பழுதின்றி ஓடுமா அரசுப் பேருந்துகள்?

By ஆனந்தன் செல்லையா

பொதுப் போக்குவரத்துக்கான கட்டமைப்புகளை வலிமையாக வைத்துக் கொள்வதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்துவந்துள்ளது. தனியார் போக்குவரத்து பல்வேறு வடிவங்களில் மிக வேகமாக வளர்ந்து வந்தாலும், அரசுப் பேருந்துகளே அடித்தட்டு மக்களுக்கு நெருக்கடியில் கைகொடுப்பவையாக உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கித் தமிழகம் முன்மாதிரி ஆனது. 2021இல் திமுக ஆட்சி அமைத்தவுடன், பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதை முதல் திட்டங்களில் ஒன்றாக நிறைவேற்றியது.

55 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எனச் சில சவால்களும் உண்டு. அவற்றில், தொழிலாளர் நலன், வருவாயைப் பெருக்குவது, விபத்துகளைக் குறைப்பது, நவீனமயமாக்கம் போன்ற இலக்குகள் முக்கியமானவை.

அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள்: அண்மைக் காலமாக, பழுதான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் பயணிகளின் முறையீடுகள் அதிகமாக ஒலிக்கின்றன. திருச்சி அருகே ஒரு நகரப்பேருந்து வளைவான திருப்பத்தில் சென்றபோது, அதன் நடத்துநர் இருக்கையோடு சாலையில் விழ நேர்ந்தது; விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, ஓடும் பேருந்தின் பின்புறப் படிக்கட்டு துண்டாகக் கழன்று விழுந்தது. அப்போது பயணிகள் யாரும் படிக்கட்டில் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை - இவை சில உதாரணங்களே!

போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை), திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 6 கழகங்கள் ஆகிய 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 23 பகுதிகளை மையமாகக் கொண்டு 21,000 பேருந்துகள் 19,500 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

360 பணிமனைகள் செயல்படுகின்றன. நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருப்பதால், சீராக இயங்க முடியாத பேருந்துகளால்தான் பயணிகளுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன என்கிற விமர்சனம் மக்களிடையே நிலவுகிறது. விரைவுப் பேருந்துகளைவிட, நகரப் பேருந்துகளே அதிகப் பயன்பாடு காரணமாகச் சீக்கிரம் பழுதாகின்றன.

விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. வரை பயணிக்கலாம் எனவும், மற்ற அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. பயணிக்கலாம் எனவும் மோட்டார் வாகனச் சட்டம் 1988 கூறுகிறது. விதிமீறல்கள் இருப்பினும், மிகப் பழைய பேருந்துகளை ஓரங்கட்ட இந்த வரம்பு ஓரளவுக்கு உதவியது. போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து 2021 ஜூலை 10 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. பயணிக்கலாம் எனவும், மற்ற அரசுப் பேருந்துகள் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. பயணிக்கலாம் எனவும் இந்த அரசாணை கூறியது.

புதிய பேருந்துகள்: விதிமுறைகளின்படி, 10 பேருந்துகளுக்கு ஒரு பேருந்து கூடுதலாக (spare bus) இருக்க வேண்டும். இந்த விகிதம் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. புதிய பேருந்துகள் வாங்குவதை ஒத்திவைப்பதே நிர்வாக நோக்கில் சிக்கன நடவடிக்கையாகக் கருதப்படுவது வழக்கம்.

இத்துடன், பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டதால், பேருந்துகள் புதிதாகக் கொள்முதல் செய்யப்படுவது மிகவும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பணியாளர் எண்ணிக்கை: பேருந்துகளைச் சரியாகப் பராமரிக்கத் தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும், குறிப்பிட்ட விகிதம் பின்பற்றப்படுகிறது. அதன்படி ஒரு பேருந்தை இயக்க 2 ஓட்டுநர்கள், 2 நடத்துநர்கள் உள்பட 6.75 பேர் தேவை (100 பேருந்துகளுக்கு 675 பேர்).

அவர்களில் 70 தொழில்நுட்பப் பணியாளர்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை நடப்பில் இல்லை எனப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகக் கூறிவருகின்றனர். பராமரிப்புத் துறையைத் தாங்கிப்பிடிக்கும் 5,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

உதிரிபாகங்கள் கொள்முதலில் மாற்றம்: முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 55 போக்குவரத்துக் கழகங்கள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து உதிரிபாகங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்துவந்தன. இதனால், உதிரிபாகங்கள் பற்றாக்குறை இன்றியும் குறைந்த விலையிலும் கிடைத்தன. கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போதைய தேவைக்கேற்ப உதிரிபாகங்களை வாங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

போதுமான நிதி இல்லாததால் போக்குவரத்துக் கழகம் இவ்வாறு பகுதி பகுதியாகப் பாகங்களை வாங்குவதாகக் கூறப்படுகிறது. இதுவும் பழுதான நிலையில் பேருந்துகள் ஓடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகத் தொழிலாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒரு கி.மீ.க்கு உதிரிபாகங்களுக்காக ரூ.5-6 செலவு செய்யப்பட்டதாகவும் தற்போது அத்தொகை ரூ.1-1.50ஆகச் சுருங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பழுதான பேருந்துகளால் எரிபொருள் பயன்பாடும் அதிகரிக்கச் சாத்தியம் உள்ளது.

போக்குவரத்துக் கழகத்தின் பதில்: ‘புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. சில நீதிமன்ற வழக்குகளும் அதற்குத் தடையாக இருந்தன. இப்போது அந்தப் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்பட்டுப் புதுப் பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச்சிலிருந்து மாதத்துக்கு 250-300 பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றன.

மொத்தம் 7,162 பேருந்துகளை மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. ஏற்கெனவே 500 பேருந்துகள் புனரமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பப் பணியாளர்களுக்கோ உதிரிபாகங்களுக்கோ பற்றாக்குறை இல்லை.

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு, 2015க்குப் பிறகு 2023இல் நடத்தப்பட்டது. பேருந்துகள் வாங்கப்படும்போது அதைப் பராமரிக்கப் போதுமான பணியாளர்கள் இருப்பதை நிர்வாகம் உறுதிசெய்யாமல் இருக்குமா? திருச்சி பேருந்திலிருந்து நடத்துநர் விழ நேர்ந்த நிகழ்வு, பேருந்தின் பராமரிப்புடன் மட்டுமே தொடர்புடையதல்ல.

அந்தச் சாலை மிகக் குறுகலான வளைவைக் கொண்டது. எதிரே வந்த வாகனத்துடன் மோதிவிடாமல் இருக்க ஓட்டுநர் திடீரென ‘பிரேக்’ போட்டதால், நடத்துநர் விழுந்துவிட்டார். இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளின்போது, சாலையில் உள்ள சூழலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ எனப் போக்குவரத்துக் கழகம் விளக்கமளிக்கிறது.

நம்பிக்கை குலையக் கூடாது! - போக்குவரத்துக் கழகம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளின்போது, அது நட்டத்தில் இயங்குவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது வழக்கம். இந்த அணுகுமுறை, பேருந்துகளின் சீரான பராமரிப்பு குறித்த கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட ஏதுவாகிறது.

“இத்துறையின் முதன்மையான நோக்கம் சேவைதான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல் அரசுப் பேருந்துகள்தான் கிராமப்புறங்களுக்கும் சென்றுவர முடியும். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் போன்ற சமூக நலத் திட்டங்களில் ஒரு பயணிக்காக அரசு 1 அமெரிக்க டாலர் செலவழித்தால், அவர் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 அமெரிக்க டாலர் உயரும் என உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) கூறுகிறது.

பொதுப் போக்குவரத்து என்கிற நோக்கத்தை நிறைவேற்றுவதில் அரசுப் பேருந்துகளின் பங்களிப்பே முதன்மையானது. கரியமிலவாயு வெளியேற்றமும் பொதுப் போக்குவரத்தால் கணிசமாகத் தவிர்க்கப்படுகிறது. பெங்களூரு போன்ற நகரங்கள், அளவுக்கு மீறிய தனியார் போக்குவரத்தால் திணறிவருகின்றன. பராமரிப்பின்மை காரணமாக அரசுப் பேருந்துகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது” என்கிறார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார்.

பலருடைய போக்குவரத்து இன்று இருசக்கர வாகனத்துக்கு மாறியிருக்கலாம். எனினும் ஏழை, நடுத்தரக் குடும்ப மக்களை மூலை முடுக்கெல்லாம் பயணிக்க வைத்து, என்றைக்கும் நெருக்கமான உறவில் இருப்பது அரசுப் போக்குவரத்துக் கழகம்தான். அதன் சக்கரம் பழுதின்றி ஓட வேண்டும்!

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்