திரிணமூல் காங். Vs பாஜக Vs இண்டியா அணி - மேற்கு வங்க களம் எப்படி? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

By பால. மோகன்தாஸ்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேற்கு வங்கத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இது 4வது இடத்தில் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு வங்கத்தில் 9 கோடியே, 13 லட்சத்து 47 ஆயிரத்து 736 பேர் உள்ளனர். இவர்களில், இந்துக்கள் 70.54%, முஸ்லிம்கள் 27.01%, கிறிஸ்தவர்கள் 0.72%, பவுத்தர்கள் 0.31% உள்ளனர்.

இந்த மாநிலத்தில் 23 மாவட்டங்கள், 42 மக்களவைத் தொகுதிகள், 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்கத்தின் அலுவல் மொழியாக பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தின் கல்வி அறிவு 77.08%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 82.67%. பெண்களின் கல்வி அறிவு 71.16%.

மேற்கு வங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகியவையே பிரதான அரசியல் கட்சிகளாக உள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1977ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை காங்கிரஸ் கட்சிதான் இம்மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்துள்ளது. 1977ல் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2011 வரை தொடர்ந்து சுமார் 34 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்தது. இதில், 23 ஆண்டுகள் 137 நாட்கள் ஜோதி பாசுவும், 10 ஆண்டுகள் 188 நாட்கள் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் முதல்வர்களாக இருந்துள்ளனர். 2011ல் ஆட்சியைப் பிடித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 12 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.

தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்ளும் முன்பாக, கடந்த 2019 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 3 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில், 7,00,01,284 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 5,66,60,188 பேர் வாக்களித்தனர். 81.76% வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 43.69% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 40.64% வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 5.66% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஎம் கட்சி 6.34% வாக்குகளைப் பெற்றபோதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. மற்ற கட்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றன.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. சிபிஎம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில், 6,28,33,113 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 5,10,60,534 பேர் வாக்களித்தனர். 82.22% வாக்குகள் பதிவாகின.

மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 39.79% வாக்குகளைப் பெற்று 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 22.96% வாக்குகளைப் பெற்ற சிபிஎம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 17.02% வாக்குகளைப் பெற்ற பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9.69% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ், கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் இரண்டு பிரிவுகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சிபிஎம் கட்சி, காங்கிரஸ், இந்திய மதச்சார்பு முன்னணி, அகில இந்திய ஃபார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 290 தொகுதிகளில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் 48.02% வாக்குகளுடன் 215 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 293 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 37.97% வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 139 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 4.71% வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதேபோல், 92 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 3.03% வாக்குகளைப் பெற்றது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

2024 மக்களவைத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் இந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ல் நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்தல் மற்றும் ஏப்ரல் 26ல் நடைபெற உள்ள 2ம் கட்டத் தேர்தல் ஆகியவறறில் தலா 3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 7ம் தேதி நடைபெற உள்ள 3ம் கட்டத் தேர்தலில் 4 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி நடைபெற உள்ள 4ம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்டத் தேர்தலில் 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 25ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள 7ம் கட்டத் தேர்தலில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மும்முனைப் போட்டி: இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதேபோல், பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது. இண்டியா கூட்டணி தனி அணியாக களம் காண்கிறது. இந்த அணியில் சிபிஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிபிஐ ஆகியவை உள்ளன. இதில், சிபிஎம் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும், சிபிஐ 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

களம் யாருக்கு சாதகம்? - கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் தனித்துக் களம் கண்டதைப் போலவே இம்முறையும் திரிணமூல் காங்கிரசும், பாஜகவும் தனித்துக் களம் காண்கின்றன. அதேநேரத்தில், கடந்த 2 மக்களவைத் தேர்தல்களின்போது தனித்துக் களம் கண்ட காங்கிரஸ் இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கைகோத்துள்ளது.

இதுவரை இம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருப்பதாகத் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடத்தப்பட்ட 14 கருத்துக் கணிப்புகளில், 9-ல் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 4-ல் பாஜக முன்னிலையில் உள்ளது. நேற்று (ஏப்ரல் 14) வெளியான ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு இரண்டும் சம பலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 17 தொகுதிகளிலும், அதிகபட்சம் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக குறைந்தபட்சம் 10 தொகுதிகளிலும், அதிகபட்சம் 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி அதிகபட்சம் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் அனைத்தும் துல்லியமானவை என சொல்ல முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க முடிவுகள் மாறலாம்.

தேர்தலில் முன்னுரிமை பெறும் விஷயங்கள்: சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ள பொது சிவில் சட்டம், இந்து - முஸ்லிம் விவகாரம் ஆகியவை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். சந்தேஷ்காளியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடைபெற்று வரும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் ஆகியவற்றை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.

மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு வழங்க மறுப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை உறுதித் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 1.74 லட்சம் கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார்.

திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், அக்கட்சி பெறும் வெற்றி இண்டியா அணியின் வெற்றியாகவே பார்க்கப்படும் என்று கூறும் அரசியல் நோக்கர்கள், உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அந்த வகையில், தேசிய அளவிலான இண்டியா அணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சம பலத்துடன் மோதும் களமாக மேற்கு வங்க தேர்தல் களம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்