காவிரி என்பது வெறும் நீரல்ல!

By தங்க.ஜெயராமன்

கா

விரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள்.

வயிற்றுக்கு மட்டுமே சோறிட்டு வளர்க்கவில்லை காவிரி. இப்படி ஒரு சிந்தனைக் கலாச்சாரத்தையும் வளர்த்திருந்தது. அது பண்பாட்டுப் படைப்புகளான இலக்கியத்துக்கும், கலைக்கும் ஊற்று. காவிரி சென்றுகொண்டிருக்கும் வறட்சிப் பாதையைப் பார்க்கையில் ஒரு அச்சம் ஏற்படுகிறது. தண்ணீரோடு சேர்த்து இவையெல்லாமும் காணாமல் போய்விடும்?

கலாச்சாரப் பிளவு

பேச்சுவாக்கில், “ஆற்றங்கரை மரமும் அரச வாழ்வும்” என்று சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்தவருக்குப் புரியவில்லை. ஆற்றுப் படுகையை ஆறு அரித்து ஓடும்போது அங்கே இருப்பது அரச மரமானாலும் விழுந்துவிடும். இன்று அரசனாக இருப்பவன் நாளையே அடிமையாகக்கூடும். சொற்கள் புரிந்திருந்தாலும் அவரால் விளங்கிக்கொள்ள முடியாததற்குக் காரணம், சிந்தனைக் கலாச்சாரத்தில் வந்த இடைவெளி. ஆற்றங்கரை அரச மரம் அவர் பிரக்ஞைக்கு அந்நியம்.

சங்க இலக்கியமான நற்றிணைப் பாடல் ஒன்று மருதத்தின் வளத்தைப் பற்றியது. அறுவடை முடிந்தது. தாளை மடக்கி உழுது மறுபடியும் விதைக்க விதை கொண்டுசென்றார்கள். விதைத்துவிட்டு கூடைகளில் மீனைப் பிடித்துக்கொண்டு மீண்டார்கள் என்று பாடல். வழியிலிருந்த குட்டைகளில் மீன் பிடித்தார்கள் என்றுதான் இதைப் புரிந்துகொள்கிறார்கள். வயலிலேயே மீன் கிடப்பதை அன்றைய காவிரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். வயலில் மீன் கிடப்பது இன்றைய பிரக்ஞைக்கு எட்டாது. இது கால இடைவெளி அல்ல. தலைமுறை இடைவெளி அல்ல. காவிரி காலத்துத் தலைமுறை, காவிரிக்குப் பிந்தைய காலத்துத் தலைமுறை என்று ஒரு பிரக்ஞைப் பிளவு உருவாகும்.

காவிரிக் கரையில் நகரங்கள் அமைந்தன என்பது பெரிதல்ல. நகரமைப்புக்குள்ளேயே, கட்டிடக் கலைக்குள்ளேயே காவிரி வந்திருந்தது. மதிலைக் காவிரி வருடிக்கொண்டு ஓட கரையில் கட்டுமலையாக இருக்கும் கோயிலடி ரெங்கநாதர் கோயிலைப் போல் இங்கு பல மாடக்கோயில்கள் உண்டு. பெருகிவரும் இடங்களிலும் காவிரியை விட்டு விலகாமலிருக்கும் ஒரு வாஞ்சை.

அங்கங்கே பரந்து நிறைத்துக்கொண்டு இந்தச் சீமையைப் புனல் நாடாக்கிக்கொண்டிருந்தது காவிரி. திராவிட நகரமைப்பின் மையமான கோயில்களில் இருந்து திருமஞ்சன வீதி ஒன்று காவிரிக்குச் செல்லும். இறைவனின் அன்றாட அபிஷேகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவருவார்கள்.

துலாக் காவிரி

ஆடிப்பெருக்கில் தீர்த்தவாரிக்கு எங்கள் ஊர் பெருமாள் ஆற்றுக்குச் செல்வார். காவிரி வறண்டுவிட்டதால் அண்டாவில் தண்ணீரை வைத்துக்கொண்டு ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஐப்பசியில் காவிரி துலாக் காவிரியாகும். மயிலாடுதுறையில் பெருமாளுக்கும் சிவனுக்கும் துலாக் காவிரி தீர்த்தவாரி பெரிய விழா. இந்த ஆண்டு காவிரியில் வரத்து இல்லாமல் ஆழ்துளைக் கிணற்று தண்ணீரில் ஐப்பசி கடை முழுக்கு நடந்தது. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இந்த மாதத்தில் காவிரியின் அம்மா மண்டப படித்துறையிலிருந்துதான் தீர்த்தம். மற்ற மாதங்களில் அவருக்குத் தீர்த்தம் கொள்ளிடத்திலிருந்து வரும். துலாக் காவிரி என்று ஒரு காவிரி இனி வருமா?

மாசி மகத்தன்று எல்லாக் கோயில்களிலிருந்தும் சுவாமி குளத்துக்கோ காவிரிக்கோ சென்று தீர்த்தவாரி நடக்கும். கெட்டி மேளம் கொட்ட காளை வாகனத்தில் சுவாமி ஆற்றில் இறங்கும்போது மக்கள் காவிரி நீரை வாரி வாரி இரைத்துக்கொள்வார்கள். கங்கையைத் தலையில் மறைத்த சிவன் காவிரியைக் காட்டிக்கொண்டு நிற்பார். இப்போது காவிரியும் மறைந்ததே!

மன்னார்குடி ராஜகோபாலனுக்கு ஆண்டுத் திருவிழாவின் இரண்டாம் நாள் புன்னை மர வாகனம். கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்துகொண்டு வேணுகோபாலனாக சுவாமி புன்னை மரத்தில் இருப்பார். விழா பங்குனி மாதம் நடக்கும். அக்கரையிலிருந்து பாமனி ஆற்றில் இறங்கி சுவாமி இக்கரைக்கு ஏறுவார்.

அவர் ஆற்றில் இறங்கி வரும்போது, “யமுனையில் நடந்த ஜலக்கிரீடையாகவே அது தோன்றும்” என்பார் எங்கள் ஊர் பிரசன்னா பாட்டாச்சாரியார். கோயில் விழாக்களில் காளை வாகனமும் புன்னை மரமும் நிஜமல்ல. காவிரி நீர் நிஜம். காவிரியின் நிஜம் மற்றவற்றையும் அப்போது பற்றிக்கொள்ளும். இனி எல்லாமே கற்பனைதானோ!

தியாகராஜரின் இசை நாடகம் ‘நெளகா சரித்திரம்’. அதில் வரும் கிருஷ்ண லீலை யமுனையில் நடப்பதாகக் கற்பனை. நாடகத்தை இயற்றியவர் காவிரிக் கரையில்தான் வாழ்ந்தார். அதற்கும் மேற்கே வரகூர் நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியில் துவங்கி, மெலட்டூர் பாகவத மேளா, ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல்கள், மாயவரம் கோபால கிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் சரித்திரம்’ வரை காவிரிக் கரையில் பிறந்தவை. காவிரிக் கரையில் இனி கற்பனை பிறக்குமா?

ஆடிப்பெருக்கில் புதுத் தம்பதிகள் மண மாலைகளைக் காவிரியில் விடுவதற்கு நீரில்லை. தமிழ் இலக்கியத்தின் புதுநீராடல் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும். அப்போது காஞ்சியிலிருந்து, நெல்லையிலிருந்து ராமநாதபுரத்திலிருந்து மக்களைக் காவிரிக் கரை ஈர்த்துக்கொண்டது. இங்கிருப்பவர்களே இன்று வெளியிடங்களுக்குச் சென்றால்தான் பிழைக்கலாமோ?

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் இங்கு இயற்கைச் சூழலின் வலைப்பின்னல் குலைந்துபோன கோலமாயிற்று. குளம், குட்டைகளில் ஏற்றிவைத்த விளக்காகப் பூக்கும் அல்லி, தாமரை, நீலோத்பலத்தைக் காணவில்லை. சேறே இல்லாதபோது சேற்றில் நடக்கும் உம்பளச்சேரி மாடும் இல்லை என்றானது.

வண்டலை விட்டுவிட்டோமே!

அப்போது காவிரியில் வந்தது நீர்மட்டுமல்ல. வளத்தைக் கொடுக்கும் வண்டலும் வந்தது. உச்ச நீதிமன்றம் வழங்கும் நீர் வந்தாலும் வண்டல் வராது. வழியில் வண்டலைத் தடுத்துக்கொள்ளும் அத்தனை அணைகள், தடுப்பணைகள். யாரும் இதைக் கணக்கில்கொள்வதில்லை. டெல்டாவை உருவாக்கியது இந்த வண்டல். இங்கு ஓடும் 36 நதிகளில் 18 கடலை அடையும். மற்றவை வண்டலின் விசிறிப் பரப்பில் சுவர்ந்துவிடும். 26 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் வண்டலைக் கடத்திக் கடத்தி காவிரிக் கரையை உயிர்ப்போடு வைத்திருந்தன.

வண்டல் படிவதால் படுகை உருவாகும், குறைந்து காணாமலும் போகும். படுகையை இடித்தும் சேர்த்தும் இடம் வலமாகப் புரண்டு காவிரி தன் போக்கை மாற்றிக்கொள்ளும். ஆறு புரண்டுவிடுவதால் ஒரே கிராமம் ஆற்றுக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இருப்பதுண்டு. இந்த வண்டல் காவிரிக் கரைக்கு வாலிபத்தின் வனப்பைக் கொடுத்தது. நீருக்கு மேல் வண்டலை வைத்துக்கொண்டால் நம் உரிமையைச் சரியாக வடிவமைக்கிறோம். ஆனால் நாம் நீரை மட்டும்தானே கேட்கிறோம்!

பாசன அமைப்பை அந்தந்தக் கிராமமே பராமரிக்கும் அக்கறையும் இப்போது மறைந்துவிட்டது. வரத்து குறைந்து முறைப்பாசனம் வந்தது. இதனால், ஒவ்வொரு கிராமத்திலும் கடைமடைப் பகுதி ஒன்று உருவாகி அது இளைத்துக்கொண்டிருக்கிறது. நீரின் அளவு குறைந்தது என்பதைவிட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாம் அதிகம் அஞ்ச வேண்டியவை இரண்டு உண்டு. ஒரு பெருநகரின் குடிநீர்த் தேவை நதிநீர்ப் பங்கீட்டுக்கு ஒரு அடிப்படையானது ஒன்று. இங்கு நாம் எதிர்பாராத வகையில் ஒரு நியாயவியல் கோட்பாடு உருவாகி அழுத்தமாகியுள்ளது. அந்த நகரின் தேவை அதிகரிக்கும்போதும் இதே கோட்பாடு பின்பற்றப்படுமானால் விளைவு என்ன என்பதை நாம் ஊகிக்கலாம். இரண்டாவது, மனித நாகரிகத்தைப் பற்றியது. ஒரு நீராதாரத்துக்குப் பெருநகரின் குடிநீர்த் தேவையும் விவசாயத் தேவையும் போட்டி. மனித நாகரிகத்தின் வளர்ச்சி பெரு நகரங்களைப் பெருக்கும். இதை நிறுத்தித் திருப்ப முடியாது.

நாகரிக வளர்ச்சி என்பது விவசாயத்துக்குப் பகைதானா? விவசாய வளர்ச்சி என்றால் ஒரு போகத்தை இரண்டு போகமாக்குவது, அதை மூன்றாக்குவது, ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தி அதிகமாவது என்ற வளர்ச்சி தொடர்பான நமது மன வரைவு ஒரு உட்பகை. வருமானம் பெருக வேண்டும். ஆனால், விவசாயம் ஆதாயத்துக்காகத்தானா? காவிரி என்பது நீர் மட்டும்தானா!

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,

‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

(காமதேனு, 11 மார்ச் 2018 இதழில் வெளியான கட்டுரை)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்