அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி: அடிப்படைச் சிக்கலும் தீர்வும்

By சகா

உத்தரப் பிரதேச மாநிலப் பல்கலைக்கழகத் தேர்வில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதியமாணவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் சமீபத்தில் வெளியான செய்தியைப் படித்ததும் ஒரு பெற்றோராக என் மனம் வேதனைப்பட்டது. அந்த மாணவர்களுக்கு எந்த வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருப்பார்கள், விடைத்தாளில் எதை வேண்டுமானாலும் எழுதலாம்; மதிப்பெண் கிடைத்துவிடும் என்று மாணவர்கள் எப்படி நம்பினார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

இது போன்ற மோசமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழாவிட்டாலும், சில பள்ளிகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காகத் தேர்வு அறைகளிலேயே சமரசம் செய்யப்படுவதை மறுக்க முடியாது. கல்வித் துறையின் கொள்கைகளும் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளாத தன்மையும் இதற்கு முக்கியக் காரணங்கள்.

முரணான கொள்கை: தேர்வுகளில் தேர்ச்சி அடைவது குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் கவலை கொள்வது கிடையாது. ‘எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி’ என்ற கொள்கை பின்பற்றப்படுவது இதற்கு முக்கியக் காரணம். ‘எட்டாம் வகுப்புவரை இலவசக் கல்விதான் வழங்கப்படுகிறதே ஒழிய இலவசத் தேர்ச்சி கிடையாது’ என்று கல்வித் துறையினர் கூறினாலும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவது தொடர்கிறது.

இவ்வாறாக எழுத, படிக்கத் தெரியாத ஒரு மாணவர், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுவரை வந்துவிடுகிறார். மேலும், எட்டாம் வகுப்புவரை (நடுநிலைப் பள்ளிகள்) பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி சதவீதம் என்கிற ஒரு இலக்கு நிர்ணயிக்கப்படுவது இல்லை. எனவே, மாணவர்களின் கற்றல் அடைவு குறித்துப் பெற்றோரோ பள்ளி நிர்வாகமோ கவலை கொள்வதில்லை. பெற்றோர்களும், மாணவர்களின் கல்வி குறித்து நேரில் முறையிட்டு, அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் கிடையாது.

மேலும், எட்டாம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி கிடைக்கிறதே என்கிற எண்ணத்தில் கல்வியைத் தொடர்ந்து பயின்ற மாணவர்களில் சிலர், ‘பத்தாம் வகுப்பிலும் அனைவருக்கும் தேர்ச்சி ஏன் வழங்கக் கூடாது?’ என்ற எண்ணத்திலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள். அதனால், சில மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்களுக்குத்தானே நெருக்கடி ஏற்படும் என்று கற்பதில் பின்தங்கியிருக்கிறார்கள்.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் தேர்ச்சி விஷயத்தில் கண்டிப்பு காட்ட வேண்டிய நெருக்கடி இல்லை. ஆனால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

தேர்ச்சி சதவீத நெருக்கடி: சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரம் செய்வதால், சக மாணவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள்; தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என அத்தகைய விளம்பரங்களைத் தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் தடை செய்தன.

ஆனால், இப்போதோ மாநில அளவில் 100% தேர்ச்சி வழங்கக்கூடிய முதன்மைக் கல்வி அலுவலர்களை (சிஇஓ), மாவட்ட வாரியாகத் தரவரிசைப்படுத்தி, அரசும் துறைகளும் ஒப்பீடு செய்கின்றன. இதில் 100% தேர்ச்சியை அடைய முடியாத சிஇஓக்கள் (98% எடுத்தவர்கள்கூட) துறைச் செயலர், அமைச்சர் ஆகியோரால் வறுத்தெடுக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகும் சிஇஓக்கள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மீளாய்வு நடத்தித் தலைமை ஆசிரியர்களிடம் வசவு பாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் தலைமை ஆசிரியர்களில் சிலர், தேர்ச்சி சதவீதம் குறைந்தால் அவமானம் நேரிடுகிறது எனக் கருதி, மறைமுகமாகக் குறுக்குவழியைக் கையாளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இப்படியாக வலிந்து பெறப்படும் தேர்ச்சி என்னும் மாயப் பிம்பம், சமூகத்தால் உண்மை என நம்பப்படுகிறது. இதுவே ஒருகட்டத்தில் தொடர்கதையாகி மனிதவளக் குறியீட்டில் சராசரிக் கல்வி அறிவாக உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது. கல்வியறிவில் சராசரி அளவைத் தொட்டுவிட்டால் போதும் என்பதற்காகவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தோன்றுகிறது.

பகடையாகும் ‘தேர்ச்சி இலக்கு’: இப்படியாக 35 மதிப்பெண்களை எடுக்க வைத்துத் தேர்ச்சி சதவீதமும் கல்வியறிவும் மேம்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசுகிறோம். ஆனால் உண்மையில், பள்ளியில் படித்து முடித்த பல மாணவர்கள் பத்திரிகைகள், போக்குவரத்து விதிகள், வீட்டுச் சொத்துப் பத்திரங்கள் என அடிப்படையான விஷயங்களைக்கூட வாசிக்கத் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது அவமானச் சின்னமில்லையா? இப்படியான மாயப் பிம்பத்தைத்தான் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

கூடுதலான பாடத்திட்டம்: 2018 முதல் நடைமுறையில் உள்ள புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாடநூல்கள் உயர்நிலைக் கல்விக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் 10 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை 9 மாதங்கள் பாடம் நடத்தி, 10ஆவது மாதத்தில் மாணவர்களை இறுதித் தேர்வுக்குத் தயார்ப்படுத்தி, பதினோராம் மாதத்தில் அவர்களுக்குத் தேர்ச்சி அளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள் ஆசிரியர்கள். இதனைக் கருத்தில் கொண்டு 10 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கும் அளவுக்குப் பாடத்திட்டத்தை உருவாக்கினால், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பாடங்களைக் கொண்டுசேர்க்க ஏதுவாக இருக்கும்.

செய்ய வேண்டியது என்ன? - ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நடைமுறைச் சாத்தியக்கூறுகளுடன் அரசு அணுகினால் தீர்வு கிடைப்பது எளிது.

முதல் வேலையாக 10 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கும் அளவுக்குப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். முறையாக வாசிக்க–எழுதத் தெரியாத மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஒரு மாணவரின் வருகை சதவீதம் 70% குறைந்தால் அவருடைய தேர்ச்சி குறித்து முடிவெடுப்பதில் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

இணைய வழியில் (உயர் தொழில்நுட்ப ஆய்வகம், எமிஸ்) மாணவர்களை வாசிக்க வைத்து, அதை அடிப்படையாகக் கொண்டு அகமதிப்பெண் வழங்க வேண்டும். தடுமாற்றம் இல்லாமல் வாசித்தல், உச்சரிப்பு வேகம் உள்ளிட்டவை கணக்கில்கொள்ளப்பட வேண்டும். இதற்கான கால அவகாசம் கடைசி மூன்று மாதங்களுக்குள் இருக்குமாறு செய்திட வேண்டும். இதில் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் மட்டும் இருந்தாலே போதுமானது.

இயல்பாகவும், முறையாகவும், பயிற்சியாகவும் மாணவர்களிடம் மலர வைக்கப்பட வேண்டிய கல்வியானது, இன்றைய சூழலில் மானாவாரிப் பயிர்போல அக்கறையில்லாமல் வாரித் தெளிக்கப்படுகிறது. இந்த அவலத்தைப் போக்க ஆசிரியர் - மாணவர் விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் அரசுகளின் நடவடிக்கைகள், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைப்புகள் போன்றவை செயல்படும் விதம் குறித்த பார்வை நம் கல்விப் புலத்திலும் உருவாக வேண்டும். இதுபோன்ற நாடுகளில் ஆசிரியர்களுக்கு எவ்வாறு மரியாதை, முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிற தகவலை மக்களிடையே பரப்பினால் சமூக வளர்ச்சியில் அவர்களது பங்கு கவனம் பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE