சி
ல மாற்றங்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிகழ்ந்துவிடும்; இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை யும் கடந்த சில மாதங்களில் அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான உறவின் போக்கை 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மாற்றுவதில் தீவிரம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மிகவும் வெளிப்படையாக இருப்பது சீனத்துடனான பிணக்கைத் தீர்க்கும் முயற்சி. டோக்லாம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் மூளும் நிலை வந்தபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கடந்த ஆண்டு பேசி பதற்றத்தைக் குறைத்து, சுமுக நிலையை மீட்டார் மோடி. இம்முயற்சி மேலும் தொடர்கிறது.
சீனத் துருப்புகள் ஊடுருவுவதாக அடுத்தடுத்துத் தகவல்கள் வந்தபோதும், இந்திய அரசு கோபப்பட்டு பதில் நடவடிக்கையில் இறங்கவில்லை. இந்தச் செயல்கள் அனைத்தையும் சீனா தன்னுடைய எல்லைக்குள்ளேதான் நிகழ்த்துகிறது என்று சுட்டிக்காட்டி, இது அச்சுறுத்தல் அல்ல என்றது. சீனாவில் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிகளுக்கு இப்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில், எல்லை தொடர்பான கருத்துவேறுபாடுகளையும் வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைப்பது தொடர்பாகப் பேசுவது என்று இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.
சீனாவுடன் சிநேகம்
சீனாவுடன் மட்டுமல்லாது இதர தெற்காசிய நாடுகளுடனும் உறவைச் சீராக்கும் முனைப்பு தெரிகிறது. மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் பல முறை கோரிக்கை விடுத்த போதும், அதிபர் அப்துல்லா யமீன் பிறப்பித்த நெருக்கடி நிலை அறிவிப்புக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவிடமிருந்து யமீன் உதவி கேட்டார் என்பதற்காகக்கூட இந்தியா மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. இந்தியப் பெருங்கடலில் இந்திய அரசுக்குச் சொந்தமான பொருளாதார மண்டலத்தில் கூட்டு நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வாவுடன் மாலத்தீவு அதிபர் பேசிவருவதாகத் தகவல்கள் வந்தபோதும் இந்தியா பதறவில்லை. “அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சிக்காக சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்” என்று நேபாளப் பிரதமர் கே.பி.ஒளி கூறியபோதும் இந்தியா கோபப்படவில்லை. அதேசமயம், டெல்லிக்கு வந்த கே.பி.ஒளிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்தது இந்திய அரசு. நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தால் 2015-16-ல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது என்றாலும், இம்முறை அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட இந்தியா பேசவில்லை. சமீபத்திய வாரங்களில் பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் நட்பை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா கையாண்டது.
பாகிஸ்தானுடன் முன்னேற்றம்
பாகிஸ்தானுடனான உறவிலும் சிறு முன்னேற்றம் காணப்படுகிறது. இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜானுஜாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு முதல் முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று பரஸ்பரம் கெடுபிடிகளைத் தளர்த்தியுள்ளன.
ராணுவ நோக்கில் வகுக்கப்பட்ட உத்தியின்படி, பக்கத்து நாடுகளுடன் இதுவரை கடைப்பிடித்த அணுகுமுறை இப்போது சமரசக் குரலுக்கு மாறியிருக்கிறது. இதேபோல அமைதியாகவும் அடங்கியும் இந்தியா நடக்க வேண்டிய அவசியம் இல்லை. துணிச்சலாகவும், துடிப்பாகவும் செயல்பட வேண்டும்.
தான் அறிவித்துள்ள ‘ஒரே பாதை - ஒரே பிராந்தியம்’ கொள்கைப்படி பழைய பட்டுப்பாதை நாடுகளுடனான பொருளாதார வளர்ச்சி முயற்சியில் இந்தியாவும் சேர வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அணு ஆற்றலுக்குத் தேவைப்படும் சாதனங் களையும் மூலப் பொருட்களையும் தரும் குழுவில் உறுப்பினராகிவிட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளும் இதில் உதவிக்கொள்வது பரஸ்பர நோக்கங்கள் நிறைவேற உதவும்.
பொருளாதார ஒத்துழைப்புக்கான பாதை திட்டத்தில் இந்தியா சேருவது இரு நாடுகளின் தலைவர்களின் அரசியல் விருப்பத்தைப் பொறுத்தது. இது தொடர்பாக இந்தியாவுக்கு மூன்று கவலைகள் இருக்கின்றன. 1. இந்தி யப் பிரதேசத்தை சீனா தனது என்று சொந்தம் கொண்டாடிவிடக் கூடாது. 2. எந்தத் தொழில் திட்டமாக இருந்தாலும் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். 3. எந்தவித ஒத்துழைப்பாக இருந்தாலும் அது இடையில் நிறுத்தப்படக் கூடாது. முதல் கவலையைத் தீர்க்க வேண்டுமென்றால், சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் பொருளாதார ஒத்துழைப்பு சாலை ஆப்கானிஸ்தானுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இதனால், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதியிலிருந்து விலகி, ஆப்கானிஸ்தானை நோக்கிய சாலையில் வளர்ச்சி ஒத்துழைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தனது இறையாண்மைக்கு உட்பட்ட இடத்தில் சீனா பொருளாதாரப் பாதையை அமைக்கிறது என்ற கவலை இந்தியாவுக்கு நீங்கிவிடும்.
சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புப் பாதை திட்டமானது அதில் சேரும் நாடுகளைக் கடன் வலையில் சிக்க வைக்கிறது; சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது என்று சில நாடுகள் கவலைப்பட ஆரம்பித்துள்ளன. இந்தக் கவலையை இந்தியாதான் முதலில் உணர்ந்திருந்தது. அடித்தளக் கட்டமைப்பு, சாலை-தகவல் தொடர்பு இணைப்பு ஆகிய துறைகளில் அனைத்து நாடுகளும் பின்பற்றக்கூடிய பொதுவான செயல்திட்டத்தை இந்தியா தயாரித்து வழங்கலாம். அத்துடன் வெளிநாடுகளிடம் வாங்கும் கடன்களை எப்படி அடைப்பது என்ற ஆலோசனையையும் இந்தியா வழங்கலாம். இது பக்கத்து நாடுகளுக்கு இந்தியா மீது நல்லெண்ணத்தை வளர்க்கும்.
மீண்டும் சார்க் செயல்பாடு
பக்கத்து நாடுகளுடன் உறவைச் சுமுகமாக்கும் செயலில் நிச்சயம் பலன்தரக்கூடியது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் (சார்க்) இந்தியா மீண்டும் தீவிரமாகப் பங்கேற்பதுதான். இந்த ஆண்டு மாநாட்டை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து இந்தியா மீது பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து தாக்கினால் உறவைத் தொடர்வது கடினம் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் யூரி ராணுவ முகாம் மீது 2016-ல் தாக்கு தல் நடந்த பிறகு ‘சார்க்’ உச்சி மாநாட்டிலிருந்து விலகுவது என்ற இந்திய முடிவுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானும் தனது பிரதிநிதியை விலக்கிக்கொண்டது. இப்போது பாகிஸ்தான் உயர் தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் உயர் தலைவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
அமைதி ஒற்றுமைக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககுன் அப்பாஸி இருவரும் ஏழு அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். ஊரி சம்பவத்தின்போது இந்தியாவுக்கு அனுதாபமாகக் கருத்து தெரிவித்த இலங்கை, நேபாளம் இரண்டும் இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கத் தயாராகிவருகின்றன. எனவே, இந்தியாவும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பது அவசியம். பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் பக்கத்து நாடுகளுடனான உறவைச் சீரமைத்து வளர்க்கத்தான் மோடி முயன்றார்; அதைக் கடைசி ஆண்டிலும் தொடர்வதே நல்லது!
தமிழில்: சாரி,
© ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago