பிரசுர மோகத்தால் நசுக்கப்படும் பல்கலைக்கழக ஆய்வுகள்

By தருண் ராஜி

இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் திறன் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், மனித சக்தி இருந்தும் சிறந்த ஆராய்ச்சிகள் நடப்பதில்லை என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். சிலருக்கு இது ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால், இதே பல்கலைக்கழகங்கள்தான் சிறந்த ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதே நிதர்சனம்.

பல ஆராய்ச்சிகளுக்கான அடித்தளம் பல்கலைக்கழக முதுநிலை / முனைவர் பட்ட மாணவர்களாலேயே நிகழ்த்தப்படுகிறது. நோபல் பரிசு வெல்லும் பல கண்டுபிடிப்புகள் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை. இத்தனை முக்கியமான பல்கலைக்கழக ஆய்வுகள் இந்தியாவில் சீராக நடக்கவில்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

அரசாங்கத்தின் கீழ் செய்யப்படுகின்ற ஆய்வுகள், குறிப்பிட்ட நிதி வரம்புக்குள் மேற்கொள்ளப்படுவதால் ஆய்வின் குறிக்கோளிலிருந்து விலகாமல் குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவை நோக்கிய பயணத்தை அரசுப் பணி செய்யும் விஞ்ஞானியால் தொடர முடியும். ஆனால், முனைவர் பட்ட மாணவர் தன்னுடைய ஆய்வில் வரும் அனைத்து முடிவுகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் வித்தியாசமான முடிவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டிய பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், அதே பல்கலைக்கழகத்தின் சட்ட வரைமுறைகளால் நசுக்கப்படுகின்றன.

என்ன பிரச்சினை? - உயிரியல், மருத்துவம், வேளாண்மை போன்ற முழு நேர முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களில் முதல் ஓர் ஆண்டு முழுவதுமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காகத் தயாராவார்கள். ஆனால், முழுவதுமாக ஆய்வுக்காக ஒதுக்கப்பட வேண்டிய அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

அந்த நேரத்தில், ஆய்வில் மட்டும் கவனம் செலுத்த விடாமல் கருத்தரங்கு, ஆய்வுக் கட்டுரை என ஆய்வுக்குத் தொடர்பில்லாத வேறு சுமைகளைப் பல்கலைக்கழகங்கள் கொடுக்கின்றன. இவையெல்லாம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் நடக்கின்றனவே? ஆனால், அங்குபோல் நேரம் செலவழித்து நிதானமாகச் செய்யும் அளவுக்கு இங்குள்ள பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அனுமதிப்பதில்லை.

எடுத்துக்காட்டாக, மதிப்பாய்வுக் கட்டுரை (Review paper) என்று ஆய்வுலகில் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு புதுமையான தேநீர் போடும் முறையைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை வெளியுலகுக்குச் சொல்ல நினைக்கிறீர்கள். அதன் செய்முறையை எழுதி அனைவரும் படிக்கும் ஒரு அறிவியல் இதழில் வெளியிடுவீர்கள்.‌

இதற்குப் பெயர் ஆய்வுக் கட்டுரை. ஆனால், மதிப்பாய்வுக் கட்டுரை என்பது தேநீர் எப்படிப் போடுவது என்ற ஆய்வில் நீங்கள் பத்து ஆண்டுகளாக இருக்கிறீர்கள்; உலக அளவில் இதுபோன்ற ஆராய்ச்சிகளை உங்களுக்கு நன்றாகத் தெரியும்; எந்தெந்த ஆராய்ச்சியாளர் எப்படித் தேநீர் போடுகிறார் என்றும் உங்களுக்குத் தெரியும்; இந்தப் பரந்த அறிவைக் கொண்டு அனைத்து செய்முறையையும் மதிப்பாய்வு செய்து எழுதும் கட்டுரைக்குப் பெயர் மதிப்பாய்வுக் கட்டுரை.

இதை ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளர்தான் எழுத வேண்டும். இளநிலை முடித்து முதுநிலைக்காகவோ முதுநிலை முடித்து முனைவர் ஆய்வுக்காகவோ படியெடுத்து வைக்கும் ஒரு மாணவரை மதிப்பாய்வுக் கட்டுரை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்?

பல்கலைக்கழகங்களின் சுயநலம்: இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆய்வுகள் சிறந்த முடிவுகளுக்காக நிகழ்த்தப்படாமல், ‘ஆய்வுக் கட்டுரை எழுத முடியுமா?,’ ‘அவை தலைசிறந்த அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகுமா?’ என்ற ஆசையிலேயே பல ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.

சரி. இத்தனை‌ ஆசையோடு ஏன் இத்தகைய கட்டுரைகள்‌ உருவாக வேண்டும்? சுயநலம். சிறந்த பத்திரிகைகளில் தங்களுடைய கட்டுரைகள் வெளியாக வேண்டும் என்றும் எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு இத்தனை கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது என்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் சுயநலத்தை முன்வைப்பதே காரணம்‌.

இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் தரவரிசை உயரும். அரசுப் பல்கலைக்கழகமாக இருந்தால் தரவரிசை உயர்வின் மூலம் அரசின் உதவிகள் இன்னும் கிடைக்கும். தனியார் பல்கலைக்கழகமாக இருந்தால், இதைக் காட்டி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும். பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வும் கிடைக்கும். இதெல்லாம் ஆக்கபூர்வமானவைதானே, இதில் என்ன தவறு?

முதல் சிக்கல், மாணவர்களின் நேரம். இந்தக் கட்டுரைகளை எல்லாம் மாணவர்கள்தான்‌ எழுத வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் இத்தனை கட்டுரைகள் எழுதி வெளியிட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்படுவதன் காரணமாகப் பல கட்டுரைகள் அவற்றின் உண்மையான சாரத்தை இழந்துவிடுகின்றன. எந்தப் பத்திரிகையும் வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, அந்தந்த மாணவர்களுக்கே மன உளைச்சல் தருகின்றன.

இது மாணவர்கள் ஆய்வில் செலுத்தும் நேரத்தைக் குறைத்து, ஆய்வின் தரத்தையும் பாதிக்கிறது. மேலும், சிறப்பான ஆராய்ச்சி செய்தால் சிறப்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட முடியும் என்ற சிந்தனை மாணவர்கள் மனதிலிருந்து அகன்று, கட்டுரைக்காகத் தங்கள் ஆய்வுகளை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மிகக் குறுகிய காலமாகக் காணப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீதான இந்த மோகமானது, இதைச் சுற்றிய தவறான வர்த்தகங்களையும் திறந்து வைத்திருக்கிறது. இவ்வளவு பணம் கொடுத்தால் போதும், உங்கள் பெயர் போட்டு ஒரு கட்டுரை வெளியிடுவோம் என்பன போன்ற வர்த்தகங்கள்.

இதற்கு ஒரே தீர்வு, ஆய்வு மாணவர்களை ஆய்வில் முழு நேரம் ஈடுபட அனுமதிப்பதுதான். குறுக்கு வழிகளை விட்டுவிட்டு, அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் நிச்சயம்நல்லதொரு ஆய்வுக் கட்டுரையை ஈட்டித்தரும்.மாணவர்களுக்கு மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தரும்!

- தொடர்புக்கு: tharunraji888@gmail.com

To Read in English: How publishing craze crushes university research

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்