‘என் கன்னத்தில் அழுத்தமாக விழுந்த அறை இது. என்னை இழிவுபடுத்தும் சித்தரிப்புகளையும் கேலி கிண்டல்களையும் சமூக வலைதளங்களில் காண்கிறேன். எனினும் என் கருத்தில் உறுதியாக நிற்பேன். மதவெறுப்பு இல்லாத இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். கடினமான பயணம் காத்திருக்கிறது. என் உடன் நின்றவர்களுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்’ - 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றபோது ‘எக்ஸ்’ தளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படிப் பதிவிட்டிருந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளும், தான் சொன்னதைச் செயல்படுத்தும்விதத்தில் அவர் நடந்துகொண்டார். பெரும்பாலான ஊடகங்களும் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளும் ஆளும் கட்சியாக பாஜக தவறு இழைத்தபோது அமைதி காத்தனர்; சிலர் ஆதரிக்கவும் செய்தனர். அப்போது ‘குற்றம் குற்றமே’ எனப் பொதுச் சமூகத்திலிருந்து அறிவுறுத்திய பிரகாஷ் ராஜ் போன்றோருக்குச் சமூகம் கடமைப்பட்டுள்ளது.
இடைவிடாக் கேள்விகள்: 2014இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆகின என 2018இல் கேட்ட ‘ஜஸ்ட் ஆஸ்கிங்’ (Just Asking) என்கிற பிரகாஷ் ராஜின் இணையவழிப் பரப்புரை, 2019 மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு நெருடலை ஏற்படுத்தியது. 2 கோடி வேலைவாய்ப்புகள் எப்போது உருவாக்கப்படும்?; வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் எப்போது மீட்கப்படும்?; பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரும் வருமானவரிச் சோதனைகள் நடப்பது ஏன் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார். தனது எதிர்ப்பின் ஒரு பகுதியாக, 2019 தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். அதில் தோற்றார். எனினும், இரண்டாம் முறையாக பாஜக வெற்றி பெற்ற பின்னரும், அவரது எதிர்ப்புத் தொடர்ந்தது. இப்போதும் தொடர்கிறது. ‘மதவாத அரசியலுக்கு எதிராகப் பரப்புரையைத் தொடங்கியபோது, நான் தனி ஒரு மனிதனாக இருந்தேன். ஆனால், இப்போது நான் தனியாள் இல்லை. பல்வேறு தரப்பினர் என்னை ஆதரிக்கின்றனர்’ எனத் திடமாகக் கூறுகிறார் பிரகாஷ் ராஜ்.
2015இல் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடகப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.எம்.கல்புர்கி வழக்கும் 2017இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் வழக்கும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் தேக்கமடைந்த நிலையில் இருந்தன. இருவரும் சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட சிலரால் கொல்லப்பட்டுள்ளதாகப் புலனாய்வுக் குழு தெரிவித்தது. மக்களால் இக்கொலைகள் மறக்கப்படாமல் இருப்பதற்கு பிரகாஷ் ராஜ் போன்றோரின் பரப்புரையும் ஒரு காரணம்.
யூடியூப் புரட்சி: பரகால பிரபாகர், ஆந்திர மாநில அரசின் ஆலோசகராக முன்பு பொறுப்பு வகித்தவர். தற்போது பொருளாதார வகுப்புகள், சொற்பொழிவுகளுக்காக அழைக்கப்படுகிறார். பணியின்பொருட்டு நாடு முழுவதும் பயணம் செய்த பரகால பிரபாகர், பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றார். “கல்லூரிகளுக்குச் செல்கையில், மாணவர்களிடம் கலந்துரையாடும்விதத்தில் கூட்டம் ஒன்றையாவது ஏற்படுத்தும்படி நான் கேட்டுக்கொள்வேன். நான் சென்ற இடங்களில், ஆளும் கட்சி மீதான ஏமாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்தேன். பயணங்கள் மூலமாக மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது” என்கிறார் பிரபாகர். தனது பெயரில் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி ‘மிட்வீக் மேட்டர்ஸ்’ என்கிற தலைப்பில் பாஜக ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள் குறித்த தனது கருத்துகளைச் சில ஆண்டுகளாக இவர் முன்வைத்துவருகிறார்.
‘ஆன்ட்டி இந்தியன்’, ‘அர்பன் நக்சல்’ என்கிற முத்திரை பிரபாகருக்குக் கிடைத்தாலும், அவரது விமர்சனங்கள் வீரியம் குறையாமல் தொடர்கின்றன. ‘The crooked timber of New India (Essays on a republic in crisis) என்கிற நூலை 2023இல் அவர் எழுதினார். ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரைகள் குறித்த திறனாய்வு இந்நூலில் உண்டு. அனைத்துத் தரப்பினரது நலனையும் உள்ளடக்கிய அரசு, ஊழல் அற்ற ஆட்சி ஆகிய வாக்குறுதிகளை அளித்த மோடியின் இலக்கு, போகப் போகத் தடம் மாறியதை அதில் குறிப்பிடுகிறார். 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்குச் சாதகமானதாக இருக்காது என பிரபாகர் கூறிவந்தார். 220-230 தொகுதிகள்தான் பாஜகவுக்குக் கிடைக்கும் என்கிற அவரது கணிப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை.
ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் பேசுவது ஆட்சியாளர்களை எந்தளவு பதற்றப்படுத்தும் என்பதற்கு துருவ் ராட்டியின் யூடியூப் காணொளிகள் உதாரணம். இவர் 2016இல் பாஜகவின் இணையதளப் பிரிவை விமர்சித்துக் காணொளி வெளியிட்டார். அன்றிலிருந்து சூடுபிடித்த கருத்துவழித் தாக்குதல், 2024 தேர்தலில் உச்சத்தைத் தொட்டது. நாட்டு நடப்புகளை வெறும் தகவல்களாக அளிக்காமல், மக்களின் தரப்பில் நின்று பேசுபவராக துருவ் ராட்டி இருந்தார். முதன்மை ஊடகங்கள், ஆளும் கட்சியின் முகம் கோணாமல் செய்தி வழங்கிக்கொண்டிருந்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் பேசத் தயார் ஆகாத நிலையிலும் இருந்தபோது, தன் விமர்சனங்களை துருவ் ராட்டி முன்வைத்தார். இவர் ஆங்கிலத்தில் அல்லாமல், வட இந்தியாவுக்கு நெருக்கமான விதத்தில் இந்தியில் பேசுவது இன்னொரு சிறப்பு. பிப்ரவரி 22இல் இவர் வெளியிட்ட ‘இந்தியா சர்வாதிகாரம் ஆகிறதா?’ என்கிற காணொளியை இரண்டு கோடிக்கும் மேலானவர்கள் பார்த்தனர்.
பிப்ரவரியில் தொடங்கிய விவசாயிகளின் இரண்டாம் போராட்டம், கேலிக்கூத்து ஆன சண்டிகர் மேயர் தேர்தல் போன்ற நிகழ்வுகளை முன்வைத்து, பாஜக அரசின் செயல்பாடுகள் இதில் விமர்சிக்கப்பட்டிருந்தன. “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசின் நிறைகுறைகளை நான் பேசிக்கொண்டே இருப்பேன்” என்கிறார் துருவ் ராட்டி. ‘வெளிநாட்டில் இருக்கும் உனக்கு இந்திய அரசியல் மீது அப்படியென்ன அக்கறை?’, ‘உனக்கு எங்கிருந்து பணம் வருகிறது?’ என ஆளுங்கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து கேள்விகள் எழாமல் இல்லை. எனினும் துருவ் ராட்டியின் விமர்சனங்கள் கூர்மை இழக்காமல் தொடர்கின்றன. ஹரியாணாவைச் சேர்ந்த துருவ் ராட்டி, தன் மனைவியுடன் ஜெர்மனியில் வசிக்கிறார். இந்தியாவில் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார் எனச் சில பார்வையாளர்கள் பின்னூட்டமிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்குரல்களைச் சமாளிக்கக் கைது நடவடிக்கைகளை மட்டுமே நம்பிய பாஜக அரசு குறித்த புரிதல்தான் அது.
பாடம் கற்பித்த குரல்கள்: உத்தரப் பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் கஃபீல் கான், அம்மாநிலத்தில் தலித்களின் உரிமைகளைக் காக்க ‘பீம் ஆர்மி ஏக்தா மிஷன்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, தலித் சிறாருக்காகப் பள்ளிக்கூடங்கள் நடத்துவதுபோன்ற பணிகளில் ஈடுபடும் சந்திரசேகர ஆசாத் ஆகியோரும் இந்த வகையில் முக்கியமானவர்கள். பிஹாரைச் சேர்ந்த ஐஐடி பட்டதாரியும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவருமான ஷார்ஜீல் இமாம் போன்றோர் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்காக நீதிமன்றத்தின் தலையீட்டையும் மீறி, அம்மாநிலத்தில் உள்ள பாஜக அரசால் துரத்தித் துரத்திக் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற ஓராண்டுக்குள் அவரது அரசு, 160 பேரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்திருந்தது.
மாட்டிறைச்சி உண்பது உள்பட ஏதேனும் ஒன்றை முன்வைத்து கும்பலாகச் சேர்ந்து அப்பாவிகளை அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் 2019இல் வட இந்தியாவில் அடிக்கடி நடந்தன. வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா, திரைப்பட இயக்குநர்கள் ஷியாம் பெனகல், மணிரத்னம் உள்ளிட்ட சில ஆளுமைகள் கும்பல் வன்முறையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுதினர். இப்படி கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு எல்லை தாண்டும்போதெல்லாம் குரல் எழுப்பியவர்களில், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் உள்பட இன்னும் பலர் உண்டு. பாஜக பெரும்பான்மை பெற இயலாமல் போனதற்குக் காரணமான இத்தகைய பங்களிப்பு, அக்கட்சிக்கும் சமூகத்துக்கும் ஊடகங்களுக்கும் ஒரு முக்கியமான படிப்பினை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago