பி
ரிட்டன் தலைநகரம் லண்டன் இன்னொரு வரலாற்றுப் பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது . நான் இங்கு வந்து சேர்ந்த காரணமும்கூட அதுதான்; காமன்வெல்த்! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று பிரிட்டன் முடிவெடுத்த பிறகு, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய தொடர் விளைவுகளில் முக்கியமான நகர்வாக காமன்வெல்த் மீட்டுருவாக்கம் மாறிவருகிறது.
காமன்வெல்த் கூட்டமைப்பு
சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என்ற பெயரோடு நூற்றாண்டுகளை வியாபித்திருந்த பிரிட்டிஷ் அரசு ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்த பூமியின் நான்கில் ஒரு பகுதியை (24%) தன்னுடைய கைகளில் வைத்திருந்தது. உலகின் 23% மக்கள் அதன் வசம் இருந்தனர். நவீன வரலாற்றில் உலகின் முதல் பெரும் சக்தியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கத்துக்கு உலகப் போர்களுக்குப் பிந்தைய ஜனநாயக யுகம் முடிவு கட்டியது.
காலனிய காலத்துக்குப் பின்னரும் தன்னுடைய காலனி நாடுகளுடன் நல்லுறவுகளைத் தொடரும் நோக்கிலும், சர்வதேச அளவில் தனக்கென ஒரு வலைப்பின்னலோடு முன்னகரும் நோக்கிலும் பிரிட்டன் உருவாக்கியதே காமன்வெல்த் அமைப்பு. அரசியல்,ஜனநாயகம், கலை, கலாச்சாரப் பரிவர்த்தனைகள் என்று இலக்குகள் விரிந்தாலும், அதன் மையம் வர்த்தக உறவு. தொடக்க நாட்களில் அது அழைக்கப்பட்டபடி ‘பிரிட்டிஷ் காமன்வெல்த்’ என்பதே அதன் மைய நோக்கமாகவும் இருந்தது.
இன்று ‘காமன்வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ என்று அழைக்கப்படும் காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பு நாடுகளாக இடம்பெற்றிருக்கின்றன. உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கையும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும் வகிக்கும் இந்த நாடுகள் வர்த்தகத்திலும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இந்த நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்பு14,623 லட்சம் கோடி டாலர்கள். உலக வருமானத்தில் இது 14%.
விரிந்த தாராளப் பார்வையைக் கொண்டதாகவே காமன்வெல்த் கட்டமைக்கப்பட்டது. ‘காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எந்த ஒரு குடிமகனும் பிரிட்டன் பிரதமராக முடியும்’ என்ற சட்ட வழிவகையை ஓர் உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். வணிகத்தைத் தாண்டியும் சர்வதேச அளவில் பெரிய அரசியல் - கலாச்சாரப் பரிவர்த்தனை சக்தியாக காமன்வெல்த்தை வளர்த்தெடுத்திருக்க முடியும். ஆனால்,பெரிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்ட காமன்வெல்த் எல்லா வகைகளிலுமே தூங்கும் ராட்சதனாகவே முடங்கிக் கிடந்தது.
பனிப்போர் மூடிய ராட்சதன்
உலகப் போருக்குப் பிந்தைய சூழல் பிரிட்டனை சர்வதேச அளவில் பின்னுக்குத் தள்ளியது. உலகப் போரில் ஏற்பட்ட பெரும் செலவு,கடன்கள் போன்ற இழப்புகளோடு, அடுத்தடுத்து நிகழ்ந்த காலனிய நாடுகளின் விடுதலையும் சேர்ந்து அதன் வருமானத்துக்கு பேரடி கொடுத்தது. கூடவே அந்நாடுகளிலிருந்து வெகு மலிவாகவும், தொடர்ந்தும் கிடைத்துவந்த கச்சாப்பொருட்களின் நீரோட்டமும் அடி வாங்கியது. பொருளாதாரரீதியாக பிரிட்டன் ஓரடி கீழே இறங்கிய இதே காலகட்டத்தில்தான், உலகம் அமெரிக்கா தலைமையில் ஓரணியாகவும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஓரணியாகவும் பிரிந்தது. இரண்டிலும் சேர விரும்பாத இந்தியா உள்ளிட்ட நாடுகள் ‘அணி சாரா இயக்கம்’ கண்டன.
இந்த மூன்று பிரிவுகளில் மூன்றாவது அணியின் செயல்பாடு பிந்தியிருக்க முதலாவது அணியின் செயல்பாடு பாய்ச்சல் கண்டது. ஒரே சமயத்தில் மிகப் பெரிய வேளாண்மை நாடாகவும் தொழில்வள நாடாகவும் தொழில்நுட்பங்களைக் கையாளும் நாடாகவும் உருவெடுத்தது அமெரிக்கா. இணை சக்தியாக வளர்ந்தது சோவியத் ஒன்றியம். இவை இரண்டும் சார்ந்து இடையில் பொருளாதாரரீதியாகவும் - ராஜீயரீதியாகவும் ‘நேட்டோ’, ‘வார்சா’ போன்று பல்வேறு அமைப்புகள் உருவான நிலையில், அவற்றுக்கு இடையில் பிரிட்டனும் கூடவே அதன் காமன்வெல்த் கனவும் மூடுண்டது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஆசியாவிலிருந்து ஒரு வலுவான சக்தியாக சீனா கிளர்ந்தெழ வழிவகுத்ததே தவிர, பிரிட்டன் தன்னுடைய மீட்சியை அடைய எந்த வகையிலும் உதவவில்லை. தெற்காசியாவில் ஜப்பான் தொடக்கிவைத்த புதிய தொழில் கலாச்சாரம் சீனா, கொரியா, இந்தியா என்று பரவ இதே காலகட்டத்தில் பிரிட்டன் தன்னுடைய பொருளாதாரத்தைப் படிப்படியாக உற்பத்தி மையத்திலிருந்து சேவை மையத்துக்கு மாற்றிக்கொண்டது. ஐரோப்பாவில் பிரிட்டனைவிட ஜெர்மனி பெரும் சக்தியாக உருவெடுத்தது.
ஐரோப்பிய ஒன்றிய உத்வேகம்
அமெரிக்காவுக்கும் ஆசியாவில் ஜப்பான், சீனா, இந்தியா, கொரியாவுக்கும் இடையில் தங்களுடைய பொருளாதார முன்னிலையைத் தக்க வைத்துக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பானது, பிரிட்டனின் பொருளாதார முன்னிலைக்கும் வலு சேர்த்தது. உலக மக்கள்தொகையில் வெறும் 7.3% என்றாலும், உலகின் உற்பத்தி மதிப்பில் 22.2% பங்குடன் வலுவான நிலையில் உள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அதன் நான்கு முன்னிலை நாடுகளில் ஒன்றாக இருந்தது பிரிட்டன்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது என்ற முடிவு இரு தரப்புக்குமே பல பாதிப்புகளையும் தரக் கூடியது என்றாலும்,தன்னுடைய மக்களின் முடிவைச் செயல்படுத்த பிரிட்டன் முழு அளவில் ஆயத்தமாகிவருகிறது. வெறுமனே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் வாயிலாக ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதோடு விட்டுவிடாமல், ராஜீயரீதியிலும் பொருளாதாரரீதியிலும் தனக்கென ஒரு அணி, பாதையை வகுத்துக்கொள்ளும் வியூகத்தையும் கையில் அது எடுத்திருக்கிறது. அதன் முக்கியமான ஒரு அம்சம் காமன்வெல்த் மீட்டுருவாக்கம்.
காத்திருக்கும் சவால்
ஐரோப்பிய ஒன்றியமும் காமன்வெல்த் அமைப்பும் இணையானவை அல்ல. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஐரோப்பியக் கண்டத்திலேயே இருப்பவை. பொதுவான சந்தையை அவை பகிர்ந்துகொள்கின்றன. பொதுச் செலாவணியை - ஈரோ டாலர் -பயன்படுத்துகின்றன. வர்த்தகச் சட்டங்களும் இவற்றுக்கிடையில் பொதுவானவை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் பிற நாடுகளில் சென்று வேலை செய்யவும் தொழில் செய்யவும் தடையில்லை.
இதோடு காமன்வெல்த் நாடுகளை ஒப்பிட முடியாது. பல வகைகளில் அவை வேறுபட்டவை. இந்தியா - பாகிஸ்தானை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஐக்கிய நாடுகள் சபையிலோ, பிற சர்வதேச அமைப்புகளிலோ இந்த நாடுகள் ஒரு குழுவாக வாக்களித்ததே கிடையாது. ராஜீய நடவடிக்கைகளிலும் சேர்ந்து செயல்படுவது கிடையாது. பொருளாதார அணிகளிலும் ராணுவ அணிகளிலும் இவை ஒன்று போல சேர்ந்தது கிடையாது.
ஆனால், உலகின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட பெரிய சந்தை இது என்பது மிக முக்கியமான வாய்ப்பு.அமெரிக்கா, சீனா இரு வல்லரசுகளுக்கும் வெளியே ஒரு மாற்று அமைப்பாக வளர்த்தெடுக்க வாய்ப்புள்ள ஊடகம் என்பது வியூகரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. 1950-களில் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவைப் போல நான்கு மடங்கு மதிப்புக்கு வர்த்தக உறவை காமன்வெல்த் நாடுகளுடன் கொண்டிருந்தது பிரிட்டன். எல்லோர்க்கும் வாய்ப்பளிக்கும் கூட்டமைப்பாகப் புத்துயிர் கொடுப்பதன் வாயிலாக தன்னையும் பலப்படுத்திக்கொள்ள முடியும்; தன் கூட்டாளிகளும் பலமடைய முடியும் என்று அது நம்புகிறது.
இந்தியா நோக்கி நகரும் திசை
காமன்வெல்த்தின் மையம் நோக்கி இந்தியா நகர்ந்தால்தான் இந்தப் புதிய வியூகம் எடுபடும் என்ற முடிவை நோக்கி பிரிட்டன் நகர்ந்திருப்பதுதான் இந்தச் சூழலின் வரலாற்று முக்கியத்துவம். காமன்வெல்த் நாடுகளின் மக்கள்தொகையில் சரிபாதிக்கும் மேலதிக மக்கள்தொகையையும் காமன்வெல்த் நாடுகளிடையேயான வர்த்தகத்தில் கால் பகுதியையும் கொண்ட இந்தியாவை அந்த அமைப்பின் மையத்துக்குக் கொண்டுவருவதன் வாயிலாகவே காமன்வெல்த்தை வளர்த்தெடுக்க முடியும் என்று பிரிட்டன் கருதுகிறது.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இந்த ஆண்டு பத்தோடு ஒன்று பதினொன்றாக அமையப்போவதில்லை. லண்டனில் இந்த மாத இறுதியில் நடக்கும் கூட்டத்தில் மோடி பெரும் முக்கியத்துவம் பெறுவார்.
இந்தியாவுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்புதான். வர்த்தகரீதியாக மட்டும் அல்லாமல் ராஜீயரீதியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இது ஒரு புதிய வாகனம். மிக அனுகூலமான வாய்ப்பு, ஏனைய சர்வதேச அமைப்புகளைப் போலன்றி காமன்வெல்த்தில் சீனா கிடையாது. ‘ஒரே சாலை - ஒரே பிரதேசம்’ கோஷத்துடன் பழைய பட்டுப் பாதையில் உள்ள நாடுகளை இணைத்துக்கொண்டு வலுவான பொருளாதார-ராஜீய உறவுகளை ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை வளைத்துச்செல்லும் சீனாவுக்குச் சின்ன அளவில் இந்தியாவாலும் இதன் மூலம் ஒரு பதிலைத் தர முடியும். ஆனால், காமன்வெல்த் நாடுகளிடமிருந்து நாம் எதைப் பெறப்போகிறோம் அவர்களுக்கு எதைத் தரப்போகிறோம் என்பதிலேயே இருக்கிறது!
(நாளை பார்ப்போம்)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago