மொழி அடிப்படையில் சமத்துவம் இல்லாத நிலைதான் இங்கு காணப்படுகிறது.
இந்திய குடிமைப் பணி தேர்வில் கேட்கப்படும் ஆங்கில அறிவைச் சோதிக்கும் கேள்விகள், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை வலியுறுத்தி, டெல்லியில் தேர்வு எழுதும் மாணவர்கள், சமீபத்தில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரவிந்த் வர்மா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கியது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், திறனறித் தாளில் கேட்கப்படும் ஆங்கிலக் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம் ஒரு சாராருக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், தேர்வு முறையில் ஏற்றத்தாழ்வை மீண்டும் உருவாக்கியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது. குடிமைப் பணி தேர்வைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடும், தேர்வாணையத்தின் செயல்பாடும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்துவருகிறது. மத்திய தேர்வாணையத்தின் முடிவு தொடர்பாகவும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவும் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம்.
நேருவின் வாக்குறுதி
1950-ல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டம், 15 ஆண்டுகளுக்கு ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று கூறியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என்று கூறப்பட்டது. இந்தி ஆட்சிமொழி ஆவதற்குத் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இதைக் கருத்தில்கொண்டு 1959-ல் அன்றைய பிரதமர் நேரு, இது தொடர்பாக ஒரு வாக்குறுதி அளித்தார். அதாவது, இந்தி பேசாத மாநிலத்தவர் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று கூறியிருந்தார்.
அப்போதெல்லாம் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் ஆங்கிலத்தில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், 1964-ல் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனவுடன், ஐ.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். இந்த யோசனைக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அண்ணா தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களை அடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே, தமிழிலும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிப் போராடி, உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, 1965 பிப்ரவரி 25 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி, அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ‘இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர, அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்' என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், அன்றைய காங்கிரஸ் தலைவர்களான மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா,
சி. சுப்ரமணியம் போன்ற தலைவர்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. “மத்தியத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர, மற்ற எல்லாப் பிராந்திய மொழிகளிலும் நடத்தினால்தான், இந்தி பேசாத மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவு கட்ட முடியும்” என்று அந்தக் கூட்டத்தில் காமராஜர் வலியுறுத்தினார்.
கோத்தாரி கமிட்டியின் பரிந்துரைகள்
அதைத் தொடர்ந்து, 1967-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் ஆங்கிலம், இந்தி தவிர, எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்திய குடிமைப் பணிக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, 1974-ல் குடிமைப் பணி தேர்வு தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்க டி.எஸ். கோத்தாரி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையைப் பல்வேறு பரிந்துரைகளுடன் 1976-ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. 1978-ல் கோத்தாரி கமிட்டி பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, 1979-ல் குடிமைப் பணி தேர்வில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமை சோதனை என்று சொல்லக்கூடிய நேர் முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
கோத்தாரி கமிட்டி அறிக்கையில் உள்ள முக்கியமான பரிந்துரை என்னவென்றால், குடிமைப் பணி தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர, எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் எழுதலாம் என்பதுதான். இதையடுத்து, 1979 முதல் தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் தமிழிலும் தேர்வை எழுதி வருகின்றனர். எனினும், இதுவரை நடந்த தேர்வுகளில், கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் கேட்கப்பட்டன.
இந்தியிடம் பரிவு
இது தவிர, கடந்த 2011-ம் ஆண்டு தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வில் மாற்றம் கொண்டுவந்தது. அந்த மாற்றமும் இந்தி பேசும் மாணவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. இதில் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கேட்கப்படும். இந்தி பேசும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள கேள்விகளில் சந்தேகம் ஏற்பட்டால், இந்தி வாயிலாகத் தங்கள் சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொண்டு விடையளிப்பார்கள். ஆனால், தமிழ் மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் புரியவில்லை என்றால், தவறான விடையளிக்க நேரிடும். இந்தப் பிரச்சினை, தேர்வு முடிவுகளில் எதிரொலித்தது.
கடந்த 2010-ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 980 பேரில், 122 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், 2012-ல் தேர்வான 910 பேரில் வெறும் 68 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது, இந்தி பேசும் மாணவர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்ற காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலம் சார்ந்த கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருக்கிறார்.
இந்தி பேசும் மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் மத்திய அரசு, பிற மொழிகள் பேசும் மாணவர்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுப்பது ஏன் என்பது புரியவில்லை. தேர்வாணையம் அறிவிக்கும் ஒவ்வொரு மாற்றமும் மத்திய அரசின் நிலைப்பாடும், இந்தி பேசுபவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ் உட்பட பிற மொழிகள் பேசும் மாணவர்களுக்கு எதிராகவும் இருந்துவருகிறது. மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுமுறை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 16-க்கு (கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சம உரிமை) விரோதமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 19 பேச்சுரிமை, கருத்துரிமை பற்றிக் கூறுகிறது. ஒருவர் தனது கருத்தை எப்போது சரியாக வெளிப்படுத்த முடியும்? அந்த விஷயத்தைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால்தான் சரியான கருத்தை வெளியிட முடியும். அதேபோல் கேள்வி என்னவென்று புரிந்தால்தான் பதிலையும் கருத்தையும் சிறப்பாகவும் தெளிவாகவும் வெளியிட முடியும். எனவே, ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் கேட்டால் போதாது. கேள்விகள் தமிழ் உட்பட, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் கேட்கப்பட வேண்டும். அப்போதுதான் தேர்வு முறையில் ஒரு சமத்துவம் உண்டாகும். இந்தக் குரல் இந்திக்கு எதிரானது அல்ல, தமிழ் உட்பட பிற மொழிகளின் உரிமைக் குரல்.
- ச. பாலமுருகன், பத்திரிகையாளர், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்துபவர், தொடர்புக்கு: balaiasacademy.in@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago