லி
யோ கார்னர் எனும் மருத்துவர், 1943-ல் ஆட்டிச நிலை என்பதை முதன்முதலாக வரையறை செய்த காலத்திலிருந்து, இன்று நீங்கள் இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த விநாடி வரை, ஆட்டிசம் எனும் குறைபாட்டுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியொரு அதிசயத்தை யாரேனும் சாதித்திருந்தால், நோபல் உட்பட பல விருதுகள் அவரைத் தேடிச் சென்றிருக்கும். உண்மை நிலை இப்படி இருக்க, நம் நாட்டில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களைக் குறிவைத்து, பணம் பண்ணும் முயற்சியில் போலி மருத்துவர்கள் பலர் இறங்கி உள்ளனர்.
உண்மையில் தங்கள் குழந்தை குணமாகிவிடும் என்ற உறுதி மட்டும் கிடைத்தால் பணம் என்ன, தங்களது உடல், பொருள், ஆவியையும் சேர்த்தே கொடுக்க பெற்றோர்கள் தயார்தான். ஆனால் உண்மையிலேயே இக்குறைபாட்டை 100% குணமளிக்கக் கூடிய மருந்துகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில், இல்லை என்பதுதான்.
காரணம் என்ன?
ஆட்டிசம் எனும் நரம்பியல் சார்ந்த வளர்ச்சிக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் மட்டுமே துல்லியமாக வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆட்டிச பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக மரபணுக்கள், தடுப்பூசிகள், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரை எத்தனையோ காரணிகள் யூகிக்கப்பட்டாலும் துல்லியமாக இதுதான் ஆட்டிசத்துக்கான காரணம் என்று எதுவும் நிரூபணமாகவில்லை.
காரணமே துல்லியமாக வரையறுக்கப்படவில்லையென்றால் அதற்கான மருந்துகளுக்கு என்ன செய்வது? இப்போதுவரை அறிகுறிகளை வைத்துக்கொண்டு அவற்றைச் சீராக்க என்ன செய்யலாம் என்ற அறிதல்களைத் தொகுத்துப் பயன்படுத்துகிறோம். பேச்சுப் பயிற்சி, வாழ்க்கை முறைக்கான பயிற்சி, நடத்தைச் சீராக்கல் பயிற்சி, சிறப்புக் கல்வி போன்ற பயிற்சிகளின் மூலம் ஆட்டிச நிலையாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளை மட்டுமே இதுவரை மருத்துவத் துறை கண்டடைந்துள்ளது.
பயிற்சிகளே தற்போதைய தீர்வு!
அதிகப்படியான நடத்தைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆட்டிச நிலையாளர்களுக்கு அவர்களின் ஆக்ரோஷம் – பொங்குசினத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், தூக்கத்தைச் சீராக்குவதற்கான மருந்துகள் போன்றவற்றையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக வலிப்பு நோய் இருப்பின் அதற்கான மருந்துகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. ஆட்டிசத்துக்கு நவீன மருத்துவம் பரிந்துரைப்பது பெரும்பாலும் பயிற்சிகளை மட்டும்தான். அதிலும் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தீவிரத்தன்மை, குழந்தையைச் சரியாக, தொடர்ச்சியாக அவதானித்து அதற்கேற்ப பயிற்சி முறைகளை வடிவமைத்துக்கொள்ளும் நெகிழ்வுத் தன்மை, குறைபாட்டைக் கண்டறிந்து பயிற்சிகளை ஆரம்பிக்கும் வயது ஆகிய காரணிகளைப் பொறுத்தே நமக்குக் கிடைக்கும் முன்னேற்றமும் இருக்கும்.
இந்தப் பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் முன்னேற்றம் ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. முன்னேற்றத்தின் அளவு, மேற்சொன்ன காரணிகளைப் பொறுத்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாமே ஒழிய, இவற்றால் எந்தவொரு பலனுமில்லை என்று சொல்லும் பெற்றோர்கள் யாருமில்லை.
