மோடி 3.0 - சில முன்னோட்டக் காட்சிகள்

By வெ.சந்திரமோகன்

‘ஆயேகா தோ மோடி ஹீ’ (மோடிதான் மீண்டும் வருவார்) என்று பாஜகவினர் முன்னெடுத்த முழக்கம் உண்மைதான் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துவிட்டன. எனினும், பாஜக என்னும் ஒற்றைக் கட்சி; மோடி என்னும் ஒற்றை மனிதரின் அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் என்று கட்டமைக்கப்பட்ட கற்பிதத்துக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளிட்டவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் கண்டிராத காட்சிகள் இனி அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைகொடுக்காத கடவுள்: தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ராமர் பெயரை உச்சரிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். பாஜகவின் எல்லாக் கூட்டங்களிலும் எழுப்பப்பட்ட ‘ஜெய் ராம்’ முழக்கமும் இந்த முறை ஒலிக்கவில்லை.

மாறாக, ஒடிஷாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தை நினைவுபடுத்தும் வகையில், ‘ஜெய் ஜெகன்னாத்’ என்று மோடி முழங்கினார். ஒடிஷாவில் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றிதான் இதற்குக் காரணம் என்றும், ராமர் கோயில் தொடர்பான வெற்றி முழக்கங்கள் கைகொடுக்காதது இன்னொரு காரணம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

முகலாயர்கள், மட்டன், மங்கள் சூத்திரா (தாலி), மச்லி (மீன்), முஜ்ரா நடனம் என்றே பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் பாஜகவுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மத வெறுப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய நவ்நீத் ராணா, மாதவி லதா போன்ற பாஜக வேட்பாளர்களுக்குக் கிடைத்த தோல்வியும் முக்கியமானது.

மோடியால் திறக்கப்பட்ட ராமர் கோயில் அமைந்திருக்கும் அயோத்தியாவை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் தோல்வி, ஆன்மிகத்தை அரசியல் ஆயுதமாகக் கொள்வோருக்கு உணர்த்தப்பட்டிருக்கும் பாடம் என்றே சொல்ல வேண்டும்.

ஃபைஸாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அவ்தேஷ் பிரசாத், பாஜகவின் லல்லு சிங்கை வீழ்த்தியிருக்கிறார். இண்டியா கூட்டணி வென்றால், ராமர் கோயிலுக்கு ‘பாபர் பூட்டு’ போடப்படும்; ராம் லல்லா சிலை மீண்டும் கொட்டகையின்கீழ் வைக்கப்படும் என்றெல்லாம் மோடி பேசினார். ராமர் கோயில் திறப்புவிழாவைப் புறக்கணித்ததாகக் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளைச் சாடினார்.

ஆனால், அயோத்தியா மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பாஜக கண்டுகொள்ளவில்லை. ராமர் கோயில் புனரமைப்புப் பணிகளைக் காரணம் காட்டி, அந்தப் பகுதியில் வசித்துவந்த பலர் இடமாற்றம் செய்யப்பட்டது; பக்தர்களின் வருகையைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்ட சாலை அமைப்புப் பணிகள் உள்ளிட்டவற்றால் உள்ளூர் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது எனப் பல பிரச்சினைகளுக்கு பாஜகவினர் முகங்கொடுக்கவில்லை.

முஸ்லிம்களைக் குறிவைத்து வெளிப்படையாகவே பிரச்சாரத்தை முன்னெடுத்த பாஜக, கூடவே இண்டியா கூட்டணிக் கட்சிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் - ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிராகவும் செயல்திட்டத்தை வைத்திருப்பதாகப் பேசிவந்தது. அதை மிகக் கவனமாக எதிர்கொண்ட காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டிக்கொண்டதுடன், இந்துக்களின் கணிசமான ஆதரவையும் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன.

புதிய சவால்கள்: இந்தத் தேர்தல் முடிவுகள், மோடியின் தனிப்பட்ட செல்வாக்கைக் குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், “பாஜக மொத்தமாக வென்ற இடங்களைவிட எதிர்க்கட்சிகள் குறைவாகத்தான் வென்றிருக்கின்றன” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மோடி. விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவிவிடுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியாகவே கூறியிருக்கிறார்.

அதேவேளையில், கட்சிக்குள்ளும் வெளியிலும் மோடியின் செல்வாக்கு அதே நிலையில் நீடிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. மத்திய அரசின் எந்தத் துறை தொடர்பான முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்கிற நிலை இனியும் தொடருமா என்பதும் கேள்விக்குறிதான்.

மோடி அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு ஆதரவளித்த பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் - முறையே ஒடிஷா, ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் வீழ்த்தப்பட்டு ஆட்சியை இழந்திருக்கின்றன. பாஜகவின் நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்த தங்களுக்குத் துணைநிற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு இக்கட்சிகள் செவிசாய்த்ததில்லை.

தற்போது முன்பைவிட அதிகம் பலம் பெற்றிருக்கும் எதிர்க்கட்சிகள், இப்போது இதுபோன்ற கட்சிகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழல் இல்லை. மாறாக, பாஜகதான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை. இதில் நிறைய நெருடல்கள் உண்டு.

மாமனாரின் (என்.டி.ராமராவ்) முதுகில் குத்தியவர் என முன்பு சந்திரபாபு நாயுடுவைப் பகிரங்கமாக விமர்சித்த மோடி, இந்தத் தேர்தலிலும் - தேர்தல் முடிவுக்குப் பின்னரும் அவருடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 2020 பிஹார் தேர்தலில் - கூட்டணியில் இருந்தபோதிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றிவாய்ப்பைக் குறைக்க – சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் துணையுடன் - பாஜக மேற்கொண்ட முயற்சி மறக்க முடியாதது.

அதன் பிறகு, பெருந்தன்மையாக முதல்வர் பதவி நிதிஷுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், பாஜக அவருக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்ததும் கவனிக்கத்தக்கது. ஆக, இனி நிதிஷ் குமாரை மிகுந்த கவனத்துடன் பாஜக அணுக வேண்டியிருக்கும். “இனிமேல் அணி மாற மாட்டேன். இனி பாஜக கூட்டணியில்தான் இருப்பேன்” என்று (இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறி ‘மீண்டும்’ பாஜக பக்கம் வந்த பின்னர்) நிதிஷ் கூறியிருந்தாலும், அவர் நம்பகத்துக்குரியவரா என்பது அரசியல் வட்டாரத்தில் தவிர்க்க முடியாத கேள்வி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட தருணத்தில் (2013), “பிரிவினைவாதக் கொள்கை கொண்ட தலைவரான மோடியை நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று கூறி, கூட்டணியிலிருந்தே வெளியேறியவர் நிதிஷ். இந்த முறை பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்கிற செய்திகள் வெளியானதும், “நிதிஷ் பிரதமர் பதவிக்கான தலைவர்தான்” என்று ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் காலித் அன்வர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையில், நீண்ட காலமாகவே அந்தக் கட்சியினர் இவ்வாறு பேசிவருகின்றனர்.

அணுகுமுறை மாறுமா? - வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சினையாக வளர்ந்திருக்கும் நிலையில், பாஜக சார்பில் வாதிட்டவர்கள் முத்ரா கடன் திட்டத்தையே முதன்மைப்படுத்திப் பேசினர். அது இளம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவில்லை. அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவக் கனவில் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.

நான்கே ஆண்டுகள்தான் ராணுவப் பணி; 25% பேர்தான் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பணியில் தொடர முடியும்; முன்னாள் ராணுவத்தினருக்கு இதற்கு முன் இயல்பாகக் கிடைத்துவந்த சலுகைகள் கிடையாது என்றெல்லாம் நிபந்தனைகளைக் கொண்ட இத்திட்டத்தின் எதிர்மறை அம்சங்களைக் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் பெரிய அளவில் இளம் வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கின்றன. இனியும் அந்தத் திட்டத்தை பாஜக கூட்டணி அரசு தொடருமா என்னும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி நடத்தவிருக்கும் பாஜக, முன்பைப் போல அவ்வளவு எளிதில் தனியார்மயமாக்கல், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்க முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவடைந்திருக்கும் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அருகில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் மனது வைத்தால்தான் இனி முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

மாநிலங்களவையில் பாஜகவின் நிலையும் கவனத்துக்குரியது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 117 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளனர். 121 பேர் இருந்தால்தான் பெரும்பான்மை என்னும் சூழலில், கூட்டணிக் கட்சிகளை இன்னும் சில மாதங்களுக்கு அதிகமாகவே பாஜக சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

2014க்குப் பிறகு மோடியையே தேர்தல் வெற்றிக்கான வெற்றி முகமாக முன்னிறுத்திவந்த பாஜக, இனியும் அதே சூத்திரத்தை மட்டும் நம்பிச் செயல்படுமா என்பது தேசிய அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்துவிடும்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்