மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
கல்வி அறிவில் நாட்டின் முதல் மாநிலம். ஆண்-பெண் விகிதத்தில் நாட்டின் முதல் மாநிலம். நிலப்பரப்பில் 21வது பெரிய மாநிலம். மக்கள் தொகையில் 12வது பெரிய மாநிலம். 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி கேரளாவில் 3 கோடியே 34 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில், ஆண்கள் 48 சதவீதமும் பெண்கள் 52 சதவீதமும் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் 48% மக்களும், கிராமப்புறங்களில் 52% மக்களும் வசிக்கிறார்கள். இந்துக்கள் 54.73 சதவீதமும், முஸ்லிம்கள் 26.56 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 18.38 சதவீதமும் இருக்கிறார்கள்.
கேரளாவில் 14 மாவட்டங்கள், 140 சட்டப்பேரவைத் தொகுதிகள், 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த 10 ஆண்டுகளில் இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. 1957ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இஎம்எஸ் நம்பூதிரிபாட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக பதவியேற்றார்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநிலத்தின் முதல்வர்களாக இருந்துள்ளனர். இந்தக் கட்சிகளில், மார்க்சிஸ்ட் அதிக காலம் கேரளாவை ஆட்சி செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.
கேரளாவில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 5 கட்சிகளே அதிக செல்வாக்கோடு உள்ளன. கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஓரளவு செல்வாக்கோடு உள்ளன.
கேரள அரசியல் இரண்டு மிகப் பெரிய கூட்டணிகளால் நடத்தப்படுகிறது. ஒன்று, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப் - LDF) . மற்றொன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப் - UDF) . 1980 முதல் நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 6-ல் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 4-ல் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (பி), இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஜனஅதிபத்ய கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேகப்), கேரள ஜனநாயகக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, புரட்சிகர மார்க்ஸிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த இரண்டு கூட்டணிகள் இல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்டிஏ - NDA) கேரளாவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
தற்போதைய தேர்தல் கள நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து பார்ப்போம்.
2019 மக்களவைத் தேர்தல்: இந்தத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 15 தொகுதிகளிலும், பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (தாமஸ்) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 37.45% வாக்குகளுடன் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5.48% வாக்குகளுடன் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல், இந்த கூட்டணியைச் சேர்ந்த கேரள காங்கிரஸ் (மாணி) 2% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 2.46% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. அந்த வகையில், மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
25.96% வாக்குகளைப் பெற்ற மார்க்சிஸ்ட் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. 6 சதவீத வாக்குகளைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதேபோல், பாஜக 13 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியிலும் வெற்றிபெற வில்லை.
2014 மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 தொகுதியிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சோசியலிஸ்ட் ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்டது. கேரள காங்கிரஸ் (நேஷ்னலிஸ்ட்) ஒரு தொகுதியிலும், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி(போல்ஸ்விக்) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சி 31.47% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 4.59% வாக்குகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2.39% வாக்குகளுடன் கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 2.27% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அந்த வகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் 21.84% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் 7.68% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அந்த வகையில் இந்தக் கூட்டணி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பாஜக 10.45% வாக்குகளைப் பெற்றது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தற்போதைய கள நிலவரம்: 2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மாநில அளவில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டாலும், அகில இந்திய அளவில் இவை இண்டியா அணியில் உள்ளன. அதாவது, கேரளாவுக்கு வெளியே காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆனால், கேரளாவில் எதிரெதிர் நிலையில் இருந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடத்தப்பட்ட 10 கருத்துக்கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. ஐக்கிய ஜனநாயக முன்னணி குறைந்தபட்சம் 10 இடங்களிலும், அதிகபட்சம் 20 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மார்க்சிஸ்ட் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குறைந்தபட்சம் 0 இடங்களிலும், அதிகபட்சம் 7 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைந்தபட்சம் 0 இடங்களிலும் அதிகபட்சம் 3 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சார வியூகம்: நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள முஸ்லிம்களின் வாக்குகள் பரவலாக காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. இதனால், முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து எல்டிஎஃப் பிரச்சாரம் செய்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக கூறி வருவது ஆகியவற்றை மையப்படுத்தி எல்டிஎஃப் பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதோடு, குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் அமைதி காப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து வருகிறார். மேலும், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதையும் எல்டிஎஃப் கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பிரச்சார வியூகம்: தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாலும், தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாலும் எல்டிஎஃப் அணியை காங்கிரஸ் அதிகமாக விமர்சிப்பதில்லை. தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்பதால், தற்போதைய மத்திய அரசு வீழ்த்தப்பட காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்குமாறு அது கோரி வருகிறது. கேரளாவில் பாஜக வலிமை குறைந்த கட்சியாக இருந்தாலும், காங்கிரஸின் தேர்தல் இலக்கு பாஜகவாகவே இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ - NDA) தேர்தல் பிரச்சார வியூகம்: கேரளாவில் உள்ள இந்துக்களின் ஓட்டுக்களை திரட்டுவதற்கான முயற்சியில் பாஜக இறங்கி இருக்கிறது. சமீபத்தில் தி கேரள ஸ்டோரி திரைப்படம் டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பாஜகவின் வியூகத்தின்படியே இது நடந்ததாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை தங்கள் சாதனையாக பாஜக முன்வைக்கிறது. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை அழிப்போம் என்ற சிபிஎம்-ன் தேர்தல் வாக்குறுதி நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் பாஜக விமர்சித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago