மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பஞ்சாப் மாநில தேர்தல் கள நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
நாட்டின் வட மேற்கே இருக்கக்கூடிய சீக்கியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம் பஞ்சாப். பஞ்சாப் என்றால், ஐந்து நதிகள் பாயும் நிலம் என்று அர்த்தம். ஆனால், இன்றைய இந்தியாவில் உள்ள பஞ்சாபில் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய 3 நதிகளே பாய்கின்றன. செனாப் மற்றும் ஜீலம் நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாபில் ஓடுகின்றன.
நீர்வளம் மிக்க இந்த மாநிலத்தின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் 3ல் 2 பங்கு உணவு தானியத்தை தங்கள் மாநிலம் வழங்குவதாக பஞ்சாப் கூறுகிறது. பால் உற்பத்தியில் நாட்டின் 3வது பெரிய மாநிலம் பஞ்சாப். பஞ்சாபில் அதிக அளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. விவசாயம் மட்டுமின்றி, மின்னணு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆடை உற்பத்தியிலும் பஞ்சாப் முன்னணியில் உள்ளது. இதனால், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பஞ்சாப் மக்கள் கூடுதல் வளத்துடன் வாழ்கிறார்கள்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் 2 கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 338 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் சீக்கியர்கள் 57.69%, இந்துக்கள் 38.49% இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 1.93, கிறிஸ்தவர்கள் 1.26%, பவுத்தர்கள் 0.12%, சமணர்கள் 0.16% வாழ்கிறார்கள். பாலின விகிதத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் இருக்கிறார்கள்.
பஞ்சாபின் அலுவலக மொழி பஞ்சாபி. இம்மாநிலத்தில் 90% மக்கள் பஞ்சாபி பேசுகிறார்கள். இந்தி, பாக்ரி உள்ளிட்ட மொழி பேசும் மக்களும் இங்கு இருக்கிறார்கள். மாநிலத்தின் எழுத்தறிவு 75.84%. இதில், ஆண்களின் எழுத்தறிவு 80.40% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 70.70% ஆகவும் உள்ளது.
பஞ்சாபில் 23 மாவட்டங்கள், 13 மக்களவைத் தொகுதிகள், 117 சட்ட்பபேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. பஞ்சாபை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியும், அதற்கு மாற்றாக சிரோமணி அகாலி தளமும் பஞ்சாபை ஆண்டு வந்த நிலையில், முதல்முறையாக தற்போது ஆம் ஆத்மி கட்சி இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. கியானி குர்முக் சிங், லச்மண் சிங், பிரகாஷ் சிங் பாதல், ஜெய்ல் சிங், சுர்ஜித் சிங் பர்னாலா, அமரிந்தர் சிங், சரன்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். 2022 முதல் பகவந்த் மான் முதல்வராக இருக்கிறார்.
பஞ்சாபில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ள போதிலும், ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தள், பாஜக ஆகிய 4 கட்சிகளே பிரதான சக்திகளாக உள்ளன.
தற்போதைய தேர்தல் கள நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, கடந்த சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தள் 26.37% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும், பாஜக 8.77% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 24.40% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 33.10% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2017 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலின்போதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் சிரோமணி அகாலி தள் 94 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 117 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 38.50% வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 112 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, 24.62% வாக்குகளுடன் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிரோமணி அகாலி தள், 25.24% வாக்குகளுடன் 15 தொகுதிகளிலும், பாஜக, 5.39% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளமும் பாஜவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 40.57% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 7.46% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சிரோமணி அகாலி தள் 27.76% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 9.74% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2022 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தள், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சிரோமணி அகாலி தள் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தள்(சன்யுக்த்) ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
பாஜக 73 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தள்(சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 117 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 42% வாக்குகளுடன் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 117 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 22.98% வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிரோமணி அகாலி தள் 18.38% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 6.60% வாக்குகளைப் பெற்ற பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார்.
2024 மக்களவைத் தேர்தல் பஞ்சாபில் ஒரே கட்டமாக ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தள் ஆகிய 4 பிரதான கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. இண்டியா அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும், பஞ்சாபில் தனித்தே போட்டியிடுகின்றன. இதனால், 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பகவந்த் மான், மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மின் கட்டண குறைப்பு, அரசு பள்ளிகளை தரம் உயர்த்தியது, ஆம் ஆத்மி கிளினிக் என்ற பெயரில் சுகாதார கட்டமைப்புகளை அதிகப்படுத்தி இருப்பது, கால்வாய்கள் மூலம் நடைபெறும் நீர் பாசன வசதியை 21%ல் இருந்து 59% ஆக உயர்த்தி இருப்பது உள்ளிட்ட சாதனைகளை சுட்டிக்காட்டி அவர் ஆம் ஆத்மிக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பிர் சிங் பாதல், விவசாய அமைப்புகள், வியாபார அமைப்புகள் உள்ளிட்டவற்றை சந்தித்து அவற்றின் ஆதரவை கோரி வருகிறார். ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை தேசிய நலனுக்காக பஞ்சாபின் வளங்களை பயன்படுத்தக்கூடியவை என்றும், எனவே, மாநில கட்சியான சிரோமணி அகாலி தளத்தை ஆதரிக்குமாறும் அவர் வாக்காளர்களை வலியுறுத்தி வருகிறார். இவ்விரு கட்சிகளின் ஆட்சியில், மாநிலத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சுக்பிர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ், மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து விட்டதாகவும் ஆனால், மாநில அரசு கண்டுகொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறது. மேலும், விவசாயிகளின் நலன் உள்பட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் நிறைவேற்றும் என்றும் அக்கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செல்வாக்கோடு ஒப்பிடுகையில் பாஜகவின் செல்வாக்கு மிகவும் குறைவு. அதோடு, வேளாண் சட்ட விவகாரம் பஞ்சாபில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனினும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக்காட்டியும், பாஜக மீண்டும் வந்தால் மட்டுமே வளர்ச்சி தொடரும் என்றும் கூறி அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கருத்துக் கணிப்புகள்: தேர்தலை முன்னிட்டு பஞ்சாபில் நடத்தப்பட்ட 7 கருத்துக் கணிப்புகளிலும், இண்டியா கூட்டணியே அதாவது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே அதிக வெற்றியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளிலும், அதிகபட்சம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக அதிகபட்சம் 3 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் அதிகபட்சம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago