மேம்பாட்டுக்குப் பங்காற்றியிருக்கிறார்கள். அமர்த்தியா சென் உள்ளிட்ட இந்தியாவின் பொருளாதார ஆய்வறிஞர்கள், சர்வதேசத் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.

உலகமயம் என்னும் சவால்

இந்தியா சுதந்திரம் பெற்ற இரண்டு மாதங்களில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் முதலாவது ஆசிய பிராந்திய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஜவாஹர்லால் நேரு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஐரோப்பிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, ஆசியாவின் தனித்தன்மை கொண்ட பிரச்சினைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொழிற்சாலைகளுக்கு வெளியே விவசாயத் தொழிலாளர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 1985-ல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, அமைப்புசாரா தொழிலாளர் களுக்கும் உரிய கவனம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பளிக்க அது முனைந்து நிற்கவில்லை. இப்போது, சோவியத் வீழ்ச்சிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் நடைமுறைக்கும் பிறகு, புதிய சிக்கல்களும் எழுந்துள்ளன. தொழிலாளர் சந்தை நெகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதே புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரிக்கையாக இருக்கிறது. உலகமயத்தின் விளைவாக, தொழிலாளர் நலச் சட்டங்கள் வலுவிழந்துவரும் நிலையில், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் இடையே 21-ம் நூற்றாண்டின் தொழிலாளர் பிரச்சினைகளைப் பற்றியும் அது கருத்தில்கொள்ளட்டும்!

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

மே 1: தொழிலாளர் தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்