நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாகப் பல்வேறு திருப்பங்களுடன் - நீண்ட நாள்களாக - நடைபெற்றுவந்த மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 370, 400 என எடுத்த எடுப்பிலேயே தங்கள் இலக்கை இந்தத் தேர்தலில் வகுத்துக்கொண்ட பாஜக, வழக்கம்போல மோடியின் பிம்பத்தை முதலீடாக வைத்தே இந்தத் தேர்தலையும் எதிர்கொண்டது. பிரச்சார மேடைகளில் மட்டுமல்லாமல், பிரத்யேகப் பேட்டிகளிலும் மோடி நிறைய பேசினார். சர்ச்சைக்குரிய அவரது கருத்துகள் எதிர்க்கட்சிகளுக்கு வாகாக அமைந்தது தனிக்கதை.
அனல் பறந்த பிரச்சாரம்: இந்தத் தேர்தல், அரசமைப்புச் சட்டத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும், அதைப் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இடையிலான சித்தாந்தப் போர் என ராகுல் காந்தி வர்ணித்தார். அரசமைப்புச் சட்ட நகலும் அம்பேத்கரின் ஒளிப்படமுமாகவே அவர் வலம்வந்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்கப்போவதாக ராகுல் முன்வைத்த விமர்சனங்கள், தலித் மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உரிமைகளை உறுதிசெய்யும் அரசமைப்புச் சட்டம் மாற்றப்படுவது ஆபத்தானது என்னும் கருத்தை தலித் மக்கள் மத்தியில் பரப்புவதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டியது. ராமர் கோயில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மட்டுமல்ல, எந்த தலித் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதுடன், இடஒதுக்கீட்டையும் ரத்துசெய்துவிடும் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களின் இடஒதுக்கீட்டை / சொத்துக்களைப் பிடுங்கி முஸ்லிம்களிடம் இண்டியா கூட்டணி கொடுத்துவிடும் என எல்லா மேடைகளிலும் பேசத் தொடங்கினார் மோடி.
» கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் காவி உடையில் பிரதமர் மோடி தியானம் - புகைப்படங்கள் வெளியீடு
» பிரஜ்வல் ரேவண்ணா கைது: அடுத்தது என்ன? - இன்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
ஆரம்பத்தில் ‘மோடியின் உத்தரவாதங்கள்’ என ஆக்கபூர்வமாகவே தங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கியதாகவும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்ததாலேயே இந்த வழிமுறையைக் கையாண்டதாகவும் பாஜகவினர் விளக்கமளிக்கிறார்கள்.
இடத்துக்கு ஏற்றாற்போல வியூகத்தை அமைத்துக்கொண்டது பாஜக. சாதி அடிப்படையிலான சவால்கள் நிலவும் பிஹார் போன்ற மாநிலங்களில் பயங்கரவாதம் போன்ற தேசியப் பிரச்சினைகளையே அக்கட்சி பேசுபொருளாக்கியது. வழக்கமான இந்துத்துவ அஸ்திரத்தைப் பல தருணங்களில் பயன்படுத்தியது.
பழங்குடி மக்கள் நிறைந்த ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்த மோடி, ‘லவ் ஜிகாத்’ என்ற பதத்தை உருவாக்கியதே ஜார்க்கண்ட் மக்கள்தான் எனப் பேசியது ஓர் எடுத்துக்காட்டு. மோடி, யோகி ஆதித்யநாத் வரிசையில் தீவிர இந்துத்துவவாதியாக அறியப்படும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பெரும்பாலான இந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் மீதான அச்சம் இருப்பதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்திலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தராகண்ட் மாநிலங்களில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ராகுல், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்களுக்குப் பெரும் கூட்டம் கூடியதை ஊடகங்களால் மறைத்துவிட முடியவில்லை. எனினும், அந்த எண்ணிக்கையெல்லாம் வாக்குகளாக மாறிவிடாது என்கிற கணிப்பை பாஜகவினரும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள்.
பிஹார் பிரச்சார மேடைகளில் ராகுல் அருகே அமர்ந்துகொண்டு இந்த வாக்குறுதியைத் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ். நகைச்சுவைக்குப் பெயர்போன சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி தொடங்கி தேர்தல் பத்திர விவகாரம், அக்னிபத் திட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து சுவாரசியமாகப் பிரச்சாரம் செய்தார்.
முக்கிய மாநிலங்களின் நிலவரம்: 13 தொகுதிகளை மட்டுமே கொண்ட பஞ்சாபில் நான்கு முனைப் போட்டி. முதன்முறையாக பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அதன் முன்னாள் கூட்டாளியான அகாலி தளமும் தனித்துக் களம் காண்கிறது. டெல்லியில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடுகிறது. இதனால் வாக்குகள் சிதறித் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கலாம் என பாஜக நம்புகிறது.
அகாலி தளத்துடன் கூட்டணி வைத்திருந்தால் பஞ்சாபில் பாஜகவுக்கு அபார வெற்றி கிடைக்க வாய்ப்பு இருந்தது என அகாலி தளம் தலைவர் நரேஷ் குஜ்ராலே கூறியிருக்கிறார். ஆனால், விவசாயிகளை முதன்மையாகக் கொண்ட அகாலி தளம் கட்சி, விவசாயிகள் போராட்டம், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக அளித்த உறுதிமொழியை பாஜக நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயங்கியது.
காங்கிரஸுடன் டெல்லியில் கூட்டணி, பஞ்சாபில் எதிர்த்துப் போட்டி என ஆம் ஆத்மி கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனினும், “தேசத்தைக் காப்பாற்ற இது அவசியம்” என்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். எந்தெந்த இடங்களில் பாஜகவை வீழ்த்துவது அவசியமோ, அங்கெல்லாம் காங்கிரஸுடன் கைகோத்ததாகவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
காஷ்மீரில் மொத்தம் உள்ள ஐந்து தொகுதிகளில் நகர், அனந்த்நாக் - ரஜோரி, பாராமுல்லா என மூன்று முக்கியத் தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் நடக்கும் இந்த முக்கியத் தேர்தலில், மோடி அங்கு பிரச்சாரத்துக்கே செல்லவில்லை.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தன்னாட்சி உரிமையை வழங்கும் 6 ஆவது அட்டவணையை அமல்படுத்த வேண்டும் எனப் போராடும் லடாக் ஆகிய பகுதிகளிலும் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊடுருவல்காரர்களுக்குச் சலுகைகள் அளிப்பதாகவும், மத்திய அரசு அனுப்பும் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள். சந்தேஷ்காளி விவகாரத்தையும் அக்கட்சி முதன்மையாக முன்னெடுத்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அதிரடியாகப் பதிலடி தந்தார் மம்தா.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவரும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படுபவருமான வி.கே.பாண்டியனை ஒரு தமிழர் என்கிற அடிப்படையிலேயே மோடியும் அமித் ஷாவும் தொடர்ந்து விமர்சித்துவந்தனர். நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததன் பின்னணியில் பாண்டியன் இருப்பதாக மறைமுகமாக மோடி குற்றம் சாட்டினார்.
பொதுவாக அதிர்ந்து பேசாத நவீனே, “பொய் சொல்வதற்கும் ஓர் அளவு இருக்கிறது” என்று கண்டிக்கும் அளவுக்கு விவகாரம் முற்றியது. ரயில்வே துறையை பாஜக அரசு நாசமாக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டும் காங்கிரஸ், பாலாசோர் விபத்தை ஒடிஷா மக்கள் மறக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்தது.
சொந்தத் தொகுதியில் சவால்: வாராணசி தொகுதி அமைந்திருக்கும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குத் தனித்த செல்வாக்கு உண்டு. அத்தொகுதியில் 2014, 2019 தேர்தல்களில் மோடி அபார வெற்றி பெற்றார். மோடியை அங்கு வீழ்த்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றாலும், அவருக்கான வாக்குகளை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் பிரயத்தனம் செய்கின்றன.
வாராணசியின் உயிர் நாடியான கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்துவதாக மோடி முன்வைத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், கங்கையில் தொடங்கப்பட்ட சொகுசுக் கப்பலில் மதுபானங்கள் பரிமாறப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. மறுசீரமைப்பு என்கிற பெயரில் இப்புனித நகரின் மரபு சிதைக்கப்பட்டுவிட்டதாக பாஜக பாணியிலேயே காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டும் முக்கியமானது.
2014, 2019 தேர்தல்களில் தனது வாராணசி தொகுதியில் ஒருமுறைகூடத் தங்காத மோடி, இந்த முறை இரண்டு நாள்கள் தங்கியதையும், அங்கு பாஜகவின் முக்கியத் தலைகள் பிரச்சாரத்துக்காகக் குவிவதையும் வைத்துத் தனது சொந்தத் தொகுதியிலேயே மோடி நம்பிக்கையில்லாமல் இருக்கிறார் எனக் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கிண்டல் செய்கின்றன.
அது ஒருவகையில் பாஜகவைத் தார்மிகரீதியில் பலவீனப்படுத்தும் என்பது அக்கட்சிகளின் எண்ணம். ஆனால், கடவுளால் அனுப்பப்பட்டவர் எனக் கூறிக்கொள்ளும் மோடி, எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தவமிருக்கத் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். ஜூன் 4ஆம் தேதி மாலை மக்களின் ‘மனதின் குரல்’ என்னவென்று தெரிந்துவிடும்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago