ஹரியாணாவில் 4 முனைப் போட்டி - முந்துவது யார்? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

By பால. மோகன்தாஸ்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஹரியாணா மாநில தேர்தல் கள நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

வட இந்தியாவில் தலைநகர் டெல்லிக்கு அருகில் உள்ள நாட்டின் 17வது மாநிலம் ஹரியாணா. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பஞ்சாப் மாகாணத்துடன் இணைந்திருந்தது இது. சுதந்திரத்தின்போது, வங்கம் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்கம் பாகிஸ்தானாகவும், மேற்கு வங்கம் இந்தியாவாகவும் மாற்றப்பட்டதைப் போல, பஞ்சாப் பிரிக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் இந்தியாவாகவும், மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானாகவும் மாற்றப்பட்டது. அப்போது, கிழக்கு பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்த இந்த நிலப்பகுதி, அதில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 1966, நவம்பர் 1ம் தேதி ஹரியாணா என்ற பெயரில் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தோடு இப்பகுதி இணைக்கப்பட்டாலும், தாய்மொழியும், கலாச்சாரமும் வேறு என்பதால், பின்னர் அது தனி மாநிலமாக உருவெடுத்துக்கொண்டது.

22 மாவட்டங்கள், 10 மக்களவைத் தொகுதிகள், 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் இந்த மாநிலத்தில் உள்ளன. தனி மாநிலம் என்ற போதிலும், தனி தலைநகர் இதற்கு இல்லை. யூனியன் பிரதேசமான சண்டிகர்தான் ஹரியாணாவுக்கும் பஞ்சாபுக்கும் தலைநகர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹரியாணாவில் 2,53,51,462 பேர் வசிக்கிறார்கள். இதில், ஆண்களின் எண்ணிக்கை 1,34,94,734 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,18,56,728 ஆகவும் உள்ளது. பாலின விகிதத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள்தான் இருக்கிறார்கள். மாநிலத்தின் எழுத்தறிவு 76.64%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 85.38% ஆகவும், பெண்களின் கல்வி அறிவு 66.67% ஆகவும் உள்ளது.

ஹரியாணாவில் 87.50% இந்துக்கள், 7% முஸ்லிம்கள், 5% சீக்கியர்கள் இருக்கிறார்கள். ஹரியாண்வி, பாக்ரி, மேவாதி ஆகிய மொழிகள் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளாக உள்ளன. எனினும், இந்தி இணைப்பு மொழியாக மக்களால் பரவலாகப் பேசப்படுகிறது. இவை மட்டுமின்றி, பஞ்சாபி, உருது, பெங்காளி, நேபாளி மொழி பேசக்கூடிய மக்களும் ஹரியாணாவில் பரவலாக இருக்கிறார்கள். ஹரியாணாவின் அலுவல் மொழி இந்தி. இணை அலுவல் மொழிகளாக ஆங்கிலமும், பஞ்சாபியும் உள்ளன.

ஹரியாணா தோற்றுவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியே இம்மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்துள்ளது. ஜனதா, ஜனதா தள், இந்திய தேசிய லோக் தள், பாஜக ஆகிய கட்சிகளும் இம்மாநிலத்தை ஆட்சி செய்துள்ளன. பன்சி லால், பஜன் லால், தேவி லால், ஓம் பிரகாஷ் சவுதாலா, பூபிந்தர் சிங் ஹூடா, மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது, பாஜகவைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதல்வராக இருக்கிறார்.

ஹரியாணாவில் 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி ஆகிய 4 கட்சிகளே மாநிலத்தின் முக்கிய சக்திகளாக உள்ளன. ஹரியாணாவின் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த கால சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், பாஜக, காங்கிரசில் இருந்து பிரிந்து உருவான ஹரியாணா ஜன்ஹிட் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில், பாஜக 7 தொகுதிகளிலும், ஹரியாணா ஜன்ஹிட் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தள் தனித்துப் போட்டியிட்டன. பாஜக, 34.84% வாக்குகளுடன் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக் தள் 24.43% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, 22.99% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

2014 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தலை அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக, 33.20% வாக்குகளுடன் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மனோஹர்லால் கட்டார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். 88 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள், 24.11% வாக்குகளுடன் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 90 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 20.58% வாக்குகளுடன் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஹரியாணா மாநில கட்சியான இந்திய தேசிய லோக் தள் 2018ம் ஆண்டு பிளவுபட்டது. முன்னாள் துணைப் பிரதமரான தேவி லால் துவக்கிய கட்சி இது. தேவி லால் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன்கள் அஜய் சிங் சவுதாலா, அபய் சிங் சவுதாலா இருவரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தந்தையுடன் சேர்ந்து கட்சியை கைப்பற்றிய அபய் சிங் சவுதாலா, கட்சியில் இருந்து அஜய் சிங் சவுதாலாவின் மகன்களான துஷ்யந்த் சவுதாலா மற்றும் திக்விஜய் சவுதாலா ஆகியோரை நீக்கினார். இதையடுத்து, ஜனநாயக் ஜனதா கட்சி என்ற கட்சியை 2018, டிசம்பர் 9ம் தேதி துஷ்யந்த் சவுதாலா தொடங்கினார். தேவி லால் ஜனநாயக் என அழைக்கப்பட்டதால், அந்த பெயரிலேயே கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கட்சி முதல்முறையாக 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தப் போட்டியிட்டது. இதில், பாஜக 58.20% வாக்குகளுடன் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 28.51% வாக்குகளையும், இந்திய தேசிய லோக் தள் 1.90% வாக்குகளையும் பெற்றன. 7 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 4.90% வாக்குகளையும், 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 0.36% வாக்குகளையும் பெற்றன.

2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலிலும், பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. 90 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 36.49% வாக்குகளுடன் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 87 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 15.32% வாக்குகளுடன் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜகவும், ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. மனோஹர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 90 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 28.08% வாக்குகளுடன் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக் தள் 2.71% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 46 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, 0.48% வாக்குகளையே பெற்றது.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். மக்களவை தொகுதி பங்கீடு மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணி முறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதை அடுத்து, முதல்வராக இருந்த மனோஹர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றிருக்கிறார். அவருக்கு 5 சுயேட்சைகள் மற்றும் ஹரியாணா லோக்ஹித் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த பின்னணியில், மக்களவைத் தேர்தலை ஹரியாணா எதிர்கொள்கிறது.

ஹரியாணாவின் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இண்டியா கூட்டணி சார்பில், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.

கருத்துக் கணிப்புகள்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஹரியாணாவில் இதுவரை 8 கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திலும், பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக, குறைந்தது 6 தொகுதிகளிலும், அதிகபட்சம் 10 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிப்புகள் கூறுகின்றன. இண்டியா கூட்டணி, அதிகபட்சம் 4 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரங்கள்: நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக ஆக ஹரியாணா ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும், ஹரியாணா மாநில அரசும், மத்திய அரசும் செய்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அக்கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.

மறுபுறம், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக, ஹரியாணாவின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டோடு, தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த இரு பெரும் சக்திகளுக்கு மத்தியில், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை விவசாயிகள், தொழிலாளர்கள், மாநில நலன் ஆகியவற்றை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்