“திமுகவுடன் காங். பயணித்தால் தான் வலதுசாரி அரசியலை தடுக்க முடியும்!” - பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்

By நிவேதா தனிமொழி

‘திமுகவுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை என்கிறார்’ முன்னாள் காங்கிரஸ் எம்பியும், தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ். கரோனா தடுப்பூசி சர்ச்சை பின்னணி, காங்கிரஸ் கட்டமைப்பு, திமுகவுடன் பயணிப்பதன் காரணம் என பலவற்றையும் வெளிப்படையாக பகிரும் அவரது நேர்காணலின் இரண்டாம் பகுதி இது...

கரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கப்பட்டுள்ளதே. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

“கரோனா இந்தியாவில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தன்னை ஒரு ’விஸ்வ குரு’ என நிரூபிக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார் மோடி. மேலும், தடுப்பூசிகளை முறையான சோதனைக்கு உட்படுத்தாமல் செலுத்தப்பட்டதை எதிர்த்து கேள்வியை காங்கிரஸ் முன்வைத்தது. தற்போது, அந்தத் தடுப்பூசி மக்களுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. அப்போது வரை பெருமிதத்துடன் சான்றிதழில் தன் படத்தை அச்சிட்ட மோடி, ஆய்வு முடிவு வந்த பின்னர் அவரின் படம் நீக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அப்போது ’பிஎம் கேர்ஸ் நிதி’ பெறப்பட்டது. அந்தத் தொகை யாருக்காக செலவு செய்யப்பட்டது என்பது புரியாத புதிராகவுள்ளது. மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படவில்லை, புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர போக்குவரத்து ஏற்பாடும் செய்யவில்லை. அப்படியானால், பிஎம் கேர்ஸ் நிதி தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால், அது தயாரிப்பதற்கு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியா கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிஎம் கேர்ஸ் நிதி எதற்காகப் பயன்பட்டது என்பது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு வெளிவரும்.”

இந்தியாவில் கரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. இந்தத் தடுப்பூசிதான் பெரும் உயிர் சேதத்தைத் தடுத்து மக்களைக் காப்பாற்றியது எனக் கூறுகிறார்களே?

“முறையாக ஒரு தடுப்பூசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து. ’தடுப்பூசி’ என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. குண்டூசி கூட தயாரிக்கப்படாத இந்தியாவில் தட்டம்மை, பெரியம்மை, போலியோ, காலரா, மஞ்சள் காமாலை, டிபி எனப் பல நோய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். ஆனால், அதை அரசாங்கத்தின் கடமையாகத்தான் காங்கிரஸ் எண்ணியது. கட்சி அதனைக் கொண்டாடவில்லை. அதேபோல், பெருந்தொற்று காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு தடுப்பூசி செலுத்தியது கட்சிக்கு எப்படி பெருமை ஆகும். அதை எப்படி சாதனை என சொல்லி பாஜகவால் கொண்டாட முடிகிறது என்பதுதான் எங்களின் கேள்வி”.

உங்களுக்கு மக்களவையில் எம்.பி சீட் தரப்படவில்லையே? காரணம் என்ன?

“(சிரிப்புடன்)... திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை.”

எம்பி சீட் மறுப்பிற்குப் பின்னால் ‘நீங்கள் திமுககாரர்’ என்னும் விமர்சனம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

“தினமும் ஊடகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசுகிறேன். இவர் வேலை செய்யவில்லை, தேர்தல் பணி செய்யவில்லை என என் மீது குறை சொல்ல முடியாது. அதனால், இப்படி விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஏறக்குறைய திமுக கொண்டுள்ள கோரிக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, மாநில உரிமைகள் , நீட் ரத்து மற்றும் கல்வி பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரப்படுவது என பல அம்சங்கள் திமுக கூறியதுதானே.

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பயணித்தால் மட்டும்தான் தமிழகத்தில் வலதுசாரி அரசியலை தடுத்து நிறுத்த முடியும் என நம்புகிறேன். அதை ராகுல் காந்தியும் நம்புகிறார். ராகுல் காந்தி தமிழகத்துக்கு வந்தபோது கூட ’பெரியார் மண்’ என்று சொல்லி தன் உரையைத் தொடங்குகிறார். மேலும், ஸ்டாலினை சகோதரர் என அழைத்தார். இந்தியாவில் வேறு எந்த தலைவரையும் ’சகோதரர்’ என அழைத்ததில்லை என ராகுல் கூறினார். இது அவர்கள் தத்துவ ரீதியாக ஒன்றுபட்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது. எனவே, திமுகவுடன் நெருக்கமாக இருப்பது என்பது தவறல்ல.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, பாஜக அரசியல் மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகலாம். ஆனால், தமிழக மக்களை உங்களால் ஆட்சி செய்ய முடியாது என தீர்க்கமாக கூறினார். தற்போது, சமூக நீதி, மாநில உரிமைகள் பற்றி காங்கிரஸ் கட்சி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன்.
தவிர, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். இந்தியாவில் பாசிச சக்தியை முழுமையாக எதிர்க்கின்ற தலைவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர். எனவே, நல்ல காங்கிரஸ்காரன் என்கின்ற முறையில் திமுகவுடன் பயணிக்க விரும்புகிறேன். இது பற்றி விமர்சிப்பவர்கள் பற்றி... ஐ டோன்ட் கேர்!”

காங்கிரஸில் வலுவான கட்டமைப்பு இல்லை என்கிறீர்கள். ‘இண்டியா’ என்னும் பெரிய கூட்டணியை வழிநடத்தி செல்ல காங்கிரஸால் முடியுமா?

“இந்தியாவில் வரும் காலத்தில் இரண்டு தத்துவங்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். ஒரு தத்துவத்துக்கு காங்கிரஸும், மற்றொரு தத்துவத்துக்கு பாஜகவும் தலைமை தாங்கும். அதற்கு கீழ் மற்ற கட்சிகள் ஒன்றிணைவார்கள். ‘முதலில் வலுவான கூட்டணி அமையாது’ என்று இண்டியா கூட்டணி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால், குறுகிய காலத்தில் சவாலான நேரத்தில் பல மாநிலங்களில் எதிர்பாராத ஒற்றுமை ஏற்பட்டு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைந்துள்ளது.”

பிஹாரில் நிதிஷ் குமாரும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் வெளியேறி இருக்கிறார்களே?

“அவர்கள் வெளியில் இருப்பதுதான் இண்டியா கூட்டணிக்கு நன்மை. நிதிஷ் குமார் ’ஸ்லீப்பர் செல்லாக’ தான் இண்டியா கூட்டணியில் செயல்பட்டார். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நிதிஷ் குமார் தன்னை நினைத்துக் கொண்டார். ஆனால், தற்போது பாஜக கூட்டணியில் அதிகாரம் இல்லாத ஆளாகிவுள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஎம், காங்கிரஸ், திரிணமூல் என யார் வென்றாலும் அவர்கள் பாசிச அரசியலை எதிர்த்துதான் போராடுவார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.”

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை இம்முறையும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

“ஒவ்வொரு முறையும் என் பெயர் அடிபடும். ஆனால், பொறுப்பு கிடைக்காது. ராகுல் காந்தியிடமும் கேட்டேன். ஆனால், இந்தத் தேர்வுகள் அனைத்தும் கட்சியின் முடிவு. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது கேட்டால், நான் தலைமை பொறுப்பை நிராகரிப்பேன். அதற்கான வயது தற்போது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பதவி கொடுக்கிறதோ இல்லையோ, கொள்கைகளுக்காகக் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிப்பேன்.”

தமிழகத்தில் எம்பி சீட் தரவில்லை என விஜயதரணி கட்சியிலிருந்து விலகினார். எம்பி சீட் மறுக்கப்பட்டதில் திருநாவுக்கரசரும் அதிருப்தியில் இருக்கிறார். ஏன் இப்படி சிக்கல் எழுகிறது?

“திருநாவுக்கரசருக்கு எம்பி சீட் வழங்கி இருக்கலாம். அவரின் பங்களிப்பு காங்கிரஸுக்கு முக்கியமானது. ஆனால், முடிவெடுக்கும் பொறுப்பில் நான் இல்லை. விஜயதரணியைப் பொருத்தவரை அவர் விலகியதில் அர்த்தமில்லை என எண்ணுகிறேன். அவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தார். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்னும் நிலைப்பாட்டில் திமுக இருந்தது. அதனால், எம்பி சீட் தரப்படவில்லை.”

ஆனால், விஜயதரணி பல ஆண்டுகளாக ’எம்பி சீட்’ கேட்டு வருகிறாரே?

“அப்படியானால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட எண்ணுவதால் எம்எல்ஏ சீட் வேண்டாம் என தீர்க்கமான ஒரு முடிவை விஜயதரணி எடுத்திருக்கலாம். இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் தற்போது சுருங்கிவிட்டது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 இடங்களில் மட்டும்தான் காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே, இதில் பெண்கள், சிறுபான்மையினர், சாதி அடிப்படையில் ஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தருவது கடினம். அதனால், இப்படியான முரண்பாடுகள் ஏற்படுகிறது.”

முந்தைய பகுதி: பிரதமர் வேட்பாளர் முதல் ‘பாஜக வெறுப்பு அலை’ வரை - பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்