நவீன மருத்துவத்தில் ஒரு மருந்து ஒரு குறிப்பிட்ட நோயைத் தீர்க்கிறது என்பதை உறுதிப்படுத்த பல படிநிலைகளில் பரிசோதனைகள் நடத்தப்படும். விலங்குகளில் செயற்கையாக அந்த நோயை உருவாக்கி அவற்றின் மீது மருந்துகளை பரிசோதித்துப் பார்ப்பதில் தொடங்கி, படிப்படியாக பல்வேறு வகைமாதிரியான நோயாளிகளிடம் அவர்களின் அனுமதியோடு பரிசோதித்துப் பார்ப்பது வரை மருந்துகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை. இத்தகைய நடைமுறைகளின் படி அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் ஆட்டிச நிலையாளர்களை முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை என இன்று வரை பட்டியலிடப்படவில்லை.
மாற்று மருத்துவம் பலனளிக்குமா?
நவீன மருத்துவம் முட்டி நிற்கும் இடங்களில் மாற்று மருத்துவம் என்று சொல்லப்படும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற முறைகளை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லைதான். மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் மசாஜ், ஜீரண சக்தியையும் நரம்பு மண்டலங்களையும் வலுவூட்டும் மருந்துகள், பத்திய உணவு முறை ஆகியவற்றை மாற்று மருத்துவ முறைகள் ஆட்டிச நிலைக்குப் பரிந்துரைக்கின்றன. இவை தவிர யோகா, இசை போன்ற பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளும்போது இம்முறைகளிலும் ஓரளவு நல்ல முன்னேற்றம் சிலருக்குக் கிடைக்கிறது.
இதிலும் பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகியவற்றுக்கு நிகரான மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. ஆனால் அவற்றை மட்டும் நாம் நவீன முறையில் தொடர்வதை இந்த சிகிச்சை முறைகள் கட்டுப்படுத்துவதில்லை. இவையெல்லாம் ஆக்கபூர்வமாக மாற்று மருத்துவத்தை உபயோகிக்கும் மருத்துவர்களின் முறைகள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
விளம்பரங்களை நம்ப வேண்டாம்!
வார, மாத இதழ்களில், குறிப்பாகப் பெண்கள் அதிகம் படிக்கும் இதழ்களாகத் தேர்ந்தெடுத்து ஆட்டிசம் சிகிச்சைக்கு முழுப்பக்க விளம்பரங்களை வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள். முழுமையாக, 100% குணப்படுத்திவிடுவதாகவும் அவர்கள் சொல்கின்றனர். குழந்தையின் குறைபாட்டின் தன்மையை கண்டறிய எந்தவிதமான அணுகுமுறையும் இல்லாது, எல்லோருக்கும் ஒரே மருந்துகளை சில ஆயிரங்களில் விலை சொல்லி விற்றுவிடுகின்றனர். அவர்களிடம் சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு ஏற்படுவது பண இழப்பு மட்டுமல்ல; பெற்றோர்களின் மன உளைச்சலும், ஏமாற்றமும் சொல்லில் வடிக்க முடியாதவை.
தனது தேவைகளையும் வேதனைகளையும் சொல்லமுடியாத எந்தவொரு மாற்றுத்திறனுடைய குழந்தையின் குரலாக, அவர்களின் வழக்குரைஞராக பெற்றோரே இருக்கமுடியும். எனவே இந்த விஷயத்தில் அரசின் தலையீட்டைக் கோரி குரல் எழுப்ப வேண்டியது அவர்களது கடமை. இன்றைய நவீன வசதிகளான வாட்ஸப், ஃபேஸ்புக் என பல்வேறு தளங்களில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுக்கென பல்வேறு குழுக்களை அமைத்துத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். அத்தளங்களிலும் இதுபோன்ற மோசடிகள் குறித்துப் பேச வேண்டும்.
நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணரும் ஒவ்வொரு பெற்றோரும் சக பெற்றோர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களும் ஏமாற்றப்படுவதைத் தடுக்கலாம். விழிப்புணர்வைப் பரப்புவதே மோசடிகளைத் தடுப்பதற்கான முதன்மையான வழி. மக்களின் விழிப்புணர்வும், அரசின் நடவடிக்கைகளும் இணையும்போது மட்டுமே வெளிச்சம் பிறக்கும்!
- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்,
சிறப்புக்கல்வி ஆசிரியர், தொடர்புக்கு: lakshmi.balakrishnan.2008@gmail.com
ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago