இ
ந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களைப் பராமரிக்கவும், அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்புகளாக மத்திய வக்ஃபு வாரியமும் மாநில வக்ஃபு வாரியங்களும் செயல்பட்டுவருகின்றன. அவை நேர்மையாகவும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளாகாமலும் செயல்படும்போதுதான், அவற்றின் முழுமையான நோக்கம் நிறைவேறும். ஆனால், காலப் போக்கில் கட்சி அரசியல் இதன் உள்ளேயும் புகுந்துவிட்டது.
சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி(2008), பள்ளிவாசல்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. பெருநகரங்களின் வணிகப் பகுதியில் இருக்கும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இடங்களில் பெரும்பாலானவை, மாநகராட்சியில் அங்கம் வகிப்பவர்களின் ஆளுகையில் இருப்பது தெரியவந்தது. அச்சொத்துக்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்க வேண்டும் என்றும் அதற்காக சக்தி வாய்ந்த சட்ட அதிகாரம் படைத்த செயல்பாடுகள் அவசியம் என்றும் கமிட்டி வலியுறுத்தியது. இந்தச் சொத்துக்கள் மீட்கப்பட்டால், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நல மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, சமூக நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும், சச்சார் கமிட்டி கூறியது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அடக்க ஸ்தானங்கள் என 11 ஆயிரம் அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, வக்ஃபு வாரியத்துக்கு இருக்கிறது. வாரியம் தனது சொத்துக்களை முறைப்படுத்திக்கொள்ள முடிந்தால், அதிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயில் ஒரு பகுதியைக் கொண்டு, தன்னுடைய நிர்வாகத்தை, தானே நடத்திக் கொள்ளலாம். ஆனால், அதைச் செய்யாமல், நிர்வாகச் செலவுகளுக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அரசிடமிருந்து குறைந்த அளவே மானியத் தொகை பெறுவதால், வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாகச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை. இந்த நிலை மாறினால்தான், வக்ஃபு வாரியம் தன்னிச்சையாக செயல்பட்டு, சிறப்பான நிர்வாகத்தைத் தரமுடியும்.
உறுப்பினருக்கான தகுதிகள்
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் வக்ஃபு வாரியத்தின் நிர்வாகத்தைத் திறம்பட அமைத்து, அது சிறப்பாக நடைபெற உதவ வேண்டிய பொறுப்பு, அந்தந்த மாநில நிர்வாகத்துக்குத்தான் உள்ளது. இந்த நிர்வாகப் பொறுப்புகளில் முஸ்லிம் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.க்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். சட்டம் பயின்று நிபுணத்துவம் பெற்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் அல்லது மூத்த வழக்கறிஞர்களை நிர்வாகப் பொறுப்பில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதெல்லாம், வக்பு வாரிய சட்டதிட்டங்களில் கூறப்பட்டிருக்கிறது. வக்ஃபு வாரியத்துக்கு முஸ்லிம் அறங்காவலர்களாக (முத்தவல்லிகள்) இருப்பவர்கள் இருவரைத் தேர்தல் மூலமாக தேர்வுசெய்யவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, மாநில அரசு சார்பிலும் ஒருவர் வக்ஃபு வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதால், இணைச் செயலர் அந்தஸ்துக்கு கீழ் நிலையில் இல்லாத ஒரு அரசு அதிகாரியை நியமிக்கவும், வக்ஃபு வாரிய சட்டம் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும், நகரமைப்புத் திட்டம் அல்லது வணிக மேலாண்மை சமூகப் பணி அல்லது வருவாய் வேளாண்மை மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளில் அனுபவமுள்ள ஒரு நபர், வக்ஃபு வாரியத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட அளவில் சாதனை படைத்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் வக்ஃபு வாரியத்துக்கு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றும் விதிகள் சொல்கின்றன. உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது, அதில் பெண்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வாரியத்துக்கு உறுப்பினர்களாக அரசுத் தரப்பில் நியமிக்கப்படும் இருவரில் ஒருவர் தேர்ந்த கல்வியாளராகவும், மற்றொருவர் மத அறிஞராகவும் (உலமா) இருக்க வேண்டும். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. ஆனால், ஆண்டாண்டு காலமாக, வக்ஃபு வாரிய நிர்வாகத்தில், இஸ்லாமிய சமுதாயத்தை மேம்படுத்தும் உலமாக்கள் இடம் பெறவே இல்லை. அரசியல் பின்புலத்துடனேயே, உறுப்பினர்களும், தலைவரும் தேர்வுசெய்யப்பட்டுவருகிறார்கள். தேர்தலில் சில அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் பொறுப்பு மற்றும் தலைவர் பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, வக்ஃபு வாரியம் தன்னிச்சையான அமைப்பாகச் செயல்படுவதிலிருந்து மாறி, அரசு கையில் இருக்கும் ஒரு சாதாரணத் துறைபோல ஆகிவிட்டது.
ஆளுங்கட்சிகளின் ஆதரவு
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான அப்துல் லத்தீப், தமிழக வக்ஃபு வாரியத்துக்கு இரு முறை தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். திமுக ஆதரவோடு செயல்பட்டதாலேயே லத்தீப்புக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. 1999-ல், திமுக - பாஜகவோடு கைகோர்த்ததால், வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமாசெய்தார் லத்தீப். 2007-ல் வாரியத் தலைவராக வந்த த.மு.மு.க.வின் செ.ஹைதர் அலி, 2009-ல் அரசியல் நிலைப்பாடு மாறியதும், தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத், 2002-ல் வக்ஃபு வாரியத் தலைவரானதும்கூட ஆளுங்கட்சியின் செல்வாக்கால்தான். தற்போது கிட்டதட்ட இரண்டரை ஆண்டு காலமாக, தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. யாரைத் தேர்வு செய்வது என்பதில் ஆளுங்கட்சிக்குள் இருக்கும் கருத்து மாறுபாடுகள்தான் தலைவர் தேர்தலுக்கான தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
வக்ஃபு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே, அதன் சொத்துக்களின் பலன்கள், ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான். ஆனால், வக்ஃபு வாரிய நிர்வாகத்துக்குள் அரசியல் புகுவதால், வாரியத்தின் அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. இந்த நிலை மாற வேண்டும். புதிதாகத் தேர்வாகும் தலைவர், வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்தையும் நியாயமாகக் கணக்கிட்டு, அதில் எதையும் மறைக்காமல் பொது வெளியில் வைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, வாரிய நிர்வாகத்தை முழுமையாக மீட்டெடுத்து, தன்னிச்சையாகச் செயல்பட வைக்க வேண்டும். நிர்வாகச் செலவுகளுக்காக, அரசிடம் மானியம் கேட்டு கையேந்துவதைத் தவிர்த்து, தங்களிடம் உள்ள சொத்துக்கள் மூலம் வருமானத்தை ஏற்படுத்தி, தன்னிறைவு பெற்று, தன்னிச்சையாகச் செயல்பட முயற்சிக்க வேண்டும்.
“வக்ஃபு வாரிய உறுப்பினர் பொறுப்பு என்பது, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பொறுப்பு அல்ல. இந்தப் பொறுப்புக்கு வருகிறவர்கள், வக்ஃபு வாரியத்தின் பணிகளுக்காகப் பயணப்படிகூட பெறக் கூடாது. இறை பக்தியில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். நேர்மையுடன் இருந்து வக்ஃபு வாரியப் பணியைச் செய்ய வேண்டும்’’ என, தன்னுடைய கருத்தைப் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் காயிதே மில்லத். அவரது வார்த்தைகள் வக்ஃபு வாரியத் தலைவர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக அமையட்டும்!
தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago