ஜ
ம்மு காஷ்மீரிலுள்ள கதுவாவில் பலாத்காரம்செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டிருக்கிறாள் எட்டு வயது சிறுமி. கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் அவளை ஒரு வாரம் அடைத்துவைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்செய்திருக்கிறார்கள். அதில் ஒரு போலீஸ்காரரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் காவல் துறையினரும் துணைநின்றிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய சோகம். இந்தப் படுகொலைக்கும் சம்பிரதாய வார்த்தைகளை உதிர்த்துவருகிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு.
காஷ்மீரத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவா கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தக் குழந்தை. அவளது வளர்ப்புத் தந்தை முகமது யூசுப் புஜ்வாலா, பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் சமூகம் இது. இந்தச் சமூகத்தினரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்முவில் பெரும்பான்மையாக வசிப்பவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்கள். இதில் தீவிரமாக ஈடுபட்டுவந்த சஞ்சிராம்தான் பிரதான குற்றவாளி. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலில் வைத்துதான் அச்சிறுமி கொல்லப்பட்டிருக்கிறாள்.
முதல்கட்டமாக தெரியவந்திருக்கும் விஷயங்கள் இவை. ஜனவரி 10 அன்று, தங்கள் குதிரைகளைத் தேடிக்கொண்டு அருகில் உள்ள காட்டுக்குச் சென்ற சிறுமியை, சஞ்சிராம் தலைமையிலான கும்பல் கடத்திச்சென்று கோயிலில் அடைத்துவைத்தது. மீரட்டிலிருக்கும் தன் நண்பனை அழைத்து இந்தக் குற்றத்தில் பங்கேற்கவைத்திருக்கிறான் சஞ்சிராம். இறுதியில், அவளைக் கொல்ல முடிவெடுத்தவர்கள், உள்ளூர் போலீஸ்காரர் தீபக் கஜோரியாவிடம் யோசனை கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது தானும் அந்தச் சிறுமியைப் பலாத்காரம்செய்ய விரும்புவதாகச் சொன்ன தீபக், அந்தப் பாதகத்தைச் செய்தார் என்கிறது காவல் துறை.
பின்னர், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கோரமான முறையில் அச்சிறுமி கொல்லப்பட்டாள். சிறுமியைக் காணவில்லை என்று அவளது குடும்பத்தினர் போலீஸை அணுகியபோது, “யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்” என்று அங்கிருந்த காவலர் ஒருவர் சொன்னாராம். சஞ்சிராம் கும்பல், உள்ளூர் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்துச் சரிகட்டிவிட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஒருபக்கம், விஷமப் புன்னகையுடன் போலீஸார் தேடுதல் நாடகம் நடத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் பரிதவிப்புடன் அவளது குடும்பத்தினர் தேடியலைந்திருக்கிறார்கள். “உண்மையில், ஏதோ விலங்கு அடித்துக் கொன்றிருக்கும் என்றுதான் நினைத்தேன். இப்படிச் செய்வார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்று கதறுகிறார் புஜ்வாலா. இது தொடர்பாக, எட்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் போலீஸ் அதிகாரிகள், ஒருவன் சிறுவன். முதன்மைக் குற்றவாளியான சஞ்சிராம் ஓய்வுபெற்ற அரசு ஊழியராம்! மரணத்துக்குப் பின்னும் அந்தச் சிறுமிக்கு கொடுமை நேர்ந்திருக்கிறது. தங்களது நிலத்தில் அவளது சடலத்தை அடக்கம்செய்ய உறவினர்கள் சென்றபோது இந்துத்துவ அமைப்பினர் தகராறுசெய்திருக்கிறார்கள். இதையடுத்து, ஏழு மைல்கள் நடந்து சென்று இன்னொரு கிராமத்தில் இறுதிச்சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.
சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின் காவல் துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்த பிறகுதான் இது தேசியச் செய்தியாகியிருக்கிறது. அதிர்ச்சியளிக்கும் இன்னொரு விஷயம், காஷ்மீரில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக இந்தப் பிரச்சினையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதுதான். குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்துத்துவ அமைப்பினர் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசியக் கொடி ஏந்திச் சென்றிருக்கிறார்கள். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்று முழங்குகிறது. இந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யச் சென்றபோது நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவர். மறுபுறம், உத்தர பிரதேசத்தின் உனாவ் பகுதியில் 17 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்ததாக குற்றம்சாட்டப்படும் பாஜக எம்எல்ஏ-வை பாஜக அரசின் காவல் துறை கைதுசெய்யவே இல்லை. அவரைக் காப்பாற்ற உள்ளூர் பாஜக உறுப்பினர்கள் களம் இறங்கியுள்ளனர். அந்தச் சிறுமியின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பின் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐதான் அவரைக் கைதுசெய்தது. “இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர் பாஜக வினர்” என்கிற ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் இந்தச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உண்டு என்றாலும், மத்தியிலும் பெரும்பான்மை மாநிலங்களிலும் ஆட்சியைத் தன் கையில் வைத்திருக்கும் பாஜக, இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியது அவசியம். 2012-ல் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாஜக பேசியது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று குரல் எழுப்பியது. மன்மோகன் சிங் அரசுக்கு எதிரான போராட்டங்களின் உச்சம்போல அமைந்தது அந்த விவகாரம். ஒருவகையில் இன்று பாஜக ஆட்சியில் அமர அன்றைய போராட்டங்களும் சேர்ந்தே அடித்தளமிட்டன. அன்றைய சம்பவத்தை “மிகுந்த துயரம் தருவது” என்றும் “மக்களின் கோபம் புரிந்துகொள்ளக்கூடியது” என்றும் சொன்னார் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங். சட்டரீதியாக சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இன்றோ, பிரதமர் மோடி நீண்ட தாமதத்துக்குப் பின் சில வழக்கமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
கதுவா, உனாவ் சம்பவங்களைக் குறிப்பிட்டு, “இவை ஒரு நாடாக, ஒரு சமூகமாக நம்மை வெட்கம்கொள்ளச் செய்பவை. எந்த ஒரு குற்றவாளியும் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டார் என்று உறுதியளிக்கிறேன். நம் மகள்களுக்கு நீதி கிடைத்தே தீரும்” என்று சொல்லியிருக்கிறார் மோடி. உயிரிழந்த சிறுமியை மகள் என்று பிரதமர் சொல்வது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடக் கூடாது. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான குற்றங்களையும், நாட்டில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், சிறுபான்மையினர் என ஏதேனும் ஒரு வகையில் வலுவற்றவர்களாக்கப்பட்டிருக்கும் பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் நடந்த பின் தண்டிப்பதையும் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். அவற்றைத் தடுக்க என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறார் என்பதை தன் ‘மகள்’களுக்காகவாவது பிரதமர் உடனே சொல்லியாக வேண்டும்.
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago