‘காட்டுயிர் பாதுகாப்புத் திட்டம் 2002’, ‘தேசியச் சுற்றுச்சூழல் கொள்கை 2006’ ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, தேசியப் பூங்கா, சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இன்படி, சூழலியல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்கப்பட வேண்டும்.
இது அப்பகுதிகளின் சூழல் நலனைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பு. பல மாநிலங்கள் இந்த 10 கி.மீ. சூழலியல் கூருணர்வு மண்டலம், பல ‘வளர்ச்சித் திட்டங்க’ளைப் பாதிக்கும் என ஆட்சேபம் எழுப்பியதால், தேசிய காட்டுயிர் வாரியம் அந்தந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் எல்லையை மாநிலங்கள் நிர்ணயித்துக்கொள்ளலாம் என அறிவித்தது.
அவ்வாறு குறிப்பிட்டு வரையறுக்கப்படாத பகுதிகளின் எல்லைகளிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளவை இயல்பாகவே சூழலியல் கூருணர்வு மண்டலமாகக் கருதப்பட்டுவருகின்றன. அதன்படி, அங்குள்ள நிலப்பரப்பில் தடை செய்யப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட, அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
சுரங்கங்கள், மர அறுவை ஆலைகள், காற்று, நீர், ஒலி, நில மாசுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், நீர்மின் திட்டங்கள், அபாயகரமான பொருள்களை உற்பத்தி செய்தல், கழிவுகளை நீர்நிலைகளில் - நிலங்களில் வெளியேற்றும் செயல் போன்றவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மரங்களை வெட்டுதல், உணவகங்கள் / தங்கும் விடுதிகள் அமைத்தல், நிலத்தடி நீர் உள்பட பிற நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துதல் போன்றவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.
» “பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” - மத்திய அரசு மீது கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்
» கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? - மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு
பழவேற்காடு ஏரி / பறவைகள் சரணாலயம்: பழவேற்காடு ஏரி, தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குக் கடற்கரையில் அமையப்பெற்ற, சூழலியல்-மீன்பிடித் தொழில் சார்ந்த சமூகப் பொருளாதார முக்கியத்துவம் ஒருங்கமைந்த ஓர் ஏரி. 600 ஆண்டுகளைக் கடந்து நிலைத்திருக்கும் இந்த ஏரி, பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்துவருகிறது.
அதன் அலையாத்திக் காடுகளின் அடர்த்தி சுருங்கிவருவது, பெரு வணிக இறால் பண்ணைகளின் மாசு ஏற்படுத்தும் செயல்பாடு, நீர் - மண்வளச் சுரண்டல் இவற்றோடு தற்போது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி - உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில், சுற்றுச்சூழல் - சமூக, பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல ‘பெருந்திட்டங்க’ளுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வது போன்றவை அவற்றுள் முக்கியமானவை.
இந்தச் சூழலில், ஈர நிலமாகவும், அலையாத்திக் காடுகளின் இருப்பிடமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதாரமாகவும் பல அதிமுக்கிய சூழலியல் சேவைகளை வழங்கிவரும் பழவேற்காடு ஏரியைப் பாதுகாப்பது அவசியம். இவற்றோடு இந்த ஏரி பலவகை வலசைப் பறவைகளுக்கு இருப்பிடமாகவும் இருப்பதால், இதனைக் காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம் 1972 இன் கீழ் ‘பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்’ என 1980இல் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இவ்வாறு ஒரு பகுதியைச் சரணாலயமாக அறிவித்ததும் வனத் துறை உள்பட, மாவட்ட நிர்வாகம் சில முக்கிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி அச்சரணாலயத்தின் எல்லைகளைத் தீர்க்கமாக வரையறுப்பது, அப்பகுதி மக்களின் நில உரிமைகள் பற்றிய ஐயங்களைத் தீர்த்துவைப்பது, சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் எல்லையை வரையறுப்பது போன்ற நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். ஆனால், இன்றுவரை சரணாலயத்தின் அருகமைந்த சில பகுதிகளும், 13 கிராமங்களுமே அதன் தோராய எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
ஏன் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை? - பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து, 1998இல் திருவள்ளூர் மாவட்ட அரசிதழில் இது பறவைகள் சரணாலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தும், அதன் பின் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய நடைமுறைகளை வனத் துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
தீர்க்கமான எல்லைகளை வரையறுக்க, சரணாலயப் பகுதிக்குள் இருக்கும் மக்களின் நில உரிமைகள் சார்ந்த நடைமுறைகள் இன்றளவும் முடிக்கப்படவில்லை. இதனால், சரணாலய எல்லையிலிருந்து 10 கி.மீ. வரையுள்ள பகுதிகள் சூழலியல் கூருணர்வு மண்டலமாக இருக்கின்றன. இதனால், சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படுத்தவல்ல பெருந்திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
தற்போது 26 ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் சரணாலய எல்லைக்குள் வசிக்கும் மக்கள், தங்கள் நில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகள் முடிந்த பிறகே சரணாலயத்தின் தீர்க்கமான எல்லைகள் வரையறுக்கப்படும். ஆக, 1980 முதல் இன்றுவரையிலான ஏறக்குறைய 44 ஆண்டுகளாகச் சரணாலயத்தின் தீர்க்கமான எல்லைகள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் ஏன் வரையறுக்கப்படவில்லை என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.
தற்போது ஏன் வேகம் காட்டப்படுகிறது? - இக்கேள்விக்கான பதிலைக் கடந்த சில மாதங்களில் நடந்த மாநில-தேசியக் காட்டுயிர் வாரியங்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவற்றைக் கொண்டு அறிய முடிகிறது. பழவேற்காடு ஏரிப் பறவைகள் சரணாலயத்தின் சூழலியல் கூருணர்வு மண்டலத்தில் தொழில் பூங்கா - அது தொடர்புடைய கட்டுமானப் பணிகளுக்கும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சிவப்புப் பிரிவின் கீழ் உள்ள அதிக மாசு ஏற்படுத்தவல்ல சில தொழிற்சாலைகளின் கட்டுமானத்துக்கும், விரிவாக்கத்துக்கும் திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக மாநிலக் காட்டுயிர் வாரியத்தின் பரிந்துரைப்படி, தேசிய காட்டுயிர் வாரியம் இப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் வண்ணம் பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் தீர்க்கமான பரப்பளவையும், அதன் சூழலியல் கூருணர்வு மண்டல எல்லையையும் வரையறுக்க தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்கிறது.
இந்தப் பரிந்துரையின் மூலம் மேற்சொன்ன பெருந்திட்டங்களுக்கும், துறைமுகம் சார்ந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கும் பொருட்டோ, அனுமதியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிப்பதற்கோ சரணாலயத்தின் பரப்பளவும், சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் எல்லையும் குறைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தப் பின்னணியில், வனத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972இன் சில பிரிவுகளைப் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாதது, ஒருவகையில் பழவேற்காடு ஏரிப் பறவைகள் சரணாலயம் / அதன் சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் பாதுகாப்புக்கு வழிவகுத்தது.
ஆனால் தற்போது, அச்சட்டப் பிரிவுகள் கட்டுமானப் பணிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதே ஏரியின் பாதுகாப்புக்கும் சரணாலயத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது.
இதனால்தான் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில வாரங்களாக இது குறித்துக் கவன ஈர்ப்பு விவாதங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில், அப்பகுதி மக்களின் நில உரிமை சார்ந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவையும், அதன் சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் அளவையும் குறைக்கும் திட்டம் இருக்கும்பட்சத்தில் அது கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் நிகழும் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்துவரும் இவ்வேளையில், சரணாலயம் - சூழலியல் கூருணர்வு மண்டலத்தின் பரப்பளவைக் குறைப்பது பல்வேறு சுற்றுச்சூழல் - சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
இயற்கையுடன் இயைந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் காலநிலைத் தாக்கங்களிலிருந்து நம்மைக் காக்கும் திறனுடையவை எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்குவதுடன், உயிர்ப்புடன் இருக்கும் பழவேற்காடு ஏரியின் உச்சபட்ச நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
- அ.சங்கர் பிரகாஷ் முதுநிலை, ஆராய்ச்சியாளர், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப்; தொடர்புக்கு: shankar.prakash@cag.org.in
- கண்ணன் வைத்தியநாதன், காட்டுயிர் உயிரியலாளர்; தொடர்புக்கு: kannan.vaithianathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago