ம
க்களவைத் தேர்தலோடு சட்ட மன்றங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தும் திட்டத்தை மெல்ல நகர்த்துகிறது மோடி அரசு. இந்தத் தருணத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், தேர்தல் நிதிப் பத்திரங்களில் (Electoral Bond) உள்ள பிரச்சினைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள், நம் தேர்தல் முறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் என்று பல விஷயங்கள் பற்றிப் பேசினார்.
மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள தேர்தல் நிதிப் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று நம்பவைக்கின்றன. இந்த வெளிப்படைத்தன்மையே தேர்தல் ஆணையத்தின் நீண்ட கால கோரிக்கையாகவும் இருந்துள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள்தான் இதற்குத் தீர்வு என்று நினைக்கிறீர்களா?
நிதி அமைச்சர் ஜேட்லி அவரது பட்ஜெட் உரையைத் தொடங்கியபோது, “அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால் நியாயமான முறையில் தேர்தல் நடப்பது சாத்தியமில்லை” என்றார். இது என் காதில் தேனாகப் பாய்ந்தது. ஆனால், அவர் முன்வைத்த நடவடிக்கை அவர் சொன்னதற்கு நேரெதிரானது. நன்கொடை அளிப்பவர் தனது பெயரை வெளிப்படுத்தாமல் இருக்க, அரசு முடிவெடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது.
2015-ல் இந்திய தொழிலகங்களில் கூட்டுக்குழு (கான்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரீஸ்) வெளியிட்ட அறிக்கை, நன்கொடையாளர்கள் இரண்டு காரணங்களுக்காக அவர்களது பெயர்கள் தெரியக் கூடாது என்று விரும்புவதாகச் சொல்கிறது. மற்ற கட்சிகள் நன்கொடை கேட்டு வரிசைக் கட்டிவிடுவார்கள் என்ற எண்ணமும், நன்கொடை பெறாத கட்சிகள் பழிவாங்கக்கூடும் என்கிற அச்சமும்தான் அவை வெளியே சொல்லும் அந்த இரண்டு காரணங்கள். உண்மையில், அந்த நன்கொடைகளால் அவர்களுக்குக் கிடைக்கும் பிரதியுபகாரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதுதான் இதற்கான உண்மையான காரணமாக இருக்கும். குடிமக்களின் வெளிப்படைத்தன்மைக்கான விருப்பத்தையும் அவர்களது தெரிந்துகொள்ளும் உரிமையையும்விட நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு ஜனநாயகத்தில் குடிமக்களின் உரிமைக்குத்தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்த வெளிப்படைத்தன்மை இன்றியமையாதது.
இதுவரை ரூ.20,000-க்கு மேற்பட்ட அனைத்து நன்கொடைகளும் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தாங்கள் கோடிக்கணக்கில் பெறும் நிதியை ரூ.20,000-க்கான காசோலைகளாக மாற்றிப் பெறுகின்றன என்பது வேறு விஷயம். அரசியல் கட்சிகள் பெறும் நிதியில் 75%-க்கு மேல் இப்படித்தான் வருகிறது. இவை எங்கிருந்து வருகின்றன என்றும் யாருக்கும் தெரியாது. இப்போது தேர்தல் நிதிப் பத்திரங்கள் வந்துவிட்டால் 100% நிதியும் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாது.
யார் என்ன கொடுக்கிறார்கள் என்பது அரசுக்கு மட்டும்தான் தெரியும். மக்களுக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ தெரியாது. அப்படித்தானே?
ஆமாம். அப்படித்தான். மேலும் அதிகாரத்தில் இல்லாத அரசியல் கட்சிகளைவிட அரசே நன்கொடையாளர்களுக்கு அதிக இன்னல்களைத் தர முடியும். பழிவாங்குதல் ஏதாவது நடந்தால் அது அரசின் மூலமாகவே நடக்க முடியும். யார் யாருக்கு என்ன கொடுக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதிகாரத்தை அரசு தனக்குத் தானே அளித்துக்கொண்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இருந்த எங்களுடைய எதிர்பார்ப்பு இதுவல்ல.
பெருநிறுவனங்களின் நன்கொடைக்கு 7.5% என்ற உச்சவரம்பு (முந்தைய மூன்று ஆண்டுகளில் பெற்ற லாபங்களின் அடிப்படையில்) விதித்திருப்பது ஒரு நல்ல யோசனையா?
இல்லவே இல்லை. அரசியல் நடைமுறைகளில் நிறுவனங்களுக்கு செல்வாக்கு இருக்கக் கூடாது என்ற நல்ல காரணத்துக்காக உச்சவரம்பு இருந்தது. ஆனால், இப்போது இந்திய அரசியலை நடத்தவேண்டும் என்பதற்காகவே நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதுதான் அணுக்கம்சார் முதலாளித்துவம் (க்ரோனி கேப்பிடலிஸம்). அது இப்போது சட்டமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. இனி, பெரும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் இந்திய அரசியல் நடத்தப்படும். அரசு தன்னையே அழிக்கும் அரக்கனை இதன் மூலம் உருவாக்கியிருக்கிறது. யாருமே நிரந்தரமாக அதிகாரத்தில் இருப்பதில்லை. எனவே, நீண்ட கால தேச நலனைவிட குறுகிய கால அரசியல் நலனுக்கே இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை எந்த நன்கொடையாளர் மீதாவது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுள்ளதா?
ஒரு தேசிய தேர்தல் நிதியத்தை உருவாக்குவதுதான் இதற்குத் தீர்வு. இதில் குறிப்பிட்ட கட்சிக்குதான் என்று சொல்லாமல் நிறுவனங்கள் நிதி அளிக்க முடியும். அதன் மூலம் அவர்கள் பயப்படுவதாகச் சொல்லும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்க முடியும். தேர்தல் செயல்பாட்டின் அடிப்படையில் அந்த நிதி வெளிப்படையாக விநியோகிக்கப்படலாம். இதற்கு நான் ஒரு முன்வரைவைக் கொடுத்துள்ளேன்: ஒரு வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்குக்கும் நூறு ரூபாய் கொடுக்கலாம். 55 கோடி பேர் வாக்களித்தால், ரூ.5,500 கோடியைக் கட்சிகள்/வேட்பாளர்கள் இடையே இந்த தேசிய தேர்தல் நிதியம் பகிர்ந்தளிக்கும்.
அரசியல் கட்சிகளுக்கு அந்தப் பணம் போதுமா?
அதுவே அதிகம் என்று சொல்வேன். 2009 முதல் 2014 வரை அனைத்து அரசியல் கட்சிகளும் காண்பித்த நன்கொடை தொகை ஒட்டுமொத்தமாக ரூ.4000 கோடி என்பதுதான் என் வாதத்தின் அடிப்படை. மிரட்டல், வற்புறுத்துதல், ஊழல் போன்ற அவர்களது எல்லா முயற்சிகளாலும் அவர்கள் ரூ.4,000 கோடியைப் பெற்றிருக்கிறார்கள். இதில் அவர்கள் கண்ணியமான வழியில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தற்சார்பற்ற அளவுகோல்களின்படி ரூ.5,500 கோடியைப் பெறுவார்கள். மேலும், இந்தத் தொகையை வைத்து மோசடி செய்ய முடியாது. “தேர்தலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்” என்றும், “தேர்தல்களுக்கு அரசு நிதியளிக்க வேண்டும்” என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கோருகின்றன. ஆனால், நாங்கள் தேர்தலுக்கு அரசு நிதியளிப்பதை எதிர்க்கிறோம், ஏனென்றால் அதைக் கண்காணிக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு அரசு நிதியளிப்பதைக் கண்காணிப்பது எளிது என்பதால் அதைப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் நம்பத்தகாத அரசியல் கட்சிகளுக்கு இடமே இருக்காது. நிதி பெறுவதற்கு அவை முதலில் தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும்.
பிரதமரால் முன்வைக்கப்பட்ட ‘நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற யோசனையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இசைவான யோசனைதான் இது. மிகப் பெரிய செலவும், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதும் குறையும் என்பது இந்த யோசனையில் உள்ள முக்கியமான நன்மைகள். நான் மேலும் இரண்டைச் சேர்க்க விரும்புகிறேன். தேர்தலில் பணப்புழக்கம்தான் ஊழலின் ஊற்றுக்கண். நீங்கள் எப்போதும் தேர்தல் மனநிலையில் இருந்தால், எப்போதும் ஊழல் மனநிலையில்தான் இருப்பீர்கள். இரண்டாவதாக, தேர்தல் நேரங்களில் மதவாதமும் சாதியமும் உச்சத்தில் இருக்கின்றன. வெறுப்புமிக்க பிரிவினைவாத அரசியல் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதன் விளைவுதான்.
ஆனால், அவ்வப்போது தேர்தல் நடப்பதற்கு ஆதரவான வாதங்களும் சமமான வலிமை வாய்ந்தவை. மக்களுக்கு என்ன வேண்டும்?
பிஜு ஜனதா தளம் எம்.பி. ஒருவர் ஒருமுறை சொன்னதுபோல், “மக்களிடம் இருக்கும் ஒரே அதிகாரம் வாக்களிப்பதுதான் என்பதால் அவர்கள் தேர்தல்களை விரும்புகிறார்கள்”. இரண்டாவதாக, தேர்தல் நேரத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அண்மையில் புனேயில் நடந்த மாணவர்களுக்கான கூட்டம் ஒன்றில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சொன்ன சுவாரஸ்யமான கருத்து: “எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் ஏழைகளுக்கு உணவு கிடைக்கிறது”. எனவே, பணக்காரர்களிடமிருக்கும் பணம் ஏழைகளுக்குச் செல்வதால் அடிக்கடி தேர்தல் நடப்பது ஒரு வகையில் பொருளாதாரத்துக்கு நல்லதுதான்.
அடுத்ததாக, தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் ஒன்றோடொன்று கலக்காமல் தவிர்க்கப்படுகின்றன. தொடக்கத்தில் மூன்று அடுக்குகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். ஆனால் போகப் போக, மூன்றாவது அடுக்கு விவாதங்களிலிருந்து நீங்கிவிட்டது. எனவே, நீங்கள் பரிந்துரைத்த சீர்திருத்தத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏற்கெனவே விட்டுவிட்டீர்கள். “மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கில் பாதி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல, இரண்டு முறை நடத்தலாம்” என்ற நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் நிதி ஆயோக்கின் பரிந்துரையின் மூலம் இழந்தாகிவிட்டது. ஆனால், ‘இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பு’ என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாநிலக் கட்சிகள் ஆற்ற வேண்டிய பங்கின் முக்கியத்துவம் அதிகரித்துவருகிறது. அவர்கள் இந்த யோசனையை அச்சுறுத்தலாகக் கருதினால் எதிர்ப்பு வரத்தான் செய்யும். இதனால், கருத்தொற்றுமை சாத்தியமற்றதாகிவிட்டது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதாக வைத்துக்கொள்வோம். 29 மாநில அரசுகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழலில், திடீரென மத்திய அரசு கவிழ்ந்தால் அதனால் மாநில அரசுகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு இருக்கிறது?
இந்தப் பிரச்சினையைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் மூலம் எதிர்கொள்ளலாம். ஆனால், கூட்டணி அரசுகளின் காலத்தில் ஒரு கூட்டணிக் கட்சி விலகினால் அரசு கவிழ்வதற்கான சூழல் எப்போதும் நிலவுகிறது என்பதுதான் உண்மை.
அதிக வாக்குபெறுபவரே வெற்றிபெற்றவர் என்கிற தேர்தல் முறையை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டதாக நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள்?இந்த முறைக்குப் பதிலாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு வலுப்பெற்றுள்ளதா?
நான் 2014 தேர்தலின் மத்தியில், ‘பதிவுசெய்யப்படாத அற்புதம்: மிகப் பெரிய இந்திய தேர்தலின் உருவாக்கம்’ (அன்டாகுமென்டன் வொண்டர்: தி மேகிங் ஆஃப் தி கிரேட் இந்தியன் எலக்ஷன்) என்ற கட்டுரையை எழுதியபோது, அதிக வாக்கு பெறுபவரே வெற்றிபெற்றவர் என்ற தேர்தல் முறையே எளிமையானது என்பதால் அதுவே சிறந்தது என்று எழுதியிருந்தேன். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மாதிரிகள் பலவற்றை விவாதித்து இந்தியாவில் நடைமுறைக்குப் பொருந்தாதவை என்றும் அவை அனைத்தையும் நிராகரித்திருந்தேன். ஆனால், 2014 தேர்தலுக்குப் பிறகு 20% என்ற மூன்றாவது அதிக வாக்குவிகிதத்தைப் பெற்றிருந்த ஒரு கட்சிக்கு (பகுஜன் சமாஜ் கட்சி) நாடாளுமன்றத்தில் ஒரு இடம்கூட கிடைக்காமல் போனபோது என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இது ஜனநாயகம் அல்ல. இது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஜெர்மனியில் உள்ளதுபோல் இரண்டு தேர்தல் முறைகளும் கலந்த ஒரு அமைப்பை உருவாக்குவதுபற்றி நாம் யோசிக்கலாம்.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை, நம் சமூகம் சாதி, மதரீதியாக மேலும் பிளவடையும் அபாயத்தை உள்ளடக்கியது இல்லையா? பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்குத் தொகுதிகள் வழங்கப்படும் என்றால், அரசியல்வாதிகள் புதிய கட்சிகளைத் தொடங்க புதுமையான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
இல்லவே இல்லை. உண்மையில் குறிப்பிட்ட அளவு வாக்கு விகிதத்தைப் பெற்றாலும் முழுவதுமாக இடமில்லாமல் போகும் என்ற நிலைக்குப் பதிலாக, வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கட்சிகளுக்குக் கிடைக்கும். இது இன்றைய போட்டி மிகுந்த கட்டுப்பாடுகள் அற்ற அரசியல் சூழலில் கசப்புத்தன்மையைக் குறைக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றியும் விவாதிக்கபடுகிறது? நாம் காகித வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. நம் மின்னணு இயந்திரங்கள் நம்பகமானவை என்று இவ்வளவு காலமாக நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காலகட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், அதே இயந்திரங்களின் மூலம் அவர்கள் பதவிக்கு வரும்போது அமைதியாகிவிடுவார்கள். அதுவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போதே பதிவுச் சீட்டு உடன் வரும் முறை (விவிபாட்) அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதுபோன்ற வாத பிரதிவாதங்களுக்கு இடமே இல்லை.
25% வாக்குச்சாவடிகளிலாவது விவிபாட் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறதே?
இது பழங்கதை. வருங்கால தேர்தல்கள் அனைத்திலும் 100% விவிபாட் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேசம் தேர்தல்கள் முதல்முறையாக முழுமையாக விவிபாட் உடன் நடைபெற்றன. வாக்குச்சீட்டுகளை வைத்து சரிபார்ப்பதற்கு எத்தனை வாக்கு இயந்திரங்கள் எண்ணப்படும் என்பதுதான் இப்போதைய சிக்கல். ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி என்று தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது. ஒரு தொகுதிக்கு 200-300 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்துக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது மிகச் சிறியதுதான். இது குறித்த கருத்தொற்றுமையைப் பெற தேர்தல் ஆணையம் ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தட்டும்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அடிவாங்கத் தொடங்கிவிட்டதா?
தலைமைத் தேர்தல் ஆணையர் அசல் குமார் ஜோதி, குஜராத் தேர்தல் தேதிகளை இறுதிசெய்த விதத்தை வைத்துக் கூறுகிறீர்களா? ஆனால், அதே ஜோதி, குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பான தீர்ப்புக்காகப் பாராட்டவும்பட்டார். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் வழிமுறையில் பிரச்சினை இருக்கிறது. எதிர்க்கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஆளுங்கட்சியினரே அவர்களை நியமிக்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் வைத்து ஜோதியின் நடவடிக்கைகளை சர்ச்சைக்குள்ளாக்குவது நியாயமல்ல. தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஒரு கொலிஜியம் முறை இருக்க வேண்டும். மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் (சிவிசி), மத்திய தகவல் ஆணையர் (சிஐசி) போன்ற அரசியல் சட்டத்தின்படி இயற்றப்பட்ட அமைப்புகளுக்கு கொலிஜியம் முறை பின்பற்றப்படும்போது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சட்டத்தின்படி இயற்றப்பட்ட முக்கியமான அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு ஏன் கூடாது? மிக வலிமை வாய்ந்த தேர்தல் அமைப்புக்கு குறைகள் நிறைந்த நியமன முறை பின்பற்றப்படுகிறது. உடனடியாக நிகழ வேண்டிய சீர்திருத்தம் இது!
©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கோபால்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago