மக்களவை மகா யுத்தம்: பாஜகவின் ஒற்றை வியூகம்!

By வெ.சந்திரமோகன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளியலாளருமான பரகால பிரபாகர், மூத்த ஊடகவியலாளர் தீபக் ஷர்மாவுக்கு அளித்திருக்கும் பேட்டி, அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு உள்ளாகிவருகிறது.

இந்தத் தேர்தலில்பாஜக வெற்றி பெறுமா பெறாதா என்று அமைய வேண்டிய விவாதங்கள், ‘370 இடங்களில் பாஜக வெல்லுமா வெல்லாதா’ என்கிற அளவில் முன்னெடுக்கப்படுவதுதான் பாஜகவின் சாமர்த்தியம் எனச் சுட்டிக்காட்டும் பிரபாகர், அதேவேளையில் 220 அல்லது 230 இடங்களில் பாஜக வெல்வதே அதிகம் என்றும் கணித்திருக்கிறார்.

ஊழலற்ற கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருந்த பாஜக, தேர்தல் பத்திர விவகாரத்துக்குப் பின்னர் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஆம் ஆத்மி கட்சியைச் சீண்டியதால், மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அந்த வெற்றி மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குரியது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சத்திரிய சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, தங்கள் முன்னோர்கள் குறித்துஅவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு எதிராக அச்சமூகத்தினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

காங்கிரஸிலிருந்து வந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பதாக ஏற்கெனவே குஜராத் பாஜகவுக்குள்ளும் புகைச்சல்கள் கிளம்பியிருக்கின்றன. பாஜக அரசு எங்களை டெல்லிக்குள் விடவில்லை;பாஜகவினரை எங்கள் மாநிலத்தில் நுழைய விடமாட்டோம்என ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பைக் காட்டிவருகிறார்கள்.

மத அடிப்படையிலான வாதங்கள்: தங்களின் சாதனைகள் எனச் சொல்லிக்கொள்ளும் விஷயங்களை மட்டுமல்லாமல், அரசின் தோல்விகள் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விஷயங்களையும் தங்களுக்குச் சாதகமானவையாகவே முன்வைத்துப் பேசத் தொடங்கியிருக்கிறது பாஜக.

கூடவே,தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மத அடிப்படையிலான பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது. பாஜகவின் ராஜ்யவர்தன் ரத்தோர் முதல் பிரதமர் மோடி வரை ராமர் கோயில் திறப்பு விழாவைச் சுட்டிக்காட்டி வாக்கு கேட்பதும், அவ்விழாவுக்கு வராத காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சிகளை விமர்சித்துவருவதும் சர்ச்சையாகியிருக்கின்றன.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எஸ்டிபிஐ நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருப்பதை விமர்சித்திருக்கும் பாஜக, பயங்கரவாதிகளின் ஆதரவைக் காங்கிரஸ் பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவுதான் எஸ்டிபிஐ. சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ், எஸ்டிபிஐக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கதவைச் சாத்திக்கொண்டது. அதேவேளையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் - இரட்டை இலை சின்னத்திலேயே - திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ போட்டியிடும் நிலையில், அதை பாஜக பெரிதாக விமர்சிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீகின் சிந்தனை எனப் பிரதமர் மோடி விமர்சித்திருப்பது வருத்தமளிப்பதாக சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறது. எந்த அடிப்படையில் தனது விமர்சனத்தைப் பிரதமர் மோடி முன்வைத்திருக்கிறார் என்பதற்குப் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

பெரும்பாலும், இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது வைக்கும்போது அதற்கான பின்னணியைப் பாஜகவினர் விளக்குவதில்லை. ஆனால், ஊடகங்களில் அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதுடன் பரவலான விவாதங்களும் முன்னெடுக்கப்படும். அதுதான் இந்த முறையும் நடக்கிறது.

1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் தொடர்பாகக் காங்கிரஸைக் குற்றம்சாட்டியிருக்கும் பிரதமர் மோடி, தனது ஆட்சிக் காலத்தில் குருத்வாராக்களின் உணவுக் கூடங்களான லங்கர்களுக்குத் தேவையான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதையும் மறக்காமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்டை நாடுகளில் மத அடிப்படையிலான அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் மட்டுமல்லாமல், சீக்கியர்களும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பலனடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஒருபடி மேலே சென்று, தேசப் பிரிவினைக்குக் காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

பதிலடி வியூகங்கள்: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என இண்டியா கூட்டணித் தலைவர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டபோது தேர்தல் எதுவும் நடைபெறவில்லை; சட்டம் தன் கடமையைச் செய்கிறது; முதலமைச்சர் என்றால் கைதுசெய்யக் கூடாதா என்கிற வாதங்களைப் பாஜக முன்வைத்துவருகிறது.

அருணாசலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்குச் சீனா பெயர் சூட்டியிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், ‘சீனாவின் இடங்களுக்கு நாங்களும் அப்படிப் பெயர் சூட்டிக்கொள்ளலாமா?’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இன்னொரு புறம், பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 2020-2022 காலகட்டத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியா அடையாளம் கண்டு அவர்களுக்கு முடிவுகட்டியதாகப் பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’ வெளியிட்டிருக்கும் தகவலைப் பெருமிதத்துடன் பகிர்ந்திருக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பயங்கரவாதத்தைப் பாஜக துளியும் சகித்துக்கொள்ளாது என்று சூளுரைத்திருக்கிறார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தனது அரசு தலையிட்டதால்தான் மணிப்பூரின் நிலவரம் மேம்பட்டுவருவதாகப் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கடந்த 40 நாள்களாக மணிப்பூரில் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது உண்மைதான். எனினும், இதுவரை நடந்த கலவரங்களைத் தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் கைகட்டி நின்றதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் பிரதமர் மோடி புறந்தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் நடந்த பரப்புரையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறை நீக்கியதாக இங்கு வந்து பிரதமர் பேசுகிறார். அதை இங்கே வந்து ஏன் சொல்ல வேண்டும்?” என்று பேசியது பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. “இப்படிக் கேள்வி எழுப்புவது எல்லா மாநிலங்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்க விரும்பாத இத்தாலி மனநிலை” என அமித் ஷா பதிலளித்துள்ளார்.

தமது முதன்மைச் சாதனைகளாக ராமர் கோயில் திறப்பு விழா, காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறு நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம், உத்தராகண்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் பொது சிவில் சட்டம் என மத அடிப்படையிலான வெற்றிகளையே பிரதமர் மோடியும் பாஜகவினரும் முதன்மையாக முன்வைத்துவருகின்றனர். 400 இடங்களில் வெல்லப்போவதாகக் கூறிவரும் பாஜக,எதற்காக இந்த விஷயங்களைப் பிரதானமாக முன்னெடுக்கிறது என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்? - தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் மத அடிப்படையிலான பரப்புரையைப் பாஜக முன்னெடுப்பதாகவும், இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் அமைதி காப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. கூடவே, விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிவருகின்றன.

இது தொடர்பாக, டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம் நடத்திய நிலையில், “ஏதாவது குறைகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே இவர்களுக்கு என்ன வேலை?” என்று காட்டமாகக் கேட்கிறார்கள் பாஜக தலைவர்கள்.

ஹரியாணாவின் கைதல் தொகுதியில் பரப்புரை செய்வது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் தாக்கல் செய்த விண்ணப்பம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதுடன், ஆபாச வார்த்தைகளுடன் குறிப்பும் எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் - தங்கள் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

ஒருவேளை, பாஜக மீண்டும் வென்றுவிட்டால் என்னென்ன நடக்கும் எனப் பரகால பிரபாகர் முன்வைக்கும் ஆரூடங்கள்அதிர்ச்சியளிப்பவை. அவற்றில், “இதுவரை ஒலித்துவந்தவெறுப்புப் பேச்சுக்கள் இனி டெல்லி செங்கோட்டையில் இருந்துகூட ஒலிக்கும்” என்ற கருத்து மிக முக்கியமானது!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